Friday 14 November 2014

`பசி வந்தால் பத்துதான் பறக்குமா?.



பசி.

எல்லா ஜீவன்களும் பிறப்போடு உணர்ந்த உலகமொழி.

இம்மொழியைப் பேச, சொல்லித் தரவேண்டியதில்லை. ஏதோவொரு சூழலில் நாமறிந்த மொழிதான். ஒரு வேதனையை அனுபவித்தால் தான், அந்த வேதனையின் வலிதெரியும். ஆனால், பிறப்போடு தொடர்புடைய பசியை, உணர்ந்தாலே புரிந்துவிடும்.

உலகம் சுற்றும் வேகத்தைவிட, உலகில் பசியோடு சுற்றுபவர்கள் தான் அதிகம்.

அனைத்து உயிரினங்களுக்கும் பசியிருந்ததால் தான், வாழ்ந்திருந்தன. இந்த பரிணாமத்தின் தொடர்ச்சி, பசியில் இருந்து தான் துவங்கியது.   

இந்த உலகம் மொழி, இனமென்று வலுவாக நிற்கிறது. ஆனால், வறுமையையும், பசியும்தான், தன்னினத்துக்குள்ளும் உயர்வு தாழ்வை நிர்ணயிக்கிறது. வறுமையின் பிடிக்குள் சிக்குபவன், அதிலிருந்து மீள்வதற்கானப் போராட்டத்தில் பெரும் உழைப்பை தரவேண்டியுள்ளது. உடல்பலமும், கல்விவளமும், சுயதொழிலும் இல்லாதவன் வறுமையின் சுழலில் சிக்கிவிடுவான்.

உலகின் முதல் கொடுமை  வறுமைதான். இரண்டாம் கொடுமை இளமையில் வறுமை. இந்த அவலநிலையை போக்குவற்கு தான், எல்லா அரசுகளும் போராடுகின்றன.

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை.”-

என்று சித்தன் வயிற்றையும், பாழாய்போன பசி தகிக்கவிடுகிறது. இன்னும் ஒருபடிமேலெறிய ஒளவைப்பாட்டி,

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாள் ஏலென்றால் ஏலாய்- ஒருநாளும்
என் நோவறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.” என்றார்.

உடம்பை வளர்க்கும் உணவு, ஆன்மாவுக்கும் தொடர்புடையது, உடல் என்கிற வடிவம் அல்லது தோற்றத்தை, இந்த பசி கூனிக்குறுகி நிற்கச் செய்கிறது. மானம் குலம், கல்வி, வன்மை, அறிவுடமை தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை  விரும்பிய பெண்ணின் மேல் காமுறுதல் ஆகிய மனிதனின் இன்றியமையாத பத்து அருங்குணங்களை மட்டுமல்ல,

வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சாலவுறும்.

என்று, மனிதனால் உருவாக்கமுடியாத உயிரை, பத்தோடு பதினொன்றாக இந்த பசி   பறந்தோடச் செய்கிறது.

உலக வறுமை ஒழிப்பு தினம், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17ம் தேதியை, ஐக்கியநாடுகள் சபை 1922 ம் ஆண்டு அறிவித்தது.

இந்திய மக்கள் தொகையில் 350 – 400 மில்லியன் மக்கள், அதாவது மூன்றில் ஒருவர்  வறுமைக் கோட்டுக்குள் வாழ்கிறார். இதில் எழுபது சதவிகிதம் மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்கின்றனர். குறைந்த வருமானத்தில் 35% பேரும், 40% மக்கள் கல்வியறிவு , உணவு, உடை, மருத்துவ வசதியும் இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்தியாவுக்கு ரூபாய் 21500 கோடியை  வறுமையை ஒழிக்க   உலகவங்கி  கடனாகத் தருகிறது. இந்த கடனிலிருந்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தங்கள் வறுமையை ஒழிக்காமல், மக்களின் வறுமை ஒழிந்தால் நலமே.
பசிப்பிணியேற்பட பலகாரணங்கள் இருந்தாலும், ஜோதிடத்தின் மூலம், வறுமையேற்பட என்னென்ன கிரக அமைப்புகள் உள்ளன என்பதை காண்போம்.

ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாமிடமும், இரண்டாமதிபதியும், இரண்டாமிடத்தில் இருக்கும் கிரகங்களும் வலுவானதாக இருக்கவேண்டும்.

இரண்டாமதிபதியும், சனியும் நீசமாகி, குளிகனின் தொடர்பு ஏற்பட்டாலும், இரண்டாமதிபதி சனியாகி  நீசமாக நின்றாலும், இரண்டாமதிபதியும், சனியும் கூடி, நீசராசியில் நின்றாலும், நீசராசியில் நிற்கும் இரண்டாமதிபதியை, சனி கண்டாலும் உணவு கிடைக்காமல் திண்டாடுவான்.   

ஐந்தாமதிபதி, சனி, செவ்வாய், குளீகனுடன் கூடி, அல்லது ஒருவரையொருவர் காண, மிகவும் கீழான உணவை உண்பார்.
இரண்டாமதிபதி, சனி, செவ்வாய், மாந்தியுடன் தொடர்பு கொள்ள மிகவும் கீழான உணவை உண்பார். இரண்டாமதிபதியும், மாந்தியும் கூட கெட்ட உணவை உண்பார். செவ்வாய், மாந்தி இரண்டு, எட்டிலமர, மிகவும் கீழான உணவை உண்பார்.

இலக்கினாதிபதி நீசம்பெற்று, பாவருடன் கூடி, அல்லது பாவர் காணவும், இலக்கினாதிபதி நீசம்பெற்றாலும் பசிதுன்பம் தாங்காமல் பிச்சையெடுத்து உண்பார். இதேபோல், இரண்டாமதிபதி நீசம்பெற்று, பாவிகள் தொடர்பு ஏற்பட்டாலும், பிச்சையெடுத்து உண்பார்.

இலக்கின மறைவிடங்களான 6, 8, 12 ல் இரண்டாமதிபதி பாவர் பார்வை பெற்று நின்றாலும், இரண்டுக்குடைய கிரகம் அஸ்தங்க தோஷம் பெற்று நின்றாலும், அன்றாடம் உணவு கிடைப்பதே பெரும்பாடுதான்.

சூரியனும், சனியும் கூடி நிற்க, சுக்கிரனும்,செவ்வாயும் ஆறினில் அமர, அல்லது சுக்கிரன், செவ்வாய், சனி ஆறில் அமர சோற்றுக்காக கையேந்துவான்.

சந்திரன், சுக்கிரன் பலப்பட்டு நிற்க, இலக்கினாதிபதி, இரண்டாமதிபதியுடன் சனி கூடி நின்றாலும், பசி நேரத்தில் உணவு கிட்டாது.

நின்ற வீட்டோன் மறைவுராசிகள் ஒன்றிலமர்வதும், ஐந்தாமதிபதி நீசராசியில் நிற்பதும், உணவு கிடைப்பதை தடைசெய்யும் அமைப்பாகும்.

இரண்டாமதிபதி நீசக்கிரகப் பார்வை பெறுவதும், இரண்டிலிருக்கும் இராகு, கேதுவுடன் மாந்தி கூடுவதும், உணவு வழங்கியோரை பழித்துப் பேசும் நிலையாகும்.

உடல் வளர்க்க மட்டுமல்ல, உடலோடு இணைந்த  ஆத்மாவுக்கான கர்மத்தை நிறைவேற்ற உணவு தேவைதான். ஆனால், உடல் அறியும் அளவுக்கு, உணவைப்பற்றி ஆத்மா அறிந்திருப்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை.
அதனால், உடலுக்கான ஊட்டத்தைத் தர, ஆத்மாவுக்கும் அவசியம் உண்டு.. ஆனால், உணவுக்காக ஐம்புலன்களுக்கு கடிவாளம் போடாமல் அலைய விட்டால், வலையில் சிக்கிய பறவைகள், விலங்குகள் போல் சிக்கிக் கொள்ளவேண்டும்.

வலை என்பதற்கு பொறி என்றொரு அர்த்தம் உண்டு. பொறி என்பதற்கு துளை, ஓட்டை,, துவாரம் என்றும் அர்த்தம் உண்டு.

விலங்குகள், பறவைகளைப் பிடிக்க, மனிதன் வலையெனும் பொறியைப் பயன்படுத்துகிறானோ, அதேபோல், இறைவன் மனிதர்களைப் பிடிக்க, மாயையில் வீழ்த்த, மனித உடம்போடு ஒன்பது ஓட்டையை வைத்து தைத்து அனுப்பினான். ஒன்பது வாசலுக்குள் நுழைந்து பார்த்த மனிதன், தன் கர்மாவால் ஆத்மாவை கழுவ முடியவில்லை. மாயமானின் கறிச்சுவையில் மயங்கிவிட்டான். காரணம், இந்த ஒன்பது பொறிகளில் ஐம்புலன்களில் மட்டும் ஏழுபொறிகள் உள்ளன. இதில், வாயெனும் ஒரு வலைக்கு வடிகட்டியை பொருத்தினால், உலகிலுள்ள பெருங்கேடுகளை எல்லாம் களைந்து விடலாம்.

உலகின் ஒருபுறம் கொளுத்த உணவை உண்பவன். மறுபுறம் உண்ண உணவு கிடைக்காதவன். இந்த ஏற்றத்தாழ்வை, வளமான நாடு, வறிய நாட்டின் வறுமையைப்போக்கும். இதேபோல், என் சகமனிதனின் வயிற்றுப்பசியை போக்குவது என் கடமையல்லவா?  தனக்காக சமைக்கப்படும் உணவுப் பொருளில், ஒரு கைப்பிடியை தினமும் எடுத்து வைத்து வந்தால்குறிப்பிட்ட நாளுக்குள் தேவையான அளவு உணவுப்பொருட்கள் சேர்ந்துவிடும். என் வயிற்றுக்கான உணவைக் குறைத்து, அந்த உணவுப்பொருட்களில் இருந்து உணவு தயாரித்து வறியோர்க்கும், பிணியோர்க்கும், முதியோர்க்கும் வழங்கினால் ஒருபிறவிக்குண்டான  கருமத்தைத் தொலைத்துவிடும் அல்லவா?
பசியின் கருவைக் கலைக்க முயல்வோம்.
  வாழ்க தமிழ்! வாழ்க வாழ்கவே!.

முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு
ஆத்தூர். அஞசல் 624701
கைபேசி 91501 06069.
ஆத்தூர் வட்டம்.
 திண்டுக்கல் மாவட்டம்.


   





No comments:

Post a Comment