Friday 29 May 2015

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்...8





இன்றைய காலச்சூழலில் பிறந்த குழந்தையை அதிக கண்காணிப்புடன் வளர்க்கப்படுகிறது. குழந்தை பால் குடிப்பதில் இருந்து, கைகால்களை அசைப்பதில் இருந்தும், மூன்று மாதத்தில் குப்புற புரள்வதையும், ஐந்து மாதத்தில் தவழ்வதையும், எட்டு மாதத்தில் எட்டு எடுத்து நடப்பது வரைக்கும் கண்காணிக்கப்படுகிறது. இதில் ஏதேனும் குறைபாடுகள் தென்பட்டால், அதற்கான ஆலோசனைகள் பெறுவதில் முயற்சி செய்கின்றோம். தங்களுடைய குழந்தை வளர்ப்பில் அதீத கவனம் செலுத்தும் நாம், பல்லாயிரக்கணக்கான வருடங்கள் தவயோகிகளும், சித்தர்களும் மேன்மைபடுத்தி வந்த ஜோதிடத்தை, இன்னும் செம்மைப்படுத்தி நம் சந்ததிகளுக்கு தர மறுக்கிறோமே ஏன்? இதில் சிலர் புது முயற்சிகளை முன்னெடுத்து செல்லத் துணிந்தால், “அதெல்லாம் முடியாது, இதெல்லாம் முடியாது, நீ மக்களை ஏமாற்றுகிறாய். உனக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்” என்றால், “ நீயும் திங்க மாட்டீங்கற, அடுத்தவனையும் திங்க விடமாட்டீங்கற, சுய அறிவில்லாம அடுத்தவன் எழுதினத உன்பேர்ல போட்டுக்கிற, சுயமா சிந்திக்கிறவனையும் திட்டுற, சீக்கிரமா செத்துப் போவன்னு சாபம் வேற விடுற, ” ஆம்.. முகநூல் உறவுகளே! புதுப்புது வழிமுறைகள் ஏராளம் உள்ளன. பல்வேறு வழிகளில் ஏதோவொன்றை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள நுட்பங்களை வெளிக்கொணர முயல்வோம்.
  
சுமார் 2007 ம் வருடம். நண்பர் ஜோதிவேலின் மூலமாக நண்பர் திரு ஜெயவேல் அறிமுகமானார். அவர் நூறுகட்டுரைகளுக்கு மேலாக, வார, மாத ஜோதிட இதழ்களில் எழுதி வந்துள்ளார். எனக்கு பல ஜோதிட நூல்களை அறிமுகம் செய்தவர். என் எழுத்துக்களை அதிகம் படித்தவர். ஜோதிடப் பேச்சுக்களை அருகில் இருந்து கேட்டவர். இவர் மூலமாக முருகன் என்கிற நண்பர் அறிமுகமானார். அவரும் துருவ கணிதமில்லாமல் தாய், தந்தை, சகோதர வர்க்கம் சொல்ல முயற்சி செய்து, வெற்றியும் கண்டவர். அவராலும் 70%, 75% சதவீதம் சொல்லமுடியும். நண்பர் திரு ஜெயவேல் அவர்கள் எங்கள் மூவரையும் இதழ்களில் கட்டுரைகள் எழுதத் தூண்டுவார். ஆனால், நாங்கள் மறுப்போம். பிடிவாதமாக நான் உள்பட ஜோதிவேல், முருகன் ஆகியோரிடம் “ நானே எழுதுகிறேன். நீங்கள் எழுதினால் என்ன?” என்பார். அவரின் தொல்லை தாங்காமல் 2010ல் எழுதத் துவங்கினேன். அந்த எழுத்துப் பயணம் இன்று வரை தொடர்கிறது. நன்றி ஜெயவேல். நன்றி … முகநூல் உறவுகளே!!!

தொடர்புக்கு…. 9751822129  8754873378

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்…9





2010 மே மாதம் என் முதல் கட்டுரை ஏழில் சனியிருக்கும் ஜாதகங்களைப் பற்றிய விரிவான கட்டுரையை “குருவருள் ஜோதிடம்” என்கிற மாத இதழுக்கு அனுப்பினேன்.  அக்கட்டுரையைப் படித்த ஆசிரியரும், வெளியிடுபவருமான பெரு மதிப்புக்குரிய திரு. சித்தரடிமை ஸ்ரீசி. இராஜீ அவர்களிடமிருந்து போன் வந்தது. அந்த கட்டுரையைப் பற்றி சிலாகித்துப் பேசினார். வரும் ஜீன் மாதமே வெளியிடுவதாக கூறினார். அப்போதெல்லாம் ஏனோதானோவென்றுதான் எழுதிக் கொண்டதற்கே, எனது ஆசிரியர் பாராட்டுகிறாரே என்று அதன் பிறகு ஒவ்வொரு கட்டுரையும் மிகக் கவனமாக மாற்றி மாற்றி எழுதி அனுப்பினேன். குருவருள் ஜோதிடம், திருவருள் ஜோதிடம் என்கிற இரண்டு இதழ்களிலும், “ முத்துப்பிள்ளை “ என்கிறப் பெயரிலே எழுதிவந்தேன். ஒரு நிரந்தரக் கட்டுரையாளன் என்கிற முத்திரைக் குத்தப்பட்டது. அங்கே,” ஒளியும், இருளும்,” “ மந்திரமும் … கோலமும்….”,” மனிதனின் மரணநாள் மர்மங்கள்” வருடம் முழுதும் வரும் தொடர்கட்டுரைகள் எழுதிவந்தேன். அதன்பின் “ திரிசக்தி ”, “ சித்தர்ஞான ஜோதிடம் “ ஆகிய வார, மாத இதழ்களிலும் எழுதி வந்தேன்.

இவைகளை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், “எப்படி எழுத வேண்டும் என்கிற நுட்பத்தை எங்களைப் போன்றவர்களுக்கு சொல்லி வழிகாட்டியவர்கள்”. ஒரு விடயத்தை எப்படிச் சொல்லவேண்டும் என்கிற வித்தையை, நான் சரியாகப் பயன்படுத்துகிறேன் என்று நினைக்கிறேன் என்றால், அதற்கு இவர்கள் தான் காரணம். ஒரு கட்டுரையை எப்படித் துவங்கி எப்படி முடிக்கவேண்டும் என்கிற சூட்சுமத்தை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே, எழுத்துலகில் நீடிக்கமுடியும். உங்கள் எழுத்தை நீங்களே காதலிக்கவேண்டும். வெள்ளைத்தாளையோ, கணினியின் வெண்திரையோ உங்கள் காதலியாகப் பாவித்துக் கொள்ளுங்கள். உங்களின் காதலியின் மேல் எப்படி எழுத வேண்டும் என்பதனை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும். உங்கள் காதலியும் உங்கள் எழுத்தில் இலயிக்கவேண்டுமல்லவா?

இன்று நானொரு இடத்தில் “ஆசிரியனாக” இருக்கிறேன் என்றால், அதற்கு என் மதிப்புக்குரிய திரு. சித்தரடிமை ஸ்ரீசி. இராஜீ அவர்களே காரணம். நன்றி ஐயா. என்னை வாழ்த்துங்கள் ஐயா. என் எழுத்துலக வளர்ச்சி உங்களிடமிருந்தே ….   நன்றி முகநூல் உறவுகளே!!!  

தொடர்புக்கு…. 9751822129  8754873378

Thursday 28 May 2015

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்...7






திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் பெரியகுளம் பிரதானசாலையில், கொடைக்கானல் போகும் சாலைபிரியும் இடத்தில் பரசுராமபுரம் எனும் சிற்றூர் உள்ளது. அதனருகில் கிளைச்சாலையான மண்பாதை பிரியும். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றால், பாலப்பட்டி ஊர்சாவடி வரும் அதனருகில் ஓலைக்குடிசையில் ஜோதிடம் பார்ப்பவர்தான் பாலப்பட்டி ச்சீனிவாசகன் என்பவர். அவரருகில் மூன்று மாதகாலம் பயிற்சி எடுத்தேன். பயிற்சி எடுத்த ஆண்டு, 1999 ஆகும். நான் முதலில் எல்லோரையும் போல்தான், ஜாதகம் பார்ப்பதாக நினைத்தேன். காரணம், வந்தவர்கள் அனைவரும், ஏழரை சனியுள்ளவர்களாகவோ, அட்டம, கண்டச்சனி பீடிக்கப்பட்ட்டவர்களாகவோ இருந்தனர். அதனால் பலன்களும் பேசியதே திரும்பத் திரும்ப சொல்வதாக எண்ணினேன். முதன்முறையாக பிறந்து ஜாதகம் எழுதாத குழந்தையின் குறிப்பைப் போட்டு தந்தேன். அதற்கு அவர் ஜாதகப்பலன் சொன்னது தான், என் வாழ்க்கைப் பயணத்தை திருப்பியது. அக்குழந்தையின் ஜாதகத்தை வைத்து சகோதரவர்க்கத்தைச் சொன்னார். அதன்பின் வரிசையாக தாய், தந்தை உடன்பிறப்புகளையும், சரளமாகச் சொன்னார். உண்மையில் வியந்து போனேன். வெறும் கட்டம், பாதசாரம் மட்டும் வைத்துக்கொண்டு, துருவகணிதம் எனும் பரணிஸ்புடம் இல்லாமல் எப்படி இவரால் சொல்லமுடிகிறது. என் பார்வையில் துருவகணிதம் இல்லாமல் சகோதரவர்க்கம் சொன்ன மூன்றாவது குரு இவராவார். திரு. பாலப்பட்டி சீனிவாசகன் அவர்களின் புகைப்படம் கிடைக்கவில்லை. வெகுவிரைவில் எடுத்து விடுவேன். அதை உடனே வெளியிடுவேன்.  

ஜோதிட சாத்திரம் என்பது அனுமான சாத்திரமாகும். இதில் நூறு சதவீதம் உண்மையை சொல்லிவிட முடியாது. இங்கே ஜோதிட அறிஞர்கள் பலபேருக்கு இந்த கருத்தில் உடன்படுவீர்கள் என்று தெரியும். அதிகபட்சமான உண்மையை சொல்லக்கூட, முயற்சி செய்யாதவர்களை என்னசெய்யலாம். உங்களால் முடியவில்லை என்பதால், வேறு யாராலும் முடியாது என்றால், பிரச்சனை ஜோதிட நுட்பங்களில் இல்லை. உங்களிடம் தான் உள்ளது. கருத்துக்களில் முட்டி தேய்ந்தவனும், முடங்கிக் கிடப்பவனும் விலகிக் கொள்ளுங்கள். முடியாது என்பதைச் சொல்ல ஜோதிட அறிஞன் என்கிறப் பெயரில் நீ எதற்கு?  நன்றி…முகநூல் உறவுகளே!!!    

 தொடர்புக்கு…. 9751822129  8754873378

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்...6





எனது குடும்பவாழ்வில் மிக நெருக்கடியான தருணம் 2003 ல் துவங்கியது. பணத்தேவைகள் அதிகரித்தது. திணறிப் போனேன். பரணில் கட்டிப் போட்டிருந்த ஜோதிட நூல்களை மீண்டும் தூசி தட்டி எடுத்தேன். மீண்டும் ஜோதிடப் பயணம் துவங்கியது. நாள்கணக்கில் ஜாதகங்கள் எழுதிக் குவித்தேன். பணத்தேவைகள் குறைந்து, சமநிலை எட்டியது.  குடும்பப்பிரச்சனைகளோடே ஜாதகமும் பார்க்கத் துவங்கினேன். அப்போதே அய்யம்பாளையம் பெரியசாமி, வேலக்கவுண்டன்பட்டி சண்முகம் ஜோதிடர், வீரக்கல் சுப்பிரமணியன், ஆகியோர்களுடன் நெருங்கியப் பழக்கம் ஏற்பட்டது. இவர்களில் ஒவ்வொருவரும் திறமைசாலிகள். அந்தகாலக்கட்டத்தில் தான்  வத்தலக்குண்டு அருகே உள்ள பாலப்பட்டி சீனிவாசகன் என்கிற ஜோதிடரோடு மூன்றுமாதங்கள் உடனிருக்கும் பாக்கியம் கிட்டியது. நான் முன்பே கூறியபடி, சிவன் கோவில் பெரியவரும், சேர்வைக்காரன் பட்டி சதாசிவம்பிள்ளை அவர்களும், ஜோதிட உலகில் புரையோடிக் கிடக்கும் துருவக்கணிதம் இல்லாமல், உடன்பிறப்புகளைச் சொன்னதுபோல், பாலப்பட்டி சீனிவாசகனும் துருவக்கணிதம் இல்லாமல், உடன்பிறப்பு, தாய்,தந்தையோடு பிறந்தவர்கள், மனைவியோடு பிறந்தவர்கள் அத்தனைக் குறிப்புகளையும் சொல்ல வல்லவராக இருந்தார்.  

என் வாழ்நாளில் குருநாதர் இடத்தில் பாலப்பட்டி சீனிவாசகனை மட்டுமே வைத்திருக்கிறேன். அவரிடம் துருவகணிதம் இல்லாமல் உடன்பிறப்புகளை சொல்லும் நுட்பத்தை அறிய சில “ டிப்ஸ்” வழங்கினார். அந்த வழிகளை வைத்துக் கொண்டு மீதமுள்ள உறவுகளுக்கு நானறிந்தேன். இப்போது நான் சொல்லிவரும் பலன்களில் இந்த துருவக்கணிதம் இல்லாமல் உடன்பிறப்புகளை சொல்லும் வித்தைகளைப் பயன்படுத்தி வருகிறேன். இது சுமார் 70% , 75% சதவீதம் உண்மை இருக்கிறது. ஜாதகத்தில் உள்ள சங்கேத வார்த்தைக் குறிப்புகளை வைத்து, ஈனத்தனமாக ஜாதகம் பார்ப்பதைவிட, இந்த வழி எவ்வளவோ மேன்மையானது. நன்றி … முகநூல் உறவுகளே! 

தொடர்புக்கு…. 9751822129  8754873378

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்...5





நான் நாத்திகவாதம் பேசி கதிகலங்கவைத்த நேரம். எங்களுடைய டீக்கடைக்கு CSI Charch Boster கள் வந்து போவார்கள். அவர்களுடன் இரவெல்லாம் நாத்திகத்திற்கும், ஆத்திகத்திற்குமான பேச்சரங்கம் நடக்கும். நானும் Bible இருந்து பல கேள்விகளை கேட்டுத் திணறடித்துவிடுவேன். அவர்களும் சளைக்கமாட்டார்கள். கலைந்து செல்லும் போது நட்புடன் பிரிவோம். அவர்கள் கூறுவார்கள், “ இன்னும் சில ஆண்டுகளில் உன்னை கடவுளை நம்ப வைக்கிஓறோம் பார் “ என்று சவால் விடுவார்கள். நான் மீண்டும் “ என் கருத்துக்களைக் கேட்டு, நீங்கள் நாத்திகவாதிகளாக மாறிவிடுவீர்கள் “ என்பேன். இவை நடந்தது  1985 ம் வருடமாகும்.


அதே ஆண்டு, திண்டுக்கல் அரண்மனைக் குளத்தின் அருகில் உள்ள, “சிவன் கோவில்” என்று அழைக்கப்படும் கோவிலில் ஒரு சாமியார் இருந்தார். என் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்  அவரிடம்  ஜாதகம் பார்க்கச் சென்றார். உடன் நானும் சென்றேன். சின்ன அட்டையில் ஜாதகக் கட்டம் போட்டு உடனே பலன் சொன்னார். ஜாதகரின் உடன் பிறப்புகளையும், தந்தை, தாயோடு பிறந்தவர்களையும், மனைவியோடு பிறந்தவர்களைப் பற்றியும், மனைவியின் வீடுவாசல் போன்றவற்றையும் சொல்லத்துவங்கினார். என் நாத்திக மூளைக்கு ஒன்றுமே புரியவில்லை. இது எப்படிச் சாத்தியம். பிரமாண்டமான பிரபஞ்சத்தை, அண்டவெளியை, சின்ன அட்டைக்குள் கட்டம் போட்டு, இங்கே குருவுள்ளார். இங்கே சனியுள்ளார் அங்கே அவர் உள்ளார், இங்கே இவர் உள்ளார் என கூறி, என் நண்பர்களின் உறவுகள் இத்தனைபேர் என்று எப்படிச் சொல்லமுடியும். நாத்திகம் பேசுவது முக்கியமல்ல. பேசுகிற வார்த்தைகளில் உண்மை இருக்கவேண்டும் என நினைத்தேன். அதற்கான பணிகளில் இறங்கினேன்.

முதன்முதலில் அங்கே தான் என் ஜாதகத்தை சிவன் கோவில் பெரியவரிடம் எழுதி வாங்கினேன். பின் விரிவாக வேண்டும் என்பதற்காக, வேடசந்தூர். ஆனந்தம்பிள்ளை அவர்களிடன் எழுதி வாங்கினேன். அவர் என் குணாதிசயங்களையும், வாழ்க்கை முறைகளையும் புட்டுப்புட்டு வைத்திருந்தார். எனக்கு இன்னும் நம்பிக்கையானது. அதன்பின் கரூர் அருகே உள்ள பாளையம் நகருக்கு அருகில் உள்ள சேர்வைக்காரன் பட்டி சதாசிவம் பிள்ளை அவர்களிடம் ஜாதகம் எழுதிவாங்கினேன். அவர் பல நுட்பவிடயங்களை எழுதி இருந்தார். அவையெல்லாம் அப்படியே நடக்கத்துவங்கியது. என்னோடு ஒட்டியிருந்த நாத்திக வாடை கொஞ்சம் கொஞ்சமாக விலகத்துவங்கியது. கிறித்துவனாகப் பிறந்து, நாத்திகனாக மாறி, ஜோதிடனாக அவதானித்துக் கொண்ட வருடம். 1989 ஆகும். என் நண்பர் திரு ஜோதிவேலும், நானும் ஜோதிடம் கற்கத்துவங்கினோம். நன்றி …. முகநூல் உறவுகளே!!!  

தொடர்புக்கு…. 9751822129  8754873378