Wednesday 17 June 2015

அரசுப் பள்ளிகளில் அனைவருக்குமானக் கல்விமுறை




நம் நாட்டின் கல்விமுறை எளிய மக்களுக்காக  இருக்கிறதா? அல்லது? இருப்பவனுக்கு ஒரு கல்விமுறை, இல்லாதவனுக்கு ஒரு கல்விமுறையாக  சமத்துவமற்றுத்தான் இருக்க வேண்டுமா?   அரசிடம் மாதச்சம்பளத்தைப் பெறுபவன், தன் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில்  பணம் கட்டி படிக்க வைக்க, அரசுக்கு வரிக்கட்டும் ஏழை எளியவர்கள் கழிப்பிட வசதியற்ற, வகுப்பறைகள் கூட இல்லாத  கல்விக்கூடங்களில் படிக்கவேண்டுமா?

நம் தமிழகத்தில் 35 ஆயிரத்து 200 அரசு ஆரம்பப் பள்ளிகளும், 8,200 நடுநிலைப் பள்ளிகளும், 3,200 உயர் நிலைப் பள்ளிகளும், 4,536 மேல்நிலை பள்ளிகளுமாக,  மொத்தம் 51 ஆயிரத்து 136 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். இந்த கணக்குகள் ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது, அதற்கான வகுப்பறை வசதிகளும், கழிப்பறை வசதிகளும், குடிநீர், மற்றும் ஆய்வக வகதிகளையும் உருவாக்கித் தரவேண்டும். ஆனால், அவ்வாறு அரசு செய்கிறதா? என்பதும் கேள்விதான்.

இன்றைய மாணவர்களுக்காக, ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் காலணிகள் வழங்கப்படுகின்றன. இலவச பேருந்துப் பயணம். இலவசப் பாடப்புத்தகங்கள், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டண சலுகை, மடிக்கணிகள் வழங்குதல் என அரசு கல்விக்காக அதிகத் தொகையை செலவிட்டு வருகிறது. ஆனால், அடித்தட்டு மக்களின் குழந்தைகள் மட்டுமே, அரசுப் பள்ளியில் இணைந்து படிக்கின்றனர். இங்கே எல்லா தரப்புக் குழந்தைகளும் கல்வி கற்க வருவதில்லை? ஏன்? இந்தியக்  குழந்தைகள் என்றால் அனைவரும் சமம் தானே. அப்படியானால், கற்றுத்தரும் கல்வியும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். கல்வியின் தரத்தில் வேறுபாடுகள் வருவதற்கு, அரசின் அணுகுமுறையும் ஒரு காரணம் தானே.

பொருளாதாரத்தில் நிமிரத் துவங்கிய நடுத்தர மக்கள், தங்களின் குழந்தைகள் ஆங்கிலவழிக் கற்க வேண்டும் என விரும்பி, தனியார் கல்வி நிலையங்களை நாடுகின்றனர். ஆங்கிலம் படித்துவிட்டால், அறிவாளியாகிவிடும் என்கிற தவறான புரிதலை மக்களை நம்ப வைக்கப் பட்டுள்ளனர். ஆங்கிலம் மொழிதானே தவிர, அது அறிவல்ல  என்கிற அடிப்படை விடயங்கள் கூட புரியாமல் உள்ளனர். இந்த நிலை மாறவேண்டும். தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்கிற மனோபாவத்திற்கு மக்கள் வெகுவிரைவில் வந்துவிடுவர். 

இன்று அரசுப்பணிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பவர்களும், அரசுப்பணியிகளில் இருப்பவர்களும், அரசுப்பள்ளியிலோ, அரசு உதவிபெறும் பள்ளிகளிலோ கல்வி கற்றவர்கள். இன்று அரசுப் பணியாளர்கள். இவர்களைப் படிக்க வைத்த, இவர்களின் பெற்றோர்கள் அப்பாவி ஏழைகள், நடுத்தர மக்கள், உயர்குடியைச் சேர்ந்தவர்கள். அன்று அவல்களுக்கு படிக்க வசதியில்லை. இன்றைக்கு அரசுப்பள்ளிகளில் இருக்கும் வகுப்பறை வசதிகளைவிட, அன்றைக்கு மிகவும் பின்தங்கித்தான் இருந்தது.
ஆனாலும்,  இவர்கள் தாய்மொழிக் கல்வி கற்றவர்கள். அப்போது மொழிப்பாடமாக ஆங்கிலம் இருந்தது. ஆனால், இன்று இவர்களின் குழந்தைகள் கல்வி கற்கும் காலத்தில், ஆங்கிலம் முதன்மைப் பாடமானது. தாய்மொழி விருப்பப் பாடமானது. காரணம், இக்குழந்தைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள், அரசுப் பணியாளர்கள்.  கல்வி கற்றவர்கள். பணம் ஈட்டும் வல்லமை உடையவர்கள்.
நம்மையாளும் அரசு இரண்டுவிதக் கல்விக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் சூழல் உருவாகி விட்டது.இருப்பவனுக்கு தனியார் பள்ளியும், இல்லாதவனுக்கு அரசுப் பள்ளியென வேறுபாடுகள் காட்டிவிட்டனர். அரசுப்பள்ளிகள் என்றால், முகம்சுழித்து ஒதுங்கும் காலமாக உள்ளது. என்னதான் அரசு கோடிகோடியாகக் கல்விக்காகக் கொட்டினாலும், எல்லாத் தரப்பு மக்களின் குழந்தைகளும் படிக்குமிடமாக சமத்துவக் கல்விமுறை அமல்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல்,

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு உயர் அலுவலர்கள், அரசிடம் ஆதாயம் பெறுபவர்கள், இந்திய அரசின் நான்கு தூண்களை தாங்கிப் பிடிப்பதாக சொல்லும் அத்தனை மக்களின் குழந்தைகளையும், அரசுப் பள்ளியில் தான் சேர்க்கவேண்டும் என்கிற ஒரு உத்தரவு போதும். அரசுப் பள்ளிகளின் இன்றைய அவல நிலைப் மாறிவிடும். அதுமட்டுமல்லாமல் அலுவலகப் பணியாளராகவோ ஆசிரியராகவோ, பணிபுரியும் பள்ளிகளிலே, தங்களின் பிள்ளைகளையும் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்.

இன்றைய சமச்சீர் கல்வி முறையில் எந்த வழியில் கற்றிருந்தாலும், அரசுப் பள்ளியில் கற்றவனுக்கே அரசு வேலையில் முன்னுரிமை என்று அறிவித்தால் மட்டும் போதும். அரசுப் பள்ளிகளின் இன்றைய அவல நிலைப் மாறிவிடும்.

அரசு நடத்தும் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க விரும்பாதவன், அரசுப்பள்ளிகளில் தன் குழந்தைகளை கல்வி கற்க அனுப்பாதவன், அரசுப் பேருந்துகளில் பயணிக்க விரும்பாதவன், தன் பிள்ளைகளின் மேற்படிப்பு படிக்க அரசின் சலுகைகளையும் எதிர்பார்க்கக் கூடாது அல்லவா? அப்போது மட்டும் அரசின் கோட்டாவில் படிக்க முண்டியடிக்கிறானே ஏன்.? அரசின் வேலை வாய்ப்பை பயன்படுத்த முயற்சிக்கிறானே. அப்போது மட்டும் அரசின் சலுகைகள் தேவைப்படுகிறது.

அரசு கொடுக்கும் இலவச சீருடையை, ஆட்சியரின் பிள்ளையும், ஆண்டியின் பிள்ளையும் போட்டுக் கொண்டு, வகுப்பறையில் நுழைந்தால் போதும்,  அரசுப் பள்ளிகளின் இன்றைய அவல நிலைப் மாறிவிடும்.
அனைவருக்கும் ஒரேவிதமான கல்விமுறை, வேறுபாடற்ற வகுப்பறை, அனைவருக்கும் பொதுவானக் கழிப்பறை, பிரிவினையில்லா குடிநீர், அனைவருக்கும் இலவச சீருடை, இலவசப் பாடப்புத்தகம், ஒரே விதமான செருப்புகள் இந்த காட்சியை நினைத்துப் பார்த்தாலே, மெய்சிலிர்க்கும் அல்லவா?

இன்னும் பள்ளியின் தரம் மேம்பட வேண்டும் என்றால், இங்கு கற்றுத் தரப்புடும் கல்வி செய்முறையோடு, ஆய்வக வசதியும், நூலக வசதியும் உடையதாக இருக்கவேண்டும். இங்கே கற்பவர்களுக்கு அரசுவேலையில் முன்னுரிமை அளிக்கவேண்டும். அவர்களுக்கு சிறப்புச் சலுகைகளும் வழங்க வேண்டும்.
இன்னும் ஒருபடி மேலே போய், அனைத்து கல்வி நிலையங்களையும் அரசே ஏற்று நடத்தவேண்டும். பேருந்துகளும், வங்கிகளும் நாட்டுடமையாக்கப் பட்டதோ, அதோபோல், கல்விக் கடவுளை  ஊமையாக்கும் ஈனப்பிறவிகளை அடையாளம் கண்டு, இம்மக்களையும், அவர்களின் மொழியையும், பண்பாட்டுக் கலாச்சாரங்களையும் காப்பது நம்மையாளும் அரசின் கடமையல்லவா?  

இவைகளை எல்லாம் செய்யாத வரை, அரசுப் பள்ளிகளின் தரமும், கல்விமுறையும் இன்னும் இதை விட மோசமாகத்தான் இருக்கும். நன்றி.


முத்துப்பிள்ளை,
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு, ஆத்தூர். 624701,
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம். 91501 06069




No comments:

Post a Comment