Thursday 23 April 2015

சிந்தனை சிதறல்கள் 9





நாம் எல்லா நிலைகளிலும் ஒரே நிலையாய் செயல்பட்டு விடமுடியாது. அப்படி செயல்பட வேண்டும் என்று நினைத்தாலும் நடக்காது. அறிவால் செய்துவிடும் காரியத்தை, மனம் ஏற்றுக் கொள்ளாது. அதேபோல், மனம் செய்ய விரும்பும் காரியத்தை அறிவால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒன்று விரும்பினால், மற்றொன்று விரும்பாது.

தண்ணீரில் கலந்த எண்ணெயைப் போல, கலக்காமலே இருக்கும். ஆனால், ஒரு நிலையைக் கடந்தவர்களுக்கு, இப்பிரச்சனை நிகழ வாய்ப்பில்லை. அவர்கள் அறிவையும், மனதையுமே ஒன்றாக்கிக் கொள்வார்கள். அதுதான் விருப்பு, வெறுப்பு அற்ற நிலை. துறக்கும் மனோபாவத்தின் அடிப்படை நிலையாகும்.
##############################
ஒவ்வொருவருக்கும் கடுமையான கால கட்டம் என்று ஒன்று இருக்கும். அது எப்போது வரும், எப்படி வரும் என்று தீர்மானித்தும் சொல்லிவிடமுடியாது. நெருங்கியவர்களே விமர்சித்து விடும்போது, எரிச்சல் வரத்தான் செய்கிறது. மற்றவர்களுக்கு எரிச்சல் தருவதுபோல, நடந்து கொள்வது அவர்களின் இயல்பாகக் கூட இருக்கலாம். பொதுவில் வரும்போது, தன்னியல்பை மாற்றிக் கொள்ள முயலலாமே.

###############################
நாம் முன்னேற்றத்தின் உச்சத்தை அடைய வேண்டுமானால், பல நல்ல இதயங்களையும் சாகடித்துதான் ஆகவேண்டும். அதனால் உருவாகும் சஞ்சலத்தின் ஆணிவேரை அறுத்து எறியவும் முடியாது. இந்த இடத்தில்தான் சாமானியமானவன் தோற்றுப்போகிறான். வென்றவன் சாதனை நாயகன் ஆகிறான்.
நீங்கள் வெற்றியாளனா? தோல்வியாளனா?

###############################
தன்னிலை மறந்தவன் பிறர் சொல்வதை மதிப்பதில்லை. அது அவர்களின் குறைபாடு. அதேபோல சுயசிந்தனையாளனோ பிறர் சொல்வதைக் கேட்கப் போவதில்லை. இது அவனின் நிலைப்பாடு.

ஒருவன் அறியாமல் இருக்கிறான். மற்றவன் அறிந்ததால் புரிந்து இருக்கிறான். அவனுக்குப் புத்தியில் குழப்பம். இவனுக்கு புத்தியில் கலக்கமில்லை.

அதனால் தன்னிலை மறந்தவனுக்கும், சுயசிந்தனையாளனுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்கப் போவதில்லை
##############################
இந்த பூவுலகம் பல நட்டமரங்களைக் கொண்டுள்ளது. அவை நடமாடும். ஆனால் பூப்பதுமில்லை, காய்ப்பதுமில்லை, ஏன் மற்றவர்களுக்கு நிழல் தராமல் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நெடுஞ்சாண் கிடையாக கிடந்தாலும் விறகுக்கும் ஆகாது. ஊன் உடம்பை ஆலயமாக்காமல், பொதி சுமக்கும் கழுதையாய் ஆக்கிக் கொண்டுவிடும்.

இந்தநிலை மாற எந்த நிலை வேண்டும். இது அறிவின் தேக்கமா? நம் அறிவின் பார்வை வேறொரு கோணத்தில் திரும்பியதும் காரணமா



முத்துப்பிள்ளை, 91501 06069, 91506 65878

No comments:

Post a Comment