Thursday 23 April 2015

சீந்தனை சிதறல்கள் 6





உலகம் எனும் வட்டக் குளத்துக்குள், உயிரினங்களை உலாவ விட்டிருப்பது போல, மனிதர்களாகிய நம்மையும் அலைய விட்டிருக்கிறான். இறையைப் பற்றிய ஞானத்தெளிவு வராதவரை, தூண்டில் புழுவிற்கு ஆசைப்படும், துள்ளும் மீன்கள்தான்.
நம்மை படைத்ததின் நோக்கம் தெரியாமலே, வாழ்ந்து முடித்து விடுகிறோம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மூடத்தனமான எண்ணங்களும், கருத்துக்களும், சிந்தனைகளும் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தூரவிரட்டப்படும். மொழியறிவு சிறக்க வேண்டுமானால், வாசிப்பைக்  கட்டாயம் செய்யவேண்டும்.     

இன்றிருக்கும் காலகட்டத்தில் குடும்ப பொருளாதாரத்தையும், வாழ்க்கைப் பாவனைகளையும் மாற்றிக் கொண்டாலே ஜெயித்துவிடலாம் என்கிற மனப்போக்கு நம்மிடையே உள்ளது.

எப்போது எல்லாம் இவைகளில் சிக்கல் வரூகிறோ, அப்போதெல்லாம் தோற்றுப்போவது குடும்ப வாழ்வுதான்.

“ஓடினால்தான் ஆறு, தேங்கினால் குட்டை” அதுபோல, நாம் வாழ்க்கைப் பயணத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஓடிச்சேர வேண்டிய தூரத்தை நாமே நிர்ணயம் செய்து கொள்ள முடியாது.

எத்தனை அணைகள்கட்டித் தடுத்தாலும், ஆற்றுக்குத் தடைகள் புதிதல்ல. உடைத்தெறிந்து பொங்கும் புனலாய் கிளம்பும். அதேபோலத்தான் வாழ்க்கையும்…… 

##################################################################

இந்த உலகம் நவநாகரீகமாக மாறிக் கொண்டிருக்கிறது. மண்ணைக் கிண்டியவனிடம் இருந்துதான் உலகியல் மாற்றமே உருவானது. அதனால்,   கற்றுத் தேர்ந்து கயமைத்தனம் செய்பவனை விட, கல்லாதவனே சமூகப்பொறுப்பு மிக்கவன்.

##################################################################

எவ்வளவோ பாடங்களை காலம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. புரிந்தவன் அடுத்தடுத்த பிரிவுகளில் தேர்ந்தவனாகிறான். புரியாதவன் தேங்கிவிடுகிறான். புரிந்தும், புரியாமல் இருக்கும் “இரண்டும் கெட்டான்கள்”, அந்த காலத்திற்கே பாடம் நடத்துவார்கள்.


முத்துப்பிள்ளை 91501 06069, 91506 65878

சிந்தணை சிதறல்கள் 10





நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவோ, நல்ல விடயங்களும், கெட்ட விடயங்களும் நடந்துதான் வருகிறது. நமக்கு நல்ல நல்ல  நிகழ்ச்சிகள் நடக்கவேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் நாம் விரும்பியோ, விரும்பாமலோ நடப்பதை ஏற்றுத்தான்  ஆகவேண்டியிருக்கிறது. நடந்து முடிந்த நல்லவிடயங்களை நினைகூர்ந்து பார்க்கும் போது ஏற்படும், குதூகல மனம், நமக்குள் நடந்த தீய நிகழ்வினை நினைத்துப் பார்க்கும் போது, தன்னையறியாமலே வெறி உணர்வு, “ஜிவ்”வென்று உச்சந்தலையில் ஏறி நிற்கும். 

அதனால், கோபவெறியை நிகழ்வு நடக்கும்போதே, அடக்கிப் பழகிக் கொண்டீர்களானால், இது போன்ற நினைவு கூர்ந்து பார்க்கும் காலத்தில், எளிதாக அதில் இருந்து விடுபட்டு விடுவீர்கள். மனிதனின் முதல் எதிரியே கோபம்தான். அது அடக்கப்பட வேண்டிய உணர்வு ஆகும்.

################################
அறுபது வருடப் பெயர்களில் ஒன்றில் கூட தமிழ் இல்லை. மாதங்கள் பன்னிரண்டில் ஒன்றில் கூட, தமிழ் இல்லை. அயனம் இரண்டில், தமிழ் இல்லை. திதி பதினைந்தில் ஒன்றில் கூட தமிழ் இல்லை. இராசி பனிரெண்டில் ஒன்றில்கூட தமிழ் இல்லை. கிரகங்கள் ஒன்பதில் ஒன்றில் கூட தமிழ் இல்லை. உபக்கிரகம் ஐந்தில் ஒன்றில்கூட தமிழ் இல்லை.பஞ்சாங்கம் என்கிற ஐந்தின் பெயரிலும் தமிழ் இல்லை. நட்சத்திரம் இருபத்தி ஏழில் ஒன்றின் பெயர்கூட தமிழ் இல்லை. கணம் மூன்றில் தமிழ் இல்லை. குணம் மூன்றின் பெயரிலும் தமிழ் இல்லை. யோகம் மூன்றின் பெயரிலும் தமிழ் இல்லை. தாரபலப் பெயரிலும்  தமிழ் இல்லை.

ஆனாலும், தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுகிறோம்.  
################################
நம் கண்முன்னே எத்தனையோ நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சில நிகழ்வுகள் மனதைப் பாதிக்கின்றன. அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றி விடுகின்றன. பல நிகழ்வுகள் பாதிப்பதில்லை என்றாலும் திசைமாற்றம் ஏற்படவில்லை. ஆனால்,    வினாடி நேர அதிர்வுகளைத் தந்துவிட முடியும். அதனால்தான், மனமெனும் மாயக்குதிரையை லாயத்தில் அடைத்து அதன் கதவை பூட்டித்திறக்கும் சாவியை பத்திரப் படுத்தி வைக்கவேண்டும்.  நமக்கு தேவைப்படும் போது திறந்து பூட்டி, மாயக்குதிரைக்கு கடிவாளமிட வேண்டும். இதை பயிற்சிக்குப் பழக்கப்படுத்த முயலவேண்டும்.

மனமாயை மாயை இம்மாயை மயக்கம்
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனை ஆய்ந்து இருப்பது தத்துவந் தானே திருமந்திரம். 2956.
################################
பஞ்சமுக விளக்கு சுடர்விட்டு எரிய, திரியை போதுமான அளவுக்குத் தூண்ட ஒரு கோல் வேண்டும். ஆனால், விளக்கின் திரியை உள்ளிழுத்து, சுடரொளியை அணைக்கும் வேலையை அந்த கோல் செய்யலாமா?

அறிவு தூண்டப்படத்தான் வேண்டும். ஆனால், தூண்டிய அறிவை எவரும் சீண்டிப் பார்க்கக் கூடாது. குறைவாய் இருப்பது நிறைவாய் இருக்காது.
################################
################################
இன்று ஒரு தகவலை அறிவோம்.

இந்த பிரபஞ்சத்தை புயலாய் வீசித் தாக்குவது போலவும், தென்றலாய் தழுவது போலவும், நம் வாழ்க்கையை “ஏதோவொன்று” இயக்குவதை உணர்கிறோம். இந்த சக்திக்கு இயங்குவதற்கான “மூலம்” தந்த சக்தி எது?  இந்த கேள்வியை மேலோட்டமாகப் பார்த்து விட்டு, கடவுள், சிவன், பெருமாள், ஏகஇறைவன், பரமதந்தை, பரப்பிரம்மம் இதுபோன்ற பதில்களைச் சொல்லி விடலாம். ஆனால், பதிலுக்கான விடைகளைத் தேடத் துவங்கி, பதில் கிடைத்தால், “மெளனி” ஆக மாறிவிடுவீர்கள். காரணம், உங்கள் முன் ஞானத்தின் படிக்கட்டுகள் தெரியத் துவங்கும்.  


முத்துப்பிள்ளை. 91501 06069, 91506 65878.

சிந்தனை சிதறல்கள் 9





நாம் எல்லா நிலைகளிலும் ஒரே நிலையாய் செயல்பட்டு விடமுடியாது. அப்படி செயல்பட வேண்டும் என்று நினைத்தாலும் நடக்காது. அறிவால் செய்துவிடும் காரியத்தை, மனம் ஏற்றுக் கொள்ளாது. அதேபோல், மனம் செய்ய விரும்பும் காரியத்தை அறிவால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒன்று விரும்பினால், மற்றொன்று விரும்பாது.

தண்ணீரில் கலந்த எண்ணெயைப் போல, கலக்காமலே இருக்கும். ஆனால், ஒரு நிலையைக் கடந்தவர்களுக்கு, இப்பிரச்சனை நிகழ வாய்ப்பில்லை. அவர்கள் அறிவையும், மனதையுமே ஒன்றாக்கிக் கொள்வார்கள். அதுதான் விருப்பு, வெறுப்பு அற்ற நிலை. துறக்கும் மனோபாவத்தின் அடிப்படை நிலையாகும்.
##############################
ஒவ்வொருவருக்கும் கடுமையான கால கட்டம் என்று ஒன்று இருக்கும். அது எப்போது வரும், எப்படி வரும் என்று தீர்மானித்தும் சொல்லிவிடமுடியாது. நெருங்கியவர்களே விமர்சித்து விடும்போது, எரிச்சல் வரத்தான் செய்கிறது. மற்றவர்களுக்கு எரிச்சல் தருவதுபோல, நடந்து கொள்வது அவர்களின் இயல்பாகக் கூட இருக்கலாம். பொதுவில் வரும்போது, தன்னியல்பை மாற்றிக் கொள்ள முயலலாமே.

###############################
நாம் முன்னேற்றத்தின் உச்சத்தை அடைய வேண்டுமானால், பல நல்ல இதயங்களையும் சாகடித்துதான் ஆகவேண்டும். அதனால் உருவாகும் சஞ்சலத்தின் ஆணிவேரை அறுத்து எறியவும் முடியாது. இந்த இடத்தில்தான் சாமானியமானவன் தோற்றுப்போகிறான். வென்றவன் சாதனை நாயகன் ஆகிறான்.
நீங்கள் வெற்றியாளனா? தோல்வியாளனா?

###############################
தன்னிலை மறந்தவன் பிறர் சொல்வதை மதிப்பதில்லை. அது அவர்களின் குறைபாடு. அதேபோல சுயசிந்தனையாளனோ பிறர் சொல்வதைக் கேட்கப் போவதில்லை. இது அவனின் நிலைப்பாடு.

ஒருவன் அறியாமல் இருக்கிறான். மற்றவன் அறிந்ததால் புரிந்து இருக்கிறான். அவனுக்குப் புத்தியில் குழப்பம். இவனுக்கு புத்தியில் கலக்கமில்லை.

அதனால் தன்னிலை மறந்தவனுக்கும், சுயசிந்தனையாளனுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்கப் போவதில்லை
##############################
இந்த பூவுலகம் பல நட்டமரங்களைக் கொண்டுள்ளது. அவை நடமாடும். ஆனால் பூப்பதுமில்லை, காய்ப்பதுமில்லை, ஏன் மற்றவர்களுக்கு நிழல் தராமல் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நெடுஞ்சாண் கிடையாக கிடந்தாலும் விறகுக்கும் ஆகாது. ஊன் உடம்பை ஆலயமாக்காமல், பொதி சுமக்கும் கழுதையாய் ஆக்கிக் கொண்டுவிடும்.

இந்தநிலை மாற எந்த நிலை வேண்டும். இது அறிவின் தேக்கமா? நம் அறிவின் பார்வை வேறொரு கோணத்தில் திரும்பியதும் காரணமா



முத்துப்பிள்ளை, 91501 06069, 91506 65878

சிந்தனை சிதறல்கள் 8






நாம் எப்போதும் மறப்பதற்குப் பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும். இது அவ்வளவு ஒன்றும் சுலபமான விடயமல்ல. எதையும் எளிதாய் எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டால், ஒருவேளை சித்திக்கலாம். ஆனால், அந்த காட்சியையோ, சூழலையோ, ஒருவரால் பாதிக்கப் பட்டால் அந்த நபரையோ காணும் போது, எண்ணப்பறவை சிறகடித்து பின்னோக்கித்தான் பார்க்கச் சொல்லும். அப்போது மனக்குதிரையின், “லகானை” கையாள்வதைப் பொறுத்தே, மனப் பதட்டத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும்.
##################################################################
எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று நினைத்து, ஒரு செயலை செய்தோம் என்றால், அந்த செயலுக்கு உண்டான பலன் கிடைப்பதில்லையே ஏன்? வலிய. வலிய சென்று, கூவிக் கூவி அழைப்பதாலா? அதனால்தான் உதவி செய்யும் மனோபாவமும், ஈகைக் குணங்களும் இல்லாமலே போய் விட்டனவோ? ஏணி உயரமாக இருக்கலாம். உங்களுக்கு ஏறுவதற்கு தெம்பும் இருக்கலாம். ஆனால், அந்த ஏணிக்கு படிக்கட்டுகளும், உங்கள் தெம்பிற்கு ஊட்டச்சத்தும், வேறு எங்கோ இருந்துதான் கிடைக்கும்.

பத்து அடி தூரம் தாண்டுவதற்கு செலவிடும் சக்தியை, பதினொரு அடி தூரம் தாண்டுவதற்கும் பயன்படுத்த முடியாது. உங்களால் எதுவும் தீர்மானிக்கப்படாதவரை, ஒரு செயலின், “கர்த்தாவாக” இருக்கமுடியாது. அபோதுதான் நீங்கள் பதட்டப்படாமல் இருக்கலாம்.
##################################################################
நெற்கதிரை களத்து மேட்டில் அடித்து தூற்றி, கருக்காவை காற்றில் பறக்கவிட்டு, பட்டறையில் குவித்து காயவைத்த காலம் மாறிப்போய்விட்டது. இன்று களத்து மேடு காலியாக உள்ளது. அதே போல,

மழைநீர் மேலாண்மையை அரசாங்கம் சீர்படுத்தவில்லை. நதிநீரும் பற்றாக்குறை. முல்லைப் பெரியாறு ஒருபுறம், காவிரி மறுபுறம். மேகதாதுவில் தொடங்கி, பாலாறு வரைக்கும் பிரச்சனையோ பிரச்சனை.  அதனால, களத்து மேட்டில் முறம்பிடித்து ஏழைகளுக்கு அள்ளிப் போட்ட, “சம்சாரிகளும்” இல்லாமலே போய் விட்டனர். இன்றுபசியோ பசி. அப்படி வறுமையை விரட்டியடித்த விவசாயி, ஒட்டிய வயிறுடன் ரேஷன் கடை வாசலில் இலவச அரிசி வாங்க நிற்கிறான். அவன் விளைவித்த பொருளுக்கு, அவனால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. அவன் உழைப்போடு எதிர்காலத்தையும் இழந்து கொண்டு இருக்கிறான்.

மீன்பிடிக்கப் போனா இலங்கைக்காரன் சுடுறான். கொல்றான். வலைகள, படகுகள சேதப்படுத்துறான். வெறகு வெட்டப்போனா ஆந்திரக்காரன் சுட்டுக் கொல்றான்.

ஒலகத்தையே ஆண்ட இனம், உலகத்திலே மூத்த மொழின்னு சொன்னீகளேடா பாவிகளா?  எங்க போனாலும் கொல்றாங்களேடா? இப்ப எங்க போனீக. திருட்டு…………..?????
எத்தனை வரங்களைப் பெற்று இப்புவியில் வாழ்ந்து வந்தாலும், அது யாவும் ஒரு பெண்ணின் சாபத்திற்கு முன் எடுபடமுடியாமல் போய்விடும். கன்னிப்பெண்ணின் கண்ணீர், கூரிய வாள்முனையை விட வலிமையானது. அவளின் களங்கமற்ற கண்ணீர், இரும்புக் கோட்டையையே தகர்த்து விடும். பெண்மையை போற்றுங்கள்.

###################################################################

முத்துப்பிள்ளை, 91501 06069, 91506 65878

சிந்தனை சிதறல் 7



எவ்வளவோ பாடங்களை காலம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. புரிந்தவன் அடுத்தடுத்த பிரிவுகளில் தேர்ந்தவனாகிறான். புரியாதவன் தேங்கிவிடுகிறான். புரிந்தும், புரியாமல் இருக்கும் “இரண்டும் கெட்டான்கள்”, அந்த காலத்திற்கே பாடம் நடத்துவார்கள்.

பூவுலகில் வாழும் ஒவ்வொரு உயிரும், தன்னுயிரை மற்றொரு உயிரிகளிடமிருந்து, தற்காத்துக் கொள்வதற்காகவே தன்னுடலை வடிவமைத்துக் கொண்டிருக்கும்.

சிந்திக்கத் தெரிந்த மனிதமிருகம்கூட, மறைந்திருந்து வேட்டை ஆடுவதற்காகவே சொல்லும் குறியீட்டுச் சொல்தான்,  “நிமிர்ந்து நில்”
#########################################################################
எங்கேயும் யாரும் அதிகம் சிந்திப்பதையே விரும்புவதில்லை. நீங்கள் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களே.   கொடுக்கத் தகுதியுள்ள நீங்கள் யாசகம் பெற்று செல்லவும் முதல் ஆளாக நிற்கிறீர்கள்.

வானில் நடக்கும் அதிசய நிகழ்வுகளையும், கோள்களின் நகர்வுகளையும் வெறுங்கண்ணால் கண்டே, இன்றைய ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சியோடு நம் பெரியவர்கள் நமக்கு அருளினர். இதில் எந்தவகையான கணக்கீடுகளை எடுத்துக் கொண்டாலும், அதன் அடிப்படை நுட்பம் முன்னோர்கள் வகுத்து தந்தவையே!
##################################################################
காற்று நிரப்பிய பந்தை கடலுக்குள் அழுத்தி வைத்திருந்தாலும், அது நழுவி பெரும்விசையுடன் கடல்நீருக்கு மேலே வருவதைப்போல, நீங்கள் என்கெங்கு எல்லாம் அழுத்தப் படுகிறீர்களோ, அங்கெல்லாம் “வீறு கொண்டு” எழுங்கள். அழுத்தியவனே அதிர வேண்டும்.

உங்களின் எண்ணங்களுக்கு வலிமையும், உழைப்புக்கு மதிப்பும் அதிகமாகவே கிடைக்கும்.
##################################################################

தனித்தனியே இயங்கிக் கொண்டிருக்கும் பலரில் ஒருவர், மற்றவர்மேல் ஏதிர்வினை புரியாமல் இருந்துவிட்டால், மற்றவரும் எதிர்வினை புரிவதில்லை. மாறாக, வினைபுரிந்து விட்டால், இவரின் ஓட்டத்திலும் மாறுதல் ஏற்பட்டு எதிர்வினைக்கு தயாராகி விடுவார். அதன்பின் பஞ்சபூத மாற்றங்கள் உடலில் அதிகம் ஏற்படுகிறது.
ஒரு நதி சீறிப்பாயும் இடங்களைத் தவிர்த்து, அது இளப்பமாக, அமைதியாக அரிப்புத்தன்மை குறைவாகவும், வேகம் மட்டுப்பட்டு இருக்கிறதோ அங்கே அதன்போக்கு அறிந்து, அணைபோட வேண்டும்.
##################################################################

முத்துப்பிள்ளை 91501 06069, 91506 65878