Tuesday 4 November 2014

யோகங்கள். 2.


11. வாஞ்சனா சோர யோகம்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் பாவக்கிரகங்களினால் சூழப்பட்டு இருக்க, இலக்கினாதிபதி நின்ற வீட்டுக்குடையவனுக்கு கேந்திரகோணங்களில் மாந்தி எனும் குளிகன் நிற்க, அல்லது மாந்தி கேந்திரகோணதிபதிகளுடன் கூடி நின்றாலும், இலக்கினாதிபதி இராகு, கேது, சனி ஆகிய கிரகங்களுடன் கூடி நின்றாலும், இந்த யோகம் ஏற்படும்
இவர் பிறரால் ஏமாற்றப்படுவர், பொருள் திருடுபோகும், சொத்துகள் பறிபோகும். எந்தகாரியத்தைத் தொட்டாலும் விளங்காது. ஒருவித பயத்துடன் வாழவேண்டி இருக்கும்.

12. புஷ்கலா யோகம்.
இந்த யோகம் ஐந்து விதக் கிரக அமைப்புகளில் உருவாகின்றது. 1) இலக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திரங்களில் இருந்தாலும், 2) இலக்கினாதிபதினும், சந்திரனும் பரிவர்த்தனைப் பெற்றாலும், 3) சந்திரன் இருக்கும் வீட்டின் அதிபதியும், இலக்கினாதிபதி இருக்கும் வீட்டின் அதிபதியும் கேந்திரங்களில் இருந்தாலும் (அவர்கள் நண்பர்களாக இருந்தால் மிகவும் நல்லது). 4) சந்திரன் நின்ற வீட்டின் அதிபதி, இலக்கினத்துக்கோ, சந்திரனுக்கோ கேந்திரம் பெற்றாலும், 5) இலக்கினத்துக்கு இரண்டுக்குடையக் கிரகம், இலக்கினம், சந்திரனுக்கும் கேந்திரம்பெற்று இருந்தாலும் இந்த புஷ்கலா யோகம் ஏற்படுகிறது.
நல்ல செல்வம், செல்வாக்கு, கெளரவம், இனிமையான, திறமையான பேச்சுவளம், புகழ், அரசப்பதவிகள், அரசால் கெள்ரவிக்கப்படல், எதிரிகளை வெல்லும் நிலையும் ஏற்படும்.

13. நீச பங்க இராஜயோகம்_ ஒரு விளக்கம்.

ஒரு கிரகம் நீசமடைந்து விட்டாலே, அத்தோடு அந்த கிரகம் தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்று அர்த்தமாகி விடாது. நீசமடைந்து விட்டாலும், அதற்கும் சில விதிவிலக்குகள் உண்டு. நாம் பல நேரங்களில் விதிவிலக்குகளில் கவனம் செலுத்துவதில்லை. நீசம் பங்கமடைய ஐந்து விதிகள் உண்டு. 1) நீசன் நின்ற ராசியதிபதி ஆட்சி, உச்சமடைந்தால், 2) நீசன் நின்ற இராசியதிபதி, சந்திரனுக்கு கேந்திரம் பெற்றால், அல்லது இலக்கினக் கேந்திரம் பெற்றால், 3) நீசமான கிரகத்துக்கு சந்திரன் கேந்திரம் பெற்றால், 4) நீசன் நின்ற இராசியின் அதிபதி, நீசக்கிரகத்துக்கு கேந்திரத்தில் இருந்தால், 5) நீசக்கிரகமும், நீச ராசியின் அதிபதியும் பரிவர்த்தனைப் பெற்றாலும், அந்த கிரகம் நீசப்பங்கம் ஏற்பட்டு நல்லபலனைத் தருகிறது.

14. அதியோகம்.  
சந்திரனுக்கு 6,7,8 ல் சுபக்கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் ஏற்படுகிறது. 6,8 மிடங்கள் மறைவுஸ்தானங்களாக இருந்தாலும், அவை முறையே உபஜெயம், பணபரஸ்தானத்தில் வருவதால், இந்த யோகம் கிடைக்கும். இந்த இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சுபக்கிரகங்கள் இருந்தால், அதற்கு தகுந்தாற்போல், பலன்களும் மாறுபட வாய்ப்புள்ளது. கெட்ட இடங்களில் நல்ல கிரகங்கள் இருக்கும் போது பலன்களும் மாறுபாடு அடையும். இந்த் யோகம் சந்திரனை மையப்படுத்தி வருவதாகும். ஆதலால், இலக்கினத்திற்கு பார்க்கக் கூடாது.
இந்த அதியோகம் மூன்று வகைப்படும். 1) சுப அதியோகம், 2) பாப அதியோகம், 3) சம
அதியோகம் என்பதாகும்.
சுப அதியோகம்: 7மிடத்தில் மூன்று சுபக்கிரகங்கள் இருந்தால்,
பாப அதியோகம்: 8 மிடத்தில் மூன்று சுபக்கிரகங்களும் இருந்தால்,
சம அதியோகம்: சந்திரனுக்கு 6 மிடத்தில் மூன்று கிரகங்களும் இருந்தாலும், 6,8ல் கலந்து இருந்தாலோ, அல்லது 6,7,8 ல் கலந்து இருந்தாலோ சமாதியோகம் ஏற்படும்.
இந்த மூன்று சுபக்கிரகங்களும் இருக்கும் 6,7,8 ம்ராசிகள் நட்பு பகை நீசமாக இருந்தால், அதற்கு தகுந்தாற்போல், பலன்கள் மாறுபட்டு நடக்கும். அதேபோல் ஆட்சி, உச்சம் பெற்றால் பலன்கள் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

15. அமலா யோகம்.
 இலக்கினம், இராசிக்கு 10ல் மூன்று சுபக்கிரகங்களும் (குரு, சுக்கிரன், புதன்) உன்று கூடியோ, அல்லது தனித்தோ இருந்தாலும் இந்த யோகம் ஏற்படும். பத்தாமிடம் என்பது சுபக்கிரகங்களுக்கு கேந்திர ஸ்தானமாக வருவதால், கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகிறதா? என்பதையும், நண்பர்கள் கவனிக்கவேண்டுகிறேன்.
ஜாதகர் பக்திமானாகவும், நன்னடத்தையுள்ளவராகவும், நல்லமனதுடையவராகவும் இருப்பார். உஅறவினர்கள் நண்பர்களால் அதிகம் நேசிக்கப்படுவார். சுகஜீவன், அதிகாரமிக்கவர், கெளரவப்பதவி தேடிவரும். பெயரும் புகழும் செல்வாக்கும் கூடும்.

16.ஹம்ஸ யோகம்.
இலக்கினத்துக்கு கேந்திரங்களில் குரு ஆட்சி மற்றும் உச்சம் பெற்று இருந்தால், ஹம்ஸயோகம் ஏற்படும்.மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய இராசிகளுக்கு கேந்திரத்தில் ஆட்சி பெறும் நிலை குருவுக்கு ஏற்படும். மேஷத்துக்கு 4ல், துலாத்திற்கு 10ல் உச்சம் பெறும் நிலை ஏற்படும். தலைமைதாங்கும் தகுதியும், செல்வம், செல்வாக்கு, கெளரவமிக்க பதவி, இவன் விரல் அசைந்தால் ஊரே அசையும், தர்மகர்த்தா, பெரியபிரபு, அரசியல் அதிகாரப்பதவிகள், உபதேசித்தல், வழிகாட்டுதல், மடாதிக்கம், வசதியான வாழ்வு முதலியன நல்லபலன்களே ஏற்படும்.
இந்த யோகத்தைப்பற்றி பல கருத்துகளை பதிவு செய்யலாம். நாமிங்கே தேவையான வற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.
.
 17.மாளவியா யோகம்
உங்கள் இலக்கினத்துக்கு பஞ்சமகா புருடக் கிரகமான நீர்த்த்துவக் கிரகமான சுக்கிரன் கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால், இந்த மாளவியா யோகம் ஏற்படும். வாழ்வின் இன்பங்களைஅதிகம் தரும் கிரகமான சுக்கிரன், சுகஜீவியாய் வாழவைப்பான். வாகன சுகமும், ஆடம்பர வாழ்வையும் மாளிகையில் வாழும் நிலையையும், இந்திரபோக வாழ்வையும் வாரி வழங்குவார். இதிலும் சிலதடைகள் உண்டு. பழுதில்லாத சுக்கிரனால் தான், பலன்களை வாரி வழங்க இயலும்.  

18. சச யோகம்.
பஞ்சமகா புருடக் கிரகங்களான சனி, செவ்வாய், புதன், சுக்கிரன், குரு ஆகியவற்றில், சனியை மையப்படுத்தி, இந்த யோகம் உருவாகியுள்ளது. இலக்கினத்துக்கு கேந்திரங்களில் சனி இருக்க சசயோகம் உண்டாகும். யோகபங்கம் அடையாத சனி, மிக நல்லபலன்களையேத் தருவார். இந்த சச யோக அமைப்பைப் பெற்ற ஜாதகரின் நடத்தை மட்டும் சற்று சரியிருக்காது. பெண்கள் விடயத்தில் அப்படி இப்படியென்று, சற்று கும்மாளம் போட்டு இருப்பார். மற்றபடி சுபக்கிரகங்கள் தரும் யோகப்பலனுக்கு சற்றும் குறையாமல் தருவார்.

19. ருசக யோகம்.
பஞ்சமகா புருடக் கிரகங்களில் செவ்வாயை மையப்படுத்தி, இந்த யோகம் அமையும்இலக்கினக் கேந்திரங்கள் ஒன்றில் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்திருந்தால், இந்த யோகம் ஏற்படும். இந்த யோகம் மிகப் பலமானது என்று மூலநூல்கள் கூறுகின்றன.
அறிவு கூர்மை, புத்திசாலித்தனம், வீரபராக்கிரம்ம், செல்வம், செல்வாக்கு, விளையாட்டு வீர்ர், ஊர்பெரியபெரியதனக்காரர், காவல், இராணுவப்பணி, அரசியல்வாதி, மலைத்தோட்ட அதிபர்கள் முதலான ஏற்றமிகு பலன்களே தருகின்றன.

20. பத்ர யோகம்.
பஞ்சமகா புருடக் கிரகங்களில் புதனை மையப்படுத்தி இந்த யோகம் அமையும். இலக்கினத்திற்கு கேந்திரங்களில் ஒன்றில் புதன் ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்திருந்தால், இந்த யோகம் ஏற்படும். புதன் ஆட்சி, உச்சம் பெறாமல் நட்பு பெற்று அமர்ந்தாலும், இந்த யோகம், அமர்ந்திருக்கும் பாவகத் தன்மைக்குத் தகுந்தாற்போல் நன்மையானப் பலன்களை செய்யும்ஒரு சின்ன விளக்கம். மிதுன லக்கினமானால், ஏழில்(தனுசு) கேந்திரம் பெறுவார். அப்போது கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுமல்லவா?. அப்போது புதன் திக்பலம் பெறுவதால், நன்மையான பலனே தரும். மீன வீடான பத்தில் புதன் நீசமாகி, பத்ரயோகத்தில் இருப்பதால், நீசம் பங்கப் படும். தனுசு, மீனம் இலக்கினத்தைக் கொண்டவர்களுக்கு ஏழிலுள்ள புதனால் கடுமையான பாதிப்புகள் நிகழும். எந்த ஜாதகத்திலும் புதனோடு, சுக்கிரன் கேந்திரத்தில் (1,4,7,10) இருக்க, தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். காரணம், புதன் _ ஸ்ரீவிஷ்ணு அம்சம் கொண்டது. சுக்கிரன் _ ஸ்ரீஇலட்சுமிதேவி அம்சம் கொண்டது. இந்த கிரகங்கள் விஷ்ணு, இலட்சுமி கூடும் யோகத்தைக் காட்டுவதால், தோஷங்கள் யாவும் அற்றுப்போகும். “காணு இலக்கினம் நாலேழ் பத்தில் கோனு சுக்கிரன், புந்தியும் கூடிட பாபக்கிரக தோஷம் பானு கண்ட பனிபோல நீங்குமேஎன்றே பாடல்வரிகள் உண்டு. பொதுவாக ஏழில் புதன் இருக்க, மனைவி அதிபுத்திசாலியாக, கணவனை மிஞ்சி இருப்பார். இந்த அமைப்புடைய ஜாதகர் மனைவி சொல் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

1 comment: