Wednesday 29 July 2015

சித்தயோகியாருக்கு சில கேள்விகள்.. .. .. முத்துப்பிள்ளை.



கடந்த சில நாட்களாக பிரச்சனைகளின் ஊற்றுக்கேணியாக தாங்களும் இருந்து விட்டீர்கள். என்னைப் போன்ற சிலர், ம்க்கூம் பலர், கண்டும் காணாமலும், பதில் சொல்லத் தயங்கியும், போற்றிய நாங்களே தூற்றக் கூடாது என்பதற்காகவும், கவனத்தை வேறு திசையில் திருப்பியும், நம்மிடைய நட்புறவு கெடக்கூடாது என்கிற எண்ணமே தவிர வேறொன்றுமில்லை.

தாங்கள் பாரம்பர்ய ஜோதிடத்தைப் பற்றிய, உங்கள் பார்வையைக் கண்டேன். ஜோதிடப் பாடல்களிலும், உங்கள் புலமையைக் கண்டேன். சப்தகன்னியரைப் பற்றிய ஆன்மீகச் செய்தியினையும் கண்டேன். அது மட்டுமல்லாது, உங்களைப் பற்றியும், நீங்களே அறிந்து கொண்டதைப் பற்றியும் கண்டு கொண்டேன். உங்களை விமர்ச்சித்தால், நீங்கள் வணங்கும் குருநாதர், விமர்சிப்பவரை சிலமாதங்களிலே காணாமல் ஆக்கிவிடுவார் என்கிற கதையும் கண்டேன்.

நீங்கள் ஆங்கிலம் வழியாக ஜோதிடம் கற்றதாக சொல்லியுள்ளீர்கள். பிறகு எப்படி தமிழில் புத்தகம் எழுதுகிறீர்கள். தமிழில் மட்டும்தான் “கிறுக்கன்கள்” இருக்கிறார்கள் என்பதற்காகவா? இல்லை, இவர்களுக்கு, இன்னும் ஜோதிட அறிவு இல்லை, அதை போக்கவேண்டும் என்பதற்காகவா?

தமிழ்வழி ஜோதிடம் கற்றுக் கொள்ளாத நீங்கள், தமிழ்பாடல்களில் மட்டும் புலமை பெற்றுவிடுவீர்களா? புலமையும் உண்டே என்றால், எத்தனை பாடல்களுக்கு அசைபிரித்து தந்துள்ளீர்கள். புலமையில்லை என்றால், தமிழ்பாடல் வழியாக ஜோதிடம் கற்றுள்ளவர்களை, நீங்கள் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்.

ஒருவனுக்கு எப்படி போதிக்கப்பட்டுள்ளதோ, அதையொட்டித்தான் பயணப்படுவான். பாடல்களில் நுணுக்கங்கள் உள்ளதை உணர்ந்தவன், விதிகளை மட்டுமல்லாது, பாடலையும் மனனம் செய்து கொள்கிறான். வாய்ப்பு கிடைக்கும் போது, மேடையில் முழங்குகிறான். அவ்வளவுதான்.
நான் கால்களில் செருப்பணிந்தே நடந்து பழகியவன். கட்டாந்தரையில் காலூன கூசும். அவன் பிறந்ததில் இருந்தே செருப்பணியாமல் நடந்து பழகியவன். சித்திரை வெயில் கூட, மெத்தெனப்படும். அவ்வளவுதான்.
நீங்கள் “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” கேட்டு வளர்ந்தீர்கள். பாவம் விதியற்ற நாங்கள், “ஆராரோ, ஆரிராரோ” கேட்டு வளர்ந்தோம். நாங்கள் பிறந்ததில் இருந்து கட்டை சாயும் வரை பாட்டுக் கேட்டுக் கொண்டே சாவோம். நீங்கள் வேண்டுமானால், வயலின் வாசித்துக் கொள்ளுங்கள்.

பிருஹத் ஜாதகத்தில் பொருந்தாத சுலோகங்கள் உள்ளதாக கூறிய தாங்கள் ஒரு சுலோகத்தைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்கள். நீங்கள் வடமொழிப் பாண்டித்யம் பெற்றவரோ, என்றுகூட நினைத்தேன். காரணம், எனக்கு வடமொழி --- என்றாலே, வேண்டாம், அது வேறு கதை. ஆனால், அதே சுலோகத்திற்கு இன்னொரு நண்பர், உங்களின் விளக்கத்திற்கு மாற்றாக, உண்மை விளக்கத்தைக் கூறியதும், “பொசுக்” கென்று போய்விட்டது.

தமிழ்பாடல் தந்து விளக்கம் தந்தீர்கள். அதைப் படித்தபோது, உண்மையில் சொல்லுகிறேன், உங்கள் மேல் இருந்த மதிப்பு குறைந்தது. அதற்கான உண்மை விளக்கத்தை மதிப்புக்குரிய ஐயா. திரு. ஜோஸ்யம் ராமு அவர்கள் விளக்கினார்கள். இங்கேதான் கேள்வி எழுகிறது.

தாங்கள் தந்த விளக்கங்கள் சரியானது என்றால், ஏன்? திரு. பராசரி ஐய்யப்பசர்மா அவர்களுக்கும், திரு ஜோஸ்யம் ராமு அவர்களுக்கும் இத்தனை நாளாக மறுப்பு தராமல் இருந்தது ஏன்?

உங்களின் வயதுக்கும், அனுபவத்திற்கும் நிகராக வராத ஒருவருக்கு, நீங்கள் ஏன்? பதில் சொல்கிறீர்கள். ஒருவர் மாற்றி ஒருவராக பேக் ஐடியில் வசைமாறிக் கொள்ளும் பதிவுகளை, உங்களின் தரத்தைவிட்டு, அடுத்த குழுக்களில் பகிர்வு செய்கிறீர்களே ஏன்?

“ அடுத்தவன் தின்கிறான். அதனால நானும் தின்கிறேன் “ என்பீர்களா? 

உங்களை நீங்களே தரம் இறக்கிக் கொள்ளும் செயல்தானே இது?
என்னைப் போல நாத்திக வாடையில் இருந்து வந்தவனால் கூட, செரிக்க முடியாத, சப்தகன்னியரைப் பற்றிய பதிவும் படித்தேன். சப்தகன்னியரும் காலடியில் அமர, நீங்கள் என்ன? முக்கண் முதல்வனா? சூரனை வதம் செய்த, முக்கண்ணன் மகனா? அல்லது துணைப்போர் புரிந்த, முக்கண்ணன் அம்சம்பெற்றவனா?

நாடியில் உயர்வைக் கண்ட நீங்கள், பாரம்பரியத்தை விட்டு முற்றும் அகலாமல், அதற்குள்ளாகவே இருந்து கொண்டு, அதையே தரம் தாழ்த்தியும் பேசிக் கொள்கிறீர்கள். இலக்கினப்புள்ளியையும் தொடாமல், கோள்சாரத்தை மையமாக வைத்தும், திசைகளில் இருக்கும் கிரகங்களின் போக்கைக் கண்டும் பலன் கூறும் தாங்கள், உலக ஜோதிடத்தின் ஒப்பற்ற இந்தியக் கண்டுபிடிப்பான, பாரம்பரிய ஜோதிடத்தின் ஆணிவேரான தசா - புக்திகளைப் பற்றி,  “ தசா-புத்தி கணிதமும், பலன்களும் “  என்கிற நூலை எழுதியதன் காரணம் கூறுகிறீர்களா?

நீங்கள் பின்பற்றுவதாக சொல்லும் நாடி முறை, பாரம்பரியத்தின் பரிணாமமே தவிர வேறொன்றுமில்லை. நாடி விதிகளை தொகுத்தவரே, தமிழ்பாடல்களில் இருந்துதான், இம்முறை அறியப் பட்டது என்ற பிறகும், அதை தாம்தான் தமிழனுக்கு வெளிக்காட்டினேன் என்றாக சொல்வதும் வேடிக்கையாக உள்ளது. திரு. ஆர். ஜி. ராவ் அவர்கள், திரு. சத்தியநாராயணா அவர்கள், குரு. இராம்சுப்பு அவர்கள் என்ற நாடியின் முன்னோடிகளைவிட தாங்கள் எதுவும் பெரிதாக செய்துவிடவில்லை.

மூன்றுவரியில் பதிவு போட்டாலே, முன்னூறு கமெண்ட் வாங்கும் உங்களை, பக்கம் பக்கமாக வரிவரியாக, திட்டுவதாக நினைத்து, அனைத்து ஜோதிடர்களையும் கூனிக்குறுக வைத்த பேக் ஐடியை, உங்களின் “சிஷ்யக்கோடிகள்” முப்பது பேர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே? ஏன்?
இப்போதும் கூட, ஒரு ஜோதிடனை இகழ்வதற்கு, தாங்கள் எத்தனித்தபிறகும், நானும் கேள்விகள் கேட்கவில்லை என்றால், என்னை என் குருமுனி அகத்தியன் தண்டித்தே தீருவான். இதை விளம்பர யுக்தி என்று பிதற்றி விட மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். கேள்வியின் ஆழத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நான் அன்னைத் தமிழுக்கும், என் ஆசான் அகத்தியனுக்கும் மட்டுமே அடிபணிவேன்.

ஜோதிடத்தில் உச்சம் கண்ட தாங்கள், பலருக்கு வழிகாட்டியாக இருப்பீர்கள் என்றால், ஒரு தவறான முன்னுதாரணமாக, எல்லாத் தரப்பு மக்களின் கேலிப்பொருளாக “ஜோதிடத்தை” நிறுத்த தாங்களும் காரணமாக ஆகி விட்டீர்கள். இந்த நிலைக்கு வந்தபின்னும் பலரின் உள்ளக்குமுறல்களைதான் நானும் தெரிவித்தேன்.

தொண்டைக் குழி வரை வந்து விட்டது. பிறகென்ன? துப்பிவிட்டேன்.

Tuesday 28 July 2015

விதிகளும் விளக்கங்களும் ,.. . 5





இந்த மனிதகுலத்தில் எல்லோரும் ஒரேவிதமான செயல்பாடுகள் கொண்டவர்களாக இருக்கமுடியாது. இந்த நிலைதான் எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும். பிறகு ஏன் மனிதனைப் பற்றி மட்டும் இவ்வளவு விமர்சனங்கள் ஏற்படுகின்றன. காரணம், மனிதன் மட்டுமே சிந்திக்கிறான். வெவ்வேறு கோணங்களில் செயல்படுகிறான். தனக்கென்று மொழியையும், கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் வைத்துக் கொண்டு, தன்போக்கில் வாழ்கிறான். அதனால், அவனை இறைவனின் விருப்பப் படைப்பு என்று வேதங்கள் சொல்கின்றன.  இவ்வளவு உயரியப் படைப்பான மனிதன் எல்லா நிலைகளிலும் உன்னதமான நிலையில் அல்லவா? இருக்கவேண்டும். ஆனால்,   அப்படி இருப்பதில்லையே. நூறு சதவீதம் பூர்த்தியான மனநிலையில் எந்த மனிதனும் இருப்பதில்லை. மனக்குழப்பங்களும், சிந்தனை தடுமாற்றங்களும், புத்திப் பேதலிப்பும், மனிதனுக்குள் உள்ள குறைபாடுகளை சொல்லி மாளாது.  இதற்கு ஜோதிடம் கூறும் காரணம் தான் என்ன? அதையும் பார்ப்போம்.

தேய்பிறை மந்தனோடு சேர்ந்துமே வாடி நொந்து
தோய்ந்திட விரயம் வந்தோர் சுபகுரு பார்வை இன்றேல்
தூயமனத் திறம் இழந்து சொல்குழப்ப சிந்தையாலே
பேய்ப்பிடித்து அலைவர் போலப் பித்தராய்த் திரிவராமே!

இலக்கினத்திற்கு பனிரெண்டாமிடத்தில் அதாவது சயன வீட்டில் தேய்பிறை சந்திரனோடு, சனி கூட, சுபக்கிரகமான குரு அவர்களைக் காணாவிடில், ஜாதகன் பேய்பிசாசு பீடித்தவன் போல, பித்துப் பிடித்தவனாய் அலைவான். இன்னும் வரும்.

முத்துப்பிள்ளை. 91501 06069, 91506 65878

விதிகளும் விளக்கங்களும் .. . 6


இந்த பதிவு முந்தையயப் பதிவின் தொடர்ச்சிதான். மனக்குழப்பத்தால் ஏற்படும் பேதலிப்பைச் சுட்டிக்காட்டும் பாடல்தான்.
கூறப்பா செவ்வாய் ஏழில் குடிபுக ஆசான் ஏகி
சேரப்பா லக்கினத்தில் தெளிவிலா புத்தி என்றே
யாரப்பா உயிரில் மந்தன் ஏழினில் செவ்வாய் நிற்க
தேரப்பா மதிமயங்கித் திரிந்திடல் ஆகு மன்றோ
எந்த மனிதனுக்கு பாதிப்பைத் தரும் நிலையில்  இலக்கினமும், அதன் அதிபதியும் இருக்கக் கூடாது. காரணம், இவைகள் புனிதமானவை. அந்த மனிதனின் கர்மச் செயல்களின்படி, இறப்பு காலம்வரை வழிநடத்திச் செல்வதாகும். அதனால், இப்பாடலின் கருத்துப்படி, அறிவின் விழிப்பைப் தரும் கிரகமான குரு, இலக்கினத்தில் நிற்க, அவசரமும், மூர்க்கத்தனமும் கொண்ட செவ்வாய் ஏழில் நிற்க, இருவரும் பார்வை பரிவர்த்தனை செய்து கொண்டால், அறிவுக்கும், அவசரத்திற்கும் நடக்கும் போட்டியில், அறிவு திணறி செயல்படாமல், ஜாதகன் புத்தி பேதலிப்பார்.

அதேபோல் இலக்கினம் என்பது தலைப்பகுதியைக் குறிக்கும். அதனுள் இருக்கும் மூளையின் செயல்பாட்டிற்கும், இலக்கினமே காரணம். அந்த இடத்தில் மிகவும் மந்தநிலையில் சுழலும் கிரகமான சனியும்,  ஏழாமிடத்தினில் நல்லதோ, கெட்டதோ துரிதமாய் செயல்படும் செவ்வாயும் நின்று, பார்வை பரிவர்த்தனை செய்தால் புத்தி பேதலித்து வருத்தத்திற்கு ஆட்படுவார்.  
கார்க்கேயர் நாடி எனும் அற்புத ஜோதிட நூலை வாசிக்கும் பெரும்பேற்றைப் பெற்றேன். அதில் சில பாடல்கள் என்னை பிரமிக்கவைத்தன. அதில் ஒன்றிரண்டை உங்களோடு பகிர்ந்து வருகிறேன். நான் பெற்ற இன்பத்தை நீங்களும் அனுபவிக்க, உங்கள் பார்வைக்கு…….  
விதிகளும் விளக்கங்களும் .. . 7

நேசித்த ஏழின் கோட்போய்
     நிற்க ஆறெட்டீராறில்,
காசித்த பாவர் ஏழில்
     கலந்திட நோக்குங்காலே
யோசித்த ஸ்ரீ இல்லானாம்.

இலக்கினத்திற்கு ஏழிற்குடையக்கோள் 6,8,12 ல் அமர்ந்திருக்க, மனைவியைத்தரும் ஏழாமிடத்தில் பாவக்கோள்கள் இருக்க, ஜாதகனுக்கு, திருமணம் முடிந்து மனைவியாக யாரும் வரமாட்டாள். அவனுக்கு பெண் கிடைப்பது கடினம் என்கிறார்.  மேலும்,

    
உறைத்த ஏழுடையோன்வெள்ளி
தேசித்த பாவராசி
     தெகிட்டிடாக் காமியாமே.

இலக்கினத்திற்கு ஏழுக்குடையக் கோளும், சுக்கிரனும் கூடி பாவக்கோள்களின் வீட்டினில் அமர, ஜாதகன்  காமக்கடலில் நீந்திக்கொண்டே இருப்பான். கரையேறவே மாட்டான். விரித்த பாயை மடக்கிவைக்கவே மாட்டான். அடங்காத ஆசை கொண்டவன். என்கிறார். கார்க்கேயர் முனிவர்.

விதிகளும் விளக்கங்களும் .. . 8

பொன் உறையும் வேத புராணம் ஆகமம் தனக்கு
முன் உறையும் அத்தி முகவன் அது
பொன்னடியைத் தோத்தரிப்போம் இங்கு நாம்
சோதிடமாம் வீமகவி சாத்திரத்தை முற்றிலும் ஓத.


இந்து மதம் என்பது வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கிய வழிபாட்டுக்குரிய இராஜ கோபுரமாகும். இக் கோபுரத்தின் கருவறையே இறைவன் உறையுமிடமாகும். இந்த இராஜகோபுரம் ரிக் யஜூர், சாமம், அதர்வணம், எனும் நான்கு வேதங்களை அடித்தளமாக்கி, அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள புனிதகோபுரமாகும். இக்கோபுரத்தின் நுழைவு வாயிலாக, நான்கு வேதங்களை உள்ளடக்கிய ஞானமும், கர்மாவும் உள்ளது. அடித்தளமான வேதத்தின் மேல் பதினெட்டுப் புராணங்கள் மண்டபங்களாக அமைந்துள்ளன.

1.இலைங்கம் 2. காந்தம் 3. கூர்மம் 4. சைவம் 5. பிரமாண்டம் 6.பெடிகம் 7. மச்சியம் 8.மார்க்கண்டேயம் 9. வராகம் 10. வாமனம் 11.காகுடம் 12. காரதீபம் 13. பாகவதம் 14. வைணவம் 15.பதுரம் 16.தருமம் 17. ஆக்கினேயம் 18பிரமகைவர்த்தம் ஆகும்                                                           


இந்த பதினெட்டு மண்டபங்களில் சிவபுராண மண்டபங்கள் பத்தும் , வைணவ புராணமண்டபங்கள் ஆறும், பிரம்ம புராணமண்டபங்கள் ஒன்றும், அக்னி புராணமண்டபங்கள் ஒன்றுமாகக் கட்டி எழுப்பப்பட்டுள்ளன.
இந்த பதினெட்டு புராண மண்டபங்களும், உலகம் தோன்றியது முதல் இந்நாள் வரைக்கும் உருவான பஞ்சலட்சணங்களின் தத்துவத்தில் தான் உருவாகி உள்ளது.

1.பழங்கதை 2. பூர்வம் 3. உலகத்தோற்றம் 4.கேடுகளை அறிவித்தல் 5.மந்வத் அந்தரம் ஆகிய பஞ்சலட்சணத்தில் உருவாகி உள்ளன

ஆகமம்எனும் இரு பெரும் பிரகாரங்களை உள்ளடக்கியதாய் இருபெரும் சந்நிதிகளாய் மந்திரக்கலையும், தந்திரக்கலையும் உள்ளன. மேலும், வேதங்களின் அங்கங்களான 1. நிருத்தம் 2.சிக்ஷை 3.கற்பம் 4.வியாகரணம் 5.சந்தோபிசிதம் 6.சோதிடம் ஆகிய ஆறும் ஆதிபகவானை துதித்துப்போற்றும் அர்ச்சனை மந்திரங்களாகும்.  இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்துமதத் தத்துவத்தின் முழுமுதல் நாயகனான ஓங்கார வடிவுடையஆகமன்வினைதீர்க்கும் பெருமானின் பொன்னடியை வீமகவி எனும் ஜோதிட அர்ச்சனை மந்திரத்தால் முற்றிலும் ஓதுவோமே!

நேற்று (07.01.2015) அன்று காஞ்சிபுரம் கூடுவாஞ்சேரியில் இருந்து, தவத்திரு. ஆசிரியர் மாருதிதாசன் அவர்கள் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர்க்காக கம்பராமாயணப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அதை உங்களுடன் இலக்கியச்சுவையுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அறிந்து காப்பான்.

இப்பாடல் கம்ப இராமாயணம். பாலகாண்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.  இதன் அர்த்தம் என்னவென்றால்,,
1.ஆகாயம், 2.காற்று, 3.நெருப்பு, 4.நீர், 5.நிலம் என்கிற ஐம்பூதங்களில் ஒன்றான, காற்று தேவனால் மாருதி என்று அன்புடன் அழைக்கப்படும் அனுமன் பெற்றெடுக்கப்பட்டு, ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாயவெளி வழியாய் பறந்து, ஐம்பூதங்களில் ஒன்றான நீரைக் கடந்து, ஐம்பூதங்களில் ஒன்றான தென்னிலங்கை நிலத்தை,  இராமபிரானின் மனைவியான சீதையைக் காக்க, ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்து எரித்த, அந்த அனுமன், எம் செயல் இனிதே முடிய கருணையோடு காப்பானாக என்று பாடியுள்ளார். அதையே நானும் விளைகிறேன்.    

“ பொருந்திய ஏழின் கோளும்
புண்ணிய வாக்கின் கோளும்
நெருங்கிய பாபராக
நேமித்த இரண்டு பேரும்
இருந்திட ஏழில் தானே” 
இதுவும் ஒரு பழைய தமிழ் ஜோதிடப் பாடாகும்.
இலக்கினத்திற்கு இரண்டாமதியும், ஆறாமதியும் பாவரோடு கூடினாலும், அல்லது பாவர்களின் சாரம் பெற்று ஏழாமிடத்தினில் இருந்தாலும், இந்த அமைப்புடைய ஜாதகர்க்கு, “கட்டுக் கடங்காத காமம்” மிகுந்தவனாக இருப்பான்.
இந்த அமைப்பு ஏழில் மட்டுமல்ல, இரண்டில் இருந்தாலும், காமம் மிகுந்தவனாக இருப்பான்.   


முத்துப்பிள்ளை. 91501 06069, 91506 65878