Tuesday 18 November 2014

போதகன், வேதகன், பாசகன், காரகன்


                             
ஒரு ஜாதகத்தில் தசாநாதனும், புத்திநாதனும் வலுவுள்ளவர்களா? என்று அறிய பலவழிகள் உள்ளன. அதேபோல் போதகன், வேதகன், பாசகன், காரகன் என்கிற ஒருமுறையும் உள்ளது. இது நம்மில் பலருக்கும் தெரியும், ஆனாலும், பெரும்பாலான ஜோதிடர்கள் யாரும் பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது. நாம் தேடுகிற மனப்போக்கை இழந்துவிட்டோமா? என்று எண்ணத் தோன்றுகிறது.  நான் அறியவேண்டிய விடயத்தை, வேறு யாராவது சொல்லமாட்டார்களா? என்று தேடுதல் புத்தியை தொலைத்துவிட்டு நிற்கிறோம்.
ஜாதக அலங்காரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பத்துப்பாடலில் போதகன், வேதகன், பாசகன், காரகன் என்கிற, சூட்சும நிலையை நாம்தான் உருவாக்கியுள்ளோம். எப்படியெனில்  தெள்ளு தமிழோர் உரைத்த சீர் என்றும், தரைத் தமிழோர் தாமறியத் தாம் என்றும் சொன்னதால், தமிழ் முன்னோடிகளால்தான் தசாபுத்திகளைப் பற்றி புரிதல் நம்மவர்களால் உருவாக்கப்பட்டதாக உணர்கிறேன். இந்த நூதன வழியை மென்மேலும் செம்மைப் படுத்த முயற்சிகள் எடுக்கவில்லையென்பதும் உண்மைதான். இனி கட்டுரைக்குள் செல்வோம்.          

ஒருவர் மகாதிசைக்குள் உற்ற பலன் உண்ண
வருவர் நவக்கிரகர் மாதே_ அவரவரில்
போதகனும் பாசகனும் போற்று பொருள் காரகனும்
வேதகனுமாகி வருவார்.

நவக்கிரகங்களின் ஒவ்வொரு திசாநாதன் பலனையும், சாப்பிட போதகன் என்றும், வேதகன் என்று, காரகன் என்றும் பாசகன் என்றும் வருகின்றனர். இவர்களை வகைபிரித்து அறிந்து உலகோர்க்கு பலன் சொல்லவேண்டும்.

இந்தப் படி நால்வர் எய்தி ஒருவர் திசைக்குள்
வந்த பலன் உண்ணும் வகை அறிந்தே_ சிந்தித்
துரைத்த பலன் ஒத்திருக்கும் ஒண்டொடிய கேளாய்
தரைத் தமிழோர் தாமறியத் தாம்.

முதலில் சொன்ன நால்வரும் ஒவ்வொருவர் திசைப்பலனையும், உண்ணும்விதம் அறிந்து சொல்வதும், பலன்கள் தவறாது நடக்கும். ஆகையால், இவ்விதம் பலன் சொல்வதே நன்றெனவே ஜோதிட வல்லோர்கள் கூறுவர்.

கூறுபலனைக் கொடு என்பான் போதகனும்
வேறுபண்ணித் தட்டுவிப்பான் வேதகனும்_ தேறுபலன்
கூட்டுவிப்பான் பாசகனும் கோலமகாதிசைக்கே
ஈட்டுப் பொருள் காரகன் ஈவான்.

ஒவ்வொருவருக்கும் திசைபுக்தி வருங்காலத்தில் போதகன், வேதகன், பாசகன், வேதகன்  என்றும் நால்வர் உள்ளனர். ஒருதிசையில் போதகன் என்பவன் தன் பலன் யாவையும் கொடு என்பானாம். வேதகன் என்பவன் பலனைக் கொடுக்காதே என்று கெடுப்பானாம், பாசகன் என்பவன் கொடுக்கும் பலனுடன் இன்னும் கொடு என்பானாம். காரகன் என்பவன் அவனவன் செய்யும் கர்மவினைகளைப் பொறுத்தே பலன்கள் தந்தால் போதும் என்பானாம். இப்படி நான்கு நிலைகளில் ஒரு தசையில் பலன்கள் நடக்கத் துவங்கும். இதில் இராகு, கேது எனும் மாயக்கோள்களுக்கு இடமில்லை
ஒவ்வொரு திசாவையும் ஐந்து கிரகங்கள் மட்டுமே வழிநடத்துகின்றன. மீதமுள்ள நான்கு கிரகங்கள் இயல்பான புக்திகளாகவே நடந்து முடிகின்றன. தசாநாதனுக்கும் போதகன், வேதகன், காரகன், பாசகன் ஆகிய நால்வரும் என்ன உறவில் உள்ளன. நட்பா?, பகையா? என் அறிந்து கொள்ளவேண்டும். நட்பாக இருந்தால், நால்வரும் நன்மையை ஜாதகருக்குத் தருவார்கள். பகை, நீசமாக இருந்தால், தீயப்பலன்களைத் தருவார். பின் அவர்களின் பாவக ஆதிபத்யம், திதி சூன்யம் பெற்றுள்ளனரா? என்பதையும் கண்டறிய வேண்டும். ஜாதகத்தில் தசா நாதனுக்கு நட்படைந்த கிரகம் போதகனாய் இருந்து, 6,8,12 ல் இருந்தாலும்இலக்கினத்துக்கு 6,8,12ல் இருந்தாலும் நன்மையான பலன்களைத் தருவதற்குப் பதிலாகதடுத்து நிறுத்திவிட்டாலே போதும், ஜாதகர்க்கு கிடைக்கவேண்டிய நன்மைகள் கிடைக்காமல்  கெட்டுப் போய்விடும். அதி ஜாதகர்க்கு தீயப்பலன்கள் தானே. இதேபோல் அந்த ஜாதகத்தில் உள்ள கிரகநிலைகளை ஆய்வு செய்து அதன்படி பலன்கள் நிர்ணயம் செய்யவேண்டும். கிரகசலனத்தில் சாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 8,12ன் அதிபதிகளின் சாரம் பெற்றாலோ, தொடர்பு பெற்றாலோ, சாயாக்கிரகத் தொடர்போ, பாவக ஆதிபத்யமோ பெற்றால், நன்மைதரும் கிரகங்களும் தீமையைத் தருகின்றன. நம் யுக்திடன் பலன் காணவேண்டும்.

 சூரிய திசை.

சூரியனுக்கு நட்புப் பெற்றக் கிரகங்கள்: சந்திரன், செவ்வாய், குரு ஆகியன.
சூரியனுக்குப் பகை பெற்றக் கிரகங்கள்: சனி, சுக்கிரன்,  
சூரியனுக்குச் சமக்கிரகம் : புதனாகும்    

பானுதிசைக்குமந்தன் பாசகனாஞ் சுக்கிரனோடு
மானேகேள் வேதகனா மன்னவனும்_ தேனனையாய்
காரகனாஞ் செவ்வாயுங் காசினியோர் தாமறிய
ஏரணியும் போதகனாமே.

போதகன் : செவ்வாய் ; எல்லாப் பலன்களையும் கொடுக்கச் சொல்பவன்.
வேதகன் : சுக்கிரன்; பலன்களைத் தரவேண்டாமென்று சொல்பவன்
பாசகன் : சனி ; அவன் கொடுக்கும் பலன்களுடன் இன்னும் பலன்களைக் கொடுக்கச் சொல்பவன்
காரகன் : குரு ; அவன் செய்த செயலுக்கு  தகுந்தப் பலன்களை மட்டும் தர சொல்பவன்.

சூரியனுக்கு நட்படைந்த செவ்வாய் போதகனாக இருக்கிறான். குரு காரகனாக இருக்கிறான். இப்போது சூரியதிசாயில் செவ்வாய்புக்தி எல்லா நல்லப்பலன்களையும் தரச் சொல்லும். (செவ்வாய் கெடாமல் இருந்தால்). குருவும் நட்பாக இருப்பதால், ஜாதகன் இதுவரை என்ன கர்மவினைகளைப் பதிவு செய்து வைத்துள்ளானோ, அதற்குத் தக்கப்படி தான் பலன்கள் நடக்கும். சூரியனுக்கு குரு நண்பன் என்பதால் கூடுதலானப் பலன்கள் நடக்காது. மேலும்,
சூரியனுக்குப் பகைபெற்றக் கிரகங்களான சுக்கிரன் வேதகனாகிறான். அதாவது நல்லப்பலன்களைத் தரவேண்டாமென்று தடுத்து விடுவான். ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்றால், நல்லபலன்களை தடைசெய்வான். அதேபோல், சனியும் கெட்டிருந்தால், கொடுக்கும் பலன்களுடன் இன்னும் கூடுதலாக கெட்டப்பலன்களைக் கொடுக்கச் செய்வான்

சந்திரதிசை

சந்திரனுக்கு நட்பு பெற்ற கிரகங்கள்: சூரியன், புதன்.
சந்திரனுக்கு சமக்கிரகங்கள் : செவ்வாய், குரு, சுக்கிரன், சனி ஆகியன.
சந்திரனுக்கு பகைக்கிரகங்கள் : இராகு, கேது முதலியன.

இந்து திசைக்கு வெள்ளி யேற்றதோர் பாசகனாம்
விந்தைமலர் நண்பனே வேதகனாம்_ மந்தனே
கங்கா நதிபுடைசூழ் காசினியிற் காரகனாம்
அங்கார கன்போதே கன்.

சந்திரனுக்குப் பகையென்று எவருமில்லை. எல்லோரும் உறவாகவே உள்ளனர். அப்படியானால் சந்திரதிசையில் பலன்களைத் தடுப்பவர்கள் யார்? எல்லோரும்தான் உறவாகவே உள்ளனரே? நீசமாகவும், 6,8,12ல் இருந்தால் தான் பலன்கள் கெடுமா? இவையெல்லாக் கேள்விகளையும் அனுபவத்தில் இருந்துதான் தேடவேண்டும். இதில் இன்னொரு சூட்சுமம் ஒளிந்திருப்பதைக் காணலாம். அது என்னவெனில், இராகு, கேதுக்கள் போதகன், வேதகன், காரகன், பாசகன் என்கிற நான்கு அமைப்பில் வரவில்லையென்றாலும், இந்நான்கில் வரக்கூடியக் கிரகங்களும், திசாநாதனும் இராகு கேதுக்களின் சாரத்தை வாங்கி நிற்கக் கூடாது. இவர்களோடு கூடி நிற்கக் கூடாது. இவர்களின் பார்வையில் சிக்கி இருக்கக் கூடாது. இது சந்திரனுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு கிரகத்திற்கும் பொருந்தும் நிலைதான்.  
போதகன் செவ்வாய் நல்லதோ, கெட்டதோ பலன் யாவையும் கொடு என்பான். வேதகன் சூரியன் நல்லதோ, கெட்டதோ தராதே என்பான். பாசகன்  சுக்கிரன் நல்லதோ, கெட்டதோ அதிகமானப் பலன்களைக் கொடு என்பான். காரகன் செவ்வாய் அவன் விதிப்பலன் அறிந்து கொடு என்பானாம். இங்கே ஜாதகத்தில் கிரகங்களின் தொடர்பும், சம்பந்தமும், வாங்கிய சாரமும் முக்கிய இடம் வகிப்பதைக் காணலாம்.
                                                 
செவ்வாய்திசா.

செவ்வாய்க்கு நட்படைந்த கிரகங்கள்: சூரியன், சந்திரன், குரு ஆகியன.
செவ்வாய்க்கு பகைபெறும் கிரகங்கள் : புதன், இராகு, கேது ஆகியன.
செவ்வாய்க்கு சமம் பெறும் கிரகங்கள் : சுக்கிரன், சனி முதலியன.

மங்களனார் தந்திசைக்கு மார்த்தாண்டன் பாசகனாம்
தங்களரும் போதகனாஞ் சேயிழையீர்_ பொங்குபுகழ்
மேயபுதன் வேதகனாம் இத்தரணி யோரறிய
ஆயசனி காரகனே யாம்.

செவ்வாய் திசைக்கு எல்லாப் பலனையும் கொடு என்று சொல்லும் போதகன் சந்திரனாகும், எந்த நல்ல பலனையும் தராதே என்று சொல்லும் வேதகன் புதனாகும். அதிகமான நல்லப்பலனை கொடு என்று சொல்லும் பாசகனாக சூரியன் இருக்கிறான். அவனின் வினைப்பயனுக்கேற்ப பலன்களைத் தந்தால், போதுமென்று கட்டுப்பாடுகள் விதிப்பவனாக சனி இருப்பார்.
நல்லக்கிரகங்களாக இருந்தாலும், நல்ல இடத்தில் அமர்ந்து நல்லவர் பார்வை பெற்றால்தான், நல்லபலன்கள் நடக்கும். அதைவிடுத்து நல்லகிரகங்கள் கெட்டகிரகங்களின் தொடர்போ, பார்வையோ, பரிவர்த்தனையோ பெற்றால், நடக்கும் பலன்கள் விபரீதமாகத்தான் இருக்கும். நல்லபலனைத் தரும் போதகனோ, வேதகனோ, பாசகனோ, காரகனோ தசா நாதனுக்கு நட்பாக இருந்து, நல்லவன் காண நல்லபலன் நடக்கும். அதேபோல், தசாநாதனுக்கு பகைபெற்று பகையாளி தொடர்பு பெற்றால், நடக்கும் பலன்கள் கெட்டதாகவே நடக்கும்.   

புதன் தசா.

புதனுக்கு நட்படைந்த கிரகங்கள்: சுக்கிரன், சனி
புதனுக்கு பகைபெற்ற கிரகம்: குரு,
புதனுக்கு சமம் பெற்ற கிரகங்கள்: சூரியன், செவ்வாய், சந்திரன், இராகு, கேது ஆகியன.

புத்தி திசைக்குப் புரவலனே போதகனாம்
சந்திரனே பாசகனும் தானாவன் _ இந்துநுதல்
மின்னனையீர் செவ்வாயும் வேதகனாம் வெள்ளியோ
மன்னுபுகழ் காரகனு மாம்.

புதன்திசையில் புதனுக்குப் பகையான குரு ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால், எல்லா கெடுபலனையும் கொடுக்கும் போதகன் ஆவார்.   நல்ல நிலையில் இருக்கும் செவ்வாய், எந்த கெடுபலனையும் தராதே என்று சொல்லும் வேதகன் ஆவார் . அதிகமான நல்லப்பலனை  பாசகனாக  சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் கொடுப்பார். இல்லையென்றால் தடுப்பார். அவனின் வினைப்பயனுக்கேற்ப நல்லப்பலன்களையோ, தீயப்பலன்களையோ  தந்தால், போதுமென்று கட்டுப்பாடுகள் விதிப்பவனாக சுக்கிரனாக இருப்பார்.
                                                 
குரு திசா.

குருவிற்கு நட்புக்கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியன
குருவிற்கு பகைக் கிரகங்கள்: புதன், சுக்கிரன் ஆகியன,
குருவிற்கு சமம் கிரகங்கள் : சனி, இராகு, கேது ஆகியன.

வேந்தன் மகாதிசைக்கு வெய்யவனே வேதகனாம்
போந்துவருஞ் செவ்வாயே போதகனாம் _ காந்திசெறி
சந்திரனே காரகனாம் தையலே தாரணியில்
மந்தனே பாசக னாமே.

குருவின் திசைக்கு நண்பனான செவ்வாய் போதகனாய் இருந்து, நல்லபலன் யாவையும் கொடு என்பான். மற்றொரு நண்பனான சூரியன் தீயபலன் யாவையும் தராதே என்பானாம். திசையின் பாசகனான சனி நல்லபலனோ, தீயபலனோ அதிகமாக கொடு என்பானாம். அளவாக பலன்களை தரும் காரகனாக சந்திரன் கர்மப்பலன்களைத் தருவான். இந்த பலன்கள் அனைத்தும் அந்தந்த கிரகங்கள் ஜாதகத்தில் வலுவோடு நிற்கும் நிலையறிந்து கூடுதல், குறைச்சல் நன்மை, தீமைப் பலன்களைக் கலந்து தருவார்கள்.

சுக்கிரன் திசை

சுக்கிரனுக்கு நட்புபெற்ற கிரகங்கள்: புதன், சனி, இராகு, கேது முதலியன.
சுக்கிரனுக்கு பகைபெற்றக் கிரகங்கள்: சூரியன், சந்திரன் முதலியன.
சுக்கிரனுக்கு சமம் பெற்றக் கிரகங்கள்: செவ்வாய், வியாழன் முதலியன.

வெள்ளி மகா திசைக்கு வேந்தனே போதகனாம்
தெள்ளுபுதன் பாசகனாஞ் செங்கதிரும் _ மெள்ளவரும்
காரகனே தானாகுங் காரியே வேதகனாம்
வாரணியுங் கொங்கை மயிலே.

சுக்கிரதிசைக்கு சமக்கிரகமான குரு எந்தபலனானாலும் அதை ழுழுதாய் கொடு என்பானாம். நண்பனான சனி வேதகனாய் இருந்து, (ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால்) கெடுபலனை தரவேண்டாமென்று தடுத்து விடுவான். நட்புக்கிரகமான புதன் பாசகனாய் இருந்து, பலன்கள் யாவையும் கொடு என்பானாம். சூரியன் காரகனாய் இருந்து வினைக்கேற்ப பலன்களைத் தந்தால் போதும் என்று இருப்பான்.

சனி திசை.

சனிக்கு நட்புக்கிரகங்கள்: புதன், சுக்கிரன், இராகு, கேது ஆகியன
சனிக்கு பகைக்கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியன
சனிக்கு சமக்கிரகம்: குரு ஆகும்.

சனியின் திசைக்குச் சசி போதகனாம்
இனியசெவ்வாய் வேதகன் என்றேத்தும்_ கனிமொழியாள்
வெள்ளி யபாசகனாம் வேந்தனோ காரகனாம்
தெள்ளுதமி ழோரைத்த சீர்.

சனியின் திசைக்கு பகைபெற்ற கிரகமான சந்திரன் (ஜாதகத்தில் தீது தரும் இடங்களில் அமர்ந்திருந்தால்) எல்லா கெடுபலனையும் தரும் என்பானாம். பகைபெற்ற செவ்வாய் நல்ல இடத்தினில் அமர்ந்து இருந்தால், நல்லபலனையும் தராதே என்பானாம்அதேபோல் கெட்ட இடத்தினில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் நட்புக்கிரகமானதால், நல்லபலனை தரவிடாமல் தடுத்துவிடுவான். சனிக்கு சமக்கிரகமான குரு கர்மவினைக்கேற்ப அமர்ந்திருக்கும் இடத்தினைப் பொறுத்து பலன்களைத் தந்துவிடுவார்.

போதகன், வேதகன், பாசகன், காரகன் எனும் நான்கு நிலைகளில் கிரகங்களின் நட்பு, பகை, சமம் அடிப்படையிலும், கிரகங்களின் சார அமைப்பிலும், அமர்ந்த இடத்தைப் பொறுத்தும், இலக்கினத்துக்கோ, இராசிக்கோ, அல்லது தசாநாதனுக்கோ மறைவிடங்களில் அமர்வதைப் பொறுத்தும் பலன்கள் நிர்ணயிக்கப் படுகின்றனமுத்துப்பிள்ளை. 91501 06069 / 93456 56268.

முத்துப்பிள்ளை,
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். 624 701 (அஞ்சல்)
ஆத்தூர் வட்டம்
திண்டுக்கல். மாவட்டம்.                                                                                                

6 comments:

  1. நல்ல விளக்கம் தொடரட்டும் தங்கள் பணி

    ReplyDelete
  2. அருமையான பதிவு
    RKJ ♐♑

    ReplyDelete
  3. அருமையான பதிவு
    RKJ ♐♑

    ReplyDelete
  4. நுட்பமான கருத்துக்கள் தொடரட்டும் தங்கள் சேவை.

    ReplyDelete
  5. Thanks for your information

    ReplyDelete