Wednesday 29 July 2015

சித்தயோகியாருக்கு சில கேள்விகள்.. .. .. முத்துப்பிள்ளை.



கடந்த சில நாட்களாக பிரச்சனைகளின் ஊற்றுக்கேணியாக தாங்களும் இருந்து விட்டீர்கள். என்னைப் போன்ற சிலர், ம்க்கூம் பலர், கண்டும் காணாமலும், பதில் சொல்லத் தயங்கியும், போற்றிய நாங்களே தூற்றக் கூடாது என்பதற்காகவும், கவனத்தை வேறு திசையில் திருப்பியும், நம்மிடைய நட்புறவு கெடக்கூடாது என்கிற எண்ணமே தவிர வேறொன்றுமில்லை.

தாங்கள் பாரம்பர்ய ஜோதிடத்தைப் பற்றிய, உங்கள் பார்வையைக் கண்டேன். ஜோதிடப் பாடல்களிலும், உங்கள் புலமையைக் கண்டேன். சப்தகன்னியரைப் பற்றிய ஆன்மீகச் செய்தியினையும் கண்டேன். அது மட்டுமல்லாது, உங்களைப் பற்றியும், நீங்களே அறிந்து கொண்டதைப் பற்றியும் கண்டு கொண்டேன். உங்களை விமர்ச்சித்தால், நீங்கள் வணங்கும் குருநாதர், விமர்சிப்பவரை சிலமாதங்களிலே காணாமல் ஆக்கிவிடுவார் என்கிற கதையும் கண்டேன்.

நீங்கள் ஆங்கிலம் வழியாக ஜோதிடம் கற்றதாக சொல்லியுள்ளீர்கள். பிறகு எப்படி தமிழில் புத்தகம் எழுதுகிறீர்கள். தமிழில் மட்டும்தான் “கிறுக்கன்கள்” இருக்கிறார்கள் என்பதற்காகவா? இல்லை, இவர்களுக்கு, இன்னும் ஜோதிட அறிவு இல்லை, அதை போக்கவேண்டும் என்பதற்காகவா?

தமிழ்வழி ஜோதிடம் கற்றுக் கொள்ளாத நீங்கள், தமிழ்பாடல்களில் மட்டும் புலமை பெற்றுவிடுவீர்களா? புலமையும் உண்டே என்றால், எத்தனை பாடல்களுக்கு அசைபிரித்து தந்துள்ளீர்கள். புலமையில்லை என்றால், தமிழ்பாடல் வழியாக ஜோதிடம் கற்றுள்ளவர்களை, நீங்கள் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்.

ஒருவனுக்கு எப்படி போதிக்கப்பட்டுள்ளதோ, அதையொட்டித்தான் பயணப்படுவான். பாடல்களில் நுணுக்கங்கள் உள்ளதை உணர்ந்தவன், விதிகளை மட்டுமல்லாது, பாடலையும் மனனம் செய்து கொள்கிறான். வாய்ப்பு கிடைக்கும் போது, மேடையில் முழங்குகிறான். அவ்வளவுதான்.
நான் கால்களில் செருப்பணிந்தே நடந்து பழகியவன். கட்டாந்தரையில் காலூன கூசும். அவன் பிறந்ததில் இருந்தே செருப்பணியாமல் நடந்து பழகியவன். சித்திரை வெயில் கூட, மெத்தெனப்படும். அவ்வளவுதான்.
நீங்கள் “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” கேட்டு வளர்ந்தீர்கள். பாவம் விதியற்ற நாங்கள், “ஆராரோ, ஆரிராரோ” கேட்டு வளர்ந்தோம். நாங்கள் பிறந்ததில் இருந்து கட்டை சாயும் வரை பாட்டுக் கேட்டுக் கொண்டே சாவோம். நீங்கள் வேண்டுமானால், வயலின் வாசித்துக் கொள்ளுங்கள்.

பிருஹத் ஜாதகத்தில் பொருந்தாத சுலோகங்கள் உள்ளதாக கூறிய தாங்கள் ஒரு சுலோகத்தைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்கள். நீங்கள் வடமொழிப் பாண்டித்யம் பெற்றவரோ, என்றுகூட நினைத்தேன். காரணம், எனக்கு வடமொழி --- என்றாலே, வேண்டாம், அது வேறு கதை. ஆனால், அதே சுலோகத்திற்கு இன்னொரு நண்பர், உங்களின் விளக்கத்திற்கு மாற்றாக, உண்மை விளக்கத்தைக் கூறியதும், “பொசுக்” கென்று போய்விட்டது.

தமிழ்பாடல் தந்து விளக்கம் தந்தீர்கள். அதைப் படித்தபோது, உண்மையில் சொல்லுகிறேன், உங்கள் மேல் இருந்த மதிப்பு குறைந்தது. அதற்கான உண்மை விளக்கத்தை மதிப்புக்குரிய ஐயா. திரு. ஜோஸ்யம் ராமு அவர்கள் விளக்கினார்கள். இங்கேதான் கேள்வி எழுகிறது.

தாங்கள் தந்த விளக்கங்கள் சரியானது என்றால், ஏன்? திரு. பராசரி ஐய்யப்பசர்மா அவர்களுக்கும், திரு ஜோஸ்யம் ராமு அவர்களுக்கும் இத்தனை நாளாக மறுப்பு தராமல் இருந்தது ஏன்?

உங்களின் வயதுக்கும், அனுபவத்திற்கும் நிகராக வராத ஒருவருக்கு, நீங்கள் ஏன்? பதில் சொல்கிறீர்கள். ஒருவர் மாற்றி ஒருவராக பேக் ஐடியில் வசைமாறிக் கொள்ளும் பதிவுகளை, உங்களின் தரத்தைவிட்டு, அடுத்த குழுக்களில் பகிர்வு செய்கிறீர்களே ஏன்?

“ அடுத்தவன் தின்கிறான். அதனால நானும் தின்கிறேன் “ என்பீர்களா? 

உங்களை நீங்களே தரம் இறக்கிக் கொள்ளும் செயல்தானே இது?
என்னைப் போல நாத்திக வாடையில் இருந்து வந்தவனால் கூட, செரிக்க முடியாத, சப்தகன்னியரைப் பற்றிய பதிவும் படித்தேன். சப்தகன்னியரும் காலடியில் அமர, நீங்கள் என்ன? முக்கண் முதல்வனா? சூரனை வதம் செய்த, முக்கண்ணன் மகனா? அல்லது துணைப்போர் புரிந்த, முக்கண்ணன் அம்சம்பெற்றவனா?

நாடியில் உயர்வைக் கண்ட நீங்கள், பாரம்பரியத்தை விட்டு முற்றும் அகலாமல், அதற்குள்ளாகவே இருந்து கொண்டு, அதையே தரம் தாழ்த்தியும் பேசிக் கொள்கிறீர்கள். இலக்கினப்புள்ளியையும் தொடாமல், கோள்சாரத்தை மையமாக வைத்தும், திசைகளில் இருக்கும் கிரகங்களின் போக்கைக் கண்டும் பலன் கூறும் தாங்கள், உலக ஜோதிடத்தின் ஒப்பற்ற இந்தியக் கண்டுபிடிப்பான, பாரம்பரிய ஜோதிடத்தின் ஆணிவேரான தசா - புக்திகளைப் பற்றி,  “ தசா-புத்தி கணிதமும், பலன்களும் “  என்கிற நூலை எழுதியதன் காரணம் கூறுகிறீர்களா?

நீங்கள் பின்பற்றுவதாக சொல்லும் நாடி முறை, பாரம்பரியத்தின் பரிணாமமே தவிர வேறொன்றுமில்லை. நாடி விதிகளை தொகுத்தவரே, தமிழ்பாடல்களில் இருந்துதான், இம்முறை அறியப் பட்டது என்ற பிறகும், அதை தாம்தான் தமிழனுக்கு வெளிக்காட்டினேன் என்றாக சொல்வதும் வேடிக்கையாக உள்ளது. திரு. ஆர். ஜி. ராவ் அவர்கள், திரு. சத்தியநாராயணா அவர்கள், குரு. இராம்சுப்பு அவர்கள் என்ற நாடியின் முன்னோடிகளைவிட தாங்கள் எதுவும் பெரிதாக செய்துவிடவில்லை.

மூன்றுவரியில் பதிவு போட்டாலே, முன்னூறு கமெண்ட் வாங்கும் உங்களை, பக்கம் பக்கமாக வரிவரியாக, திட்டுவதாக நினைத்து, அனைத்து ஜோதிடர்களையும் கூனிக்குறுக வைத்த பேக் ஐடியை, உங்களின் “சிஷ்யக்கோடிகள்” முப்பது பேர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே? ஏன்?
இப்போதும் கூட, ஒரு ஜோதிடனை இகழ்வதற்கு, தாங்கள் எத்தனித்தபிறகும், நானும் கேள்விகள் கேட்கவில்லை என்றால், என்னை என் குருமுனி அகத்தியன் தண்டித்தே தீருவான். இதை விளம்பர யுக்தி என்று பிதற்றி விட மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். கேள்வியின் ஆழத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நான் அன்னைத் தமிழுக்கும், என் ஆசான் அகத்தியனுக்கும் மட்டுமே அடிபணிவேன்.

ஜோதிடத்தில் உச்சம் கண்ட தாங்கள், பலருக்கு வழிகாட்டியாக இருப்பீர்கள் என்றால், ஒரு தவறான முன்னுதாரணமாக, எல்லாத் தரப்பு மக்களின் கேலிப்பொருளாக “ஜோதிடத்தை” நிறுத்த தாங்களும் காரணமாக ஆகி விட்டீர்கள். இந்த நிலைக்கு வந்தபின்னும் பலரின் உள்ளக்குமுறல்களைதான் நானும் தெரிவித்தேன்.

தொண்டைக் குழி வரை வந்து விட்டது. பிறகென்ன? துப்பிவிட்டேன்.

No comments:

Post a Comment