Saturday 29 November 2014

"மேளம் கொட்டு….. தாலி கட்டு…” பாகம். 4.


 
இந்த பதிவில் மறைவிடங்களான 6,8,12ல் களத்திரக்காரகன், களத்திர ஸ்தானாதிபதி, குடும்பாதிபதி, இவர்கள் இருந்தால் என்னநிகழும் என்பதைக் காண்போம்.

பொதுவாக, ஜோதிடக் கல்வியில் 6,8,12 மிடங்களின் அதிபதிகள் நன்மை எதுவும் செய்வதில்லை என்று படித்துள்ளோம். முதலில், ஆறாமிடம் என்பது ஜாதகரின் கடனையும், வழக்கையும், திருமணப் பந்தம் முறிவு அல்லது திருமணம் நிகழாதிருத்தல், தன் மனைவியின் மேல் ஆதிக்கம் செய்வது போன்ற காரகங்களைக் குறிக்கும் இடமாகும். இந்த இடத்தில் ஜாதகரின் இலக்கின அதிபதி சம்பந்தப்பட்டால், அதாவது ஜாதகரை இயக்கும் கிரகம் ஆறில் இருந்தால், கடன், வழக்கு, திருமண முறிவு முதலியவற்றில் சிக்குவார் என்பதாம். அதேபோல், ஆறாமதிபதி இலக்கினத்தில் அமர்ந்தால், கடன், வழக்கு ஜாதகரிடம் நிரந்றடமாய் இருக்கும் என்பதாம்.

இலக்கினத்திற்கு ஏழாமிடம் என்பது ஜாதகரின் மனைவியைக் குறிக்குமிடம் என்பதாக முன்பே கண்டுள்ளோம். அதனால், ஏழாமிடத்திற்கு பனிரெண்டாமிடமே ஜாதகரின் வாழ்க்கைத்துணைக்கு விரைய ஸ்தானமாகும். அதுவே நம் ஜாதகர்க்கு பகையைக் குறிக்கும் ஸ்தானமுமாகும். ஜாதகரின் வாழ்க்கைத்துணையைக் குறிக்கும் ஏழாமதிபதி, அந்த ஸ்தானத்திற்கு பனிரெண்டில் இருந்தால், இருவரின் பிரிவினைக்கும் வாய்ப்புண்டு.

இலக்கினத்திற்கு எட்டாமிடத்தைக் கொண்டு ஆயுள், வலி, வேதனை, துரதிஷ்டம், போராட்டம். தெய்வக் குற்றம், தெய்வ அருள் கிட்டாத நிலை, ஜாதகரின் அதர்ம சிந்தனை, அவமானம், எதிரிகள் தொல்லை போன்ற கெடுபலன்கள் அனைத்தும் நடக்கும்.

இலக்கினாதிபதி எட்டாமிடத்தில் இருக்கும் போது, இதுபோன்ற காரகப் பலன்களே நடக்கிறது. இதுவே இலக்கினத்திற்கு ஏழாமிடத்திற்கு இரண்டாமிடம் என்பது வாழ்க்கைத் துணையின் குடும்பஸ்தானம் அல்லவா? இங்கே பாவக்கிரகங்கள் கூடினாலோ, ஏழாமதிபதிக்கு பகைபெற்ற கிரகங்கள் இருந்தாலோ, வாழ்க்கைத் துணையின் குடும்ப வாழ்வு பாதிக்கிறது. மேலும்,

இலக்கினத்திற்கு விரைய ஸ்றானமான பனிரெண்டாம் வீடு, ஜாதகரின் மோட்ச ஸ்தானமாகும். ஜாதகரின் ஆன்மா பெறும் விடுதலையைக் குறிப்பிடும் இடமாகும். வாழ்க்கைத் துணையின் ஏழாமிடத்திற்கு ஆறாமிடம், ஜாதகரின் விடுதலை வீடாகும். மேலும், ஜாதகரின் ஐந்தாமிடத்திற்கு எட்டாமிடமும் ஜாதகரின் மக்களிடமிருந்து விடுதலையைக் குறிக்கும் வீடாகும். மனைவி, மக்களிடமிருந்து விடுதலை பெறும் இடமே, ஜாதகரின் பனிரெண்டாமிடமாகும்.

சிலருக்கு திருமணம் நடப்பதில் சிக்கலும், காலதாமதமும், பலருக்கு நடக்காமலே போயும் விடுகிறது. இன்னும் சிலருக்கோ திருமண வாழ்விலே பிடித்தம் இல்லாமல், தனிக் கட்டையாகவே காலத்தை கடத்தி விடுகின்றனர்.

ஒரு ஜாதகர் ஆணாக இருந்தால், அவருக்கு களத்திரக் காரகன் அதாவது மனைவியைத் தருபவர் சுக்கிரன் என்றும், பெண்ணாக இருந்தால், கணவனைத் தரும் கிரகம் செவ்வாய் என்பதும் எல்லோருக்கும் தேரியும்.  இப்போது ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாகியோ, மறைவுவீடுகளிலோ, அஸ்தங்கம் அடைந்து இருந்தாலும், பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் நீசமாகியோ, மறைவுவீடுகளில் இருந்தாலோ, அஸ்தங்கம் அடைந்து இருந்தாலும், திருமணத்தின் மேல் நாட்டமிருக்காது. இதேபோல் இருவருக்கும் களத்திரவீட்டின் அதிபதி நீசமோ, மறைவு வீடுகளிலோ, அஸ்தங்கமோ அடைந்து இருந்தாலும், திருமத்தின் மேல் நாட்டமிருக்காது. ஒருவரின் களத்திரகாரகனுக்கு, ஏழாம்வீட்டின் அதிபதி மறைவிடங்களில் இருந்தாலும் காலதாமத திருமணம் தான்.

களத்திர வீட்டின் அதிபதி பலமற்று, புத்திர வீட்டின் அதிபதி பலம்பெற்று இருந்தாலும், திருமணத்தை விரும்ப மாட்டார்.

ஏழாம் வீட்டின் அதிபதியும், களத்திரகாரகனும், குடும்பதிபதியும் பலமற்று இருந்தால், திருமணம் நடக்க வாய்ப்பு குறைவுதான். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குடும்பவீட்டில் சனி, செவ்வாய் ஏழாமதியுடன் தொடர்புடன் இருந்தாலும், குடும்பதிபதி சனி, செவ்வாய் சாரம் பெற்று இருந்தாலும், ஏழாமிடத்தில் சனி, இராகு கூடி நின்றாலும், ஏழாமதிபதி அம்சத்தில் சனி, செவ்வாயுடன் இருந்தாலும் கலகம் செய்து சண்டை, சச்சரவு செய்பவளே மனைவியாகவோ, கணவனாகவோ வருவர்.

ஆணின் ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஏழாம்வீட்டில் சூரியன், செவ்வாய் இருந்தாலும், அந்தவீட்டோடு தொடர்பு கொண்டிருந்தாலும், மணமுடிக் கூடிய பெண் வெப்ப உடம்புக்காரியாக இருப்பாள். அதேபோல, ஏழாம் வீட்டில் புதன், குரு சனி, இவர்களில் ஒருவர் இருந்தாலும், அல்லது எவரேனும் இருவரோ, அல்லது மூவரோ   இருந்தாலும், ஏதேனும் வகையில் மூவரில் ஒருவர் தொடர்பு கொண்டு இருந்தாலும் காற்றுப் பிடிப்புள்ளவளும், பெருத்த உடம்புள்ளவளாகவும் வாழ்க்கைத் துணையாக வந்து வாய்ப்பாள். அதே போல், சந்திரன், சுக்கிரன் இருவரும் கூடி ஏழில் இருந்தாலோ, இருவரில் ஒருவர் இருந்தாலோ, அல்லது இவர்களின் தொடர்பு கொண்டாலோ நீர்ப்பிடிப்புள்ளவளே வந்து வாய்ப்பாள். இவள் இசைஞானம் மிக்கவளாகவும், கலைகள் மேல் தீராக் காதல் கொண்டவளாகவும் இருப்பாள்.

ஒரு சின்ன விடயம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

இந்த பூமி நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற நான்கு கூறுகளை தனக்குள்ளே கொண்டுள்ளது. மேடம், சிம்மம், தனுசு இம்மூன்று இராசிகளும் நெருப்புத் தன்மையைக் கொண்டது. இரிடபம், கன்னி, மகரம்  என்ற இம்மூன்று இராசிகளும் நிலத்தன்மையைக் கொண்டது. மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்றும் காற்றுத்தன்மையைக் கொண்டவை. கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்றும் நீர்த்தன்மையைக் கொண்டவை. இப்போது ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஏழாமதிபதி நெருப்பு, நிலம், காற்று நீர் இராசிகளில் அமர்ந்தாலும், காரகன் சுக்கிரன் தொடர்பு கொண்டாலும் இராசிகளின் தன்மைக்கு ஏற்ப மனைவி வந்து அமைவாள்.

உதாரணத்திற்கு, காற்றின் இராசியே ஏழாமிடமாகி காற்றின் கிரகம் அமர்ந்தால், காற்று வலுக்கும். அப்போது பெருத்த உடல் கொண்டவள் மனைவியாக வருவாள். நெருப்பின் இராசியில் காற்றின் கிரகம் அமர்ந்தால், பெருநெருப்பாக மாறிவிடும் அல்லவா? அதேபோல், நெருப்புடன் நீர் சேர்ந்தால், வெப்பம் இருக்காது அல்லவா? காற்றோடு நீர் சேர்ந்தால், பெருமழையும் கொந்தளிப்பும் இருக்குமல்லவா? இந்த கருத்து அனுபவத்தில் சரியாக உள்ளது.

திருமணம் என்கிற மாபெரும் உணர்வுகளின் தொகுப்பை ஜோதிடத்தில் அணுகும் விதத்தைக் காண்கிறோம். இங்கே காரகங்களை மட்டும் மையப்படுத்தி சொல்வதற்கு முயற்சி செய்கிறேன். அவ்வளவுதான்.

 

No comments:

Post a Comment