Thursday 23 April 2015

சிந்தணை சிதறல்கள் 10





நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவோ, நல்ல விடயங்களும், கெட்ட விடயங்களும் நடந்துதான் வருகிறது. நமக்கு நல்ல நல்ல  நிகழ்ச்சிகள் நடக்கவேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் நாம் விரும்பியோ, விரும்பாமலோ நடப்பதை ஏற்றுத்தான்  ஆகவேண்டியிருக்கிறது. நடந்து முடிந்த நல்லவிடயங்களை நினைகூர்ந்து பார்க்கும் போது ஏற்படும், குதூகல மனம், நமக்குள் நடந்த தீய நிகழ்வினை நினைத்துப் பார்க்கும் போது, தன்னையறியாமலே வெறி உணர்வு, “ஜிவ்”வென்று உச்சந்தலையில் ஏறி நிற்கும். 

அதனால், கோபவெறியை நிகழ்வு நடக்கும்போதே, அடக்கிப் பழகிக் கொண்டீர்களானால், இது போன்ற நினைவு கூர்ந்து பார்க்கும் காலத்தில், எளிதாக அதில் இருந்து விடுபட்டு விடுவீர்கள். மனிதனின் முதல் எதிரியே கோபம்தான். அது அடக்கப்பட வேண்டிய உணர்வு ஆகும்.

################################
அறுபது வருடப் பெயர்களில் ஒன்றில் கூட தமிழ் இல்லை. மாதங்கள் பன்னிரண்டில் ஒன்றில் கூட, தமிழ் இல்லை. அயனம் இரண்டில், தமிழ் இல்லை. திதி பதினைந்தில் ஒன்றில் கூட தமிழ் இல்லை. இராசி பனிரெண்டில் ஒன்றில்கூட தமிழ் இல்லை. கிரகங்கள் ஒன்பதில் ஒன்றில் கூட தமிழ் இல்லை. உபக்கிரகம் ஐந்தில் ஒன்றில்கூட தமிழ் இல்லை.பஞ்சாங்கம் என்கிற ஐந்தின் பெயரிலும் தமிழ் இல்லை. நட்சத்திரம் இருபத்தி ஏழில் ஒன்றின் பெயர்கூட தமிழ் இல்லை. கணம் மூன்றில் தமிழ் இல்லை. குணம் மூன்றின் பெயரிலும் தமிழ் இல்லை. யோகம் மூன்றின் பெயரிலும் தமிழ் இல்லை. தாரபலப் பெயரிலும்  தமிழ் இல்லை.

ஆனாலும், தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுகிறோம்.  
################################
நம் கண்முன்னே எத்தனையோ நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சில நிகழ்வுகள் மனதைப் பாதிக்கின்றன. அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றி விடுகின்றன. பல நிகழ்வுகள் பாதிப்பதில்லை என்றாலும் திசைமாற்றம் ஏற்படவில்லை. ஆனால்,    வினாடி நேர அதிர்வுகளைத் தந்துவிட முடியும். அதனால்தான், மனமெனும் மாயக்குதிரையை லாயத்தில் அடைத்து அதன் கதவை பூட்டித்திறக்கும் சாவியை பத்திரப் படுத்தி வைக்கவேண்டும்.  நமக்கு தேவைப்படும் போது திறந்து பூட்டி, மாயக்குதிரைக்கு கடிவாளமிட வேண்டும். இதை பயிற்சிக்குப் பழக்கப்படுத்த முயலவேண்டும்.

மனமாயை மாயை இம்மாயை மயக்கம்
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனை ஆய்ந்து இருப்பது தத்துவந் தானே திருமந்திரம். 2956.
################################
பஞ்சமுக விளக்கு சுடர்விட்டு எரிய, திரியை போதுமான அளவுக்குத் தூண்ட ஒரு கோல் வேண்டும். ஆனால், விளக்கின் திரியை உள்ளிழுத்து, சுடரொளியை அணைக்கும் வேலையை அந்த கோல் செய்யலாமா?

அறிவு தூண்டப்படத்தான் வேண்டும். ஆனால், தூண்டிய அறிவை எவரும் சீண்டிப் பார்க்கக் கூடாது. குறைவாய் இருப்பது நிறைவாய் இருக்காது.
################################
################################
இன்று ஒரு தகவலை அறிவோம்.

இந்த பிரபஞ்சத்தை புயலாய் வீசித் தாக்குவது போலவும், தென்றலாய் தழுவது போலவும், நம் வாழ்க்கையை “ஏதோவொன்று” இயக்குவதை உணர்கிறோம். இந்த சக்திக்கு இயங்குவதற்கான “மூலம்” தந்த சக்தி எது?  இந்த கேள்வியை மேலோட்டமாகப் பார்த்து விட்டு, கடவுள், சிவன், பெருமாள், ஏகஇறைவன், பரமதந்தை, பரப்பிரம்மம் இதுபோன்ற பதில்களைச் சொல்லி விடலாம். ஆனால், பதிலுக்கான விடைகளைத் தேடத் துவங்கி, பதில் கிடைத்தால், “மெளனி” ஆக மாறிவிடுவீர்கள். காரணம், உங்கள் முன் ஞானத்தின் படிக்கட்டுகள் தெரியத் துவங்கும்.  


முத்துப்பிள்ளை. 91501 06069, 91506 65878.

No comments:

Post a Comment