Friday 13 March 2015

இன்று ஒரு கதை படிப்போமா?



அந்த ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரின் மனைவி காலமாகிவிட்டாள். அவர்களுக்கு  குழந்தைகளும் இல்லை. மேற்கொண்டு சொந்தம் பந்தம் என சொல்லிக் கொள்ளக்கூட எவரும் இல்லை. ஆனால், பணமும், நகையும், செல்வங்கள் கணக்கில்லாமல் குவிந்து கிடந்தது. அந்த பணக்காரர்க்கு மனதில் பெரும் குறை. இவ்வளவு இருந்தும், அதை அனுபவிக்க என்று ஒரு பிள்ளையில்லையே என்ற பெருங்கவலை ஆட்டிப்படைத்தது. நிம்மதியின்றி தவித்தவர், ஊரின் மேற்குப்பகுதியில் தங்கியிருக்கும், ஒரு சாமியாரை சந்திக்க முடிவு செய்தார்.
அன்று மாலையே சாமியாரை சந்தித்தார். அப்போது, பணக்காரர் சாமியாரிடம், “ சாமி, கணக்குவழக்கில்லாம சொத்தும், பணமும் இருந்தும் மனசுல நிம்மதியில்லாமப் போச்சு, நா நிம்மதியடையனும்னா என்ன செய்யனும்என்று கேட்டார். அந்த பணக்கார்ரின் நிலையை ஞானக்கண்ணால் கண்ட சாமியார், “ உங்களோட சொத்தும், செல்வங்களும் தான், பிரச்சனை. அத தொலச்சுக்கட்டிட்டீங்கன்னா, நிம்மதியா இருக்கலாம்என்றார் சாமியார். “அதற்கு நான் என்ன செய்யவேண்டும் சாமீஎன்றார் பணக்காரர். அதற்கு சாமியார், “ உங்களோட பணம் நகைகள எல்லாம் கொண்டுவாங்க. நாளைக்கு பூஜை பண்ணித்தாரேன், அத எல்லாருக்கும் தானமா கொடுங்க, நிம்மதியடைவீங்கஎன்றார். அதைக்கேட்ட பணக்கார்ர், “எனக்கு நின்னதி கிடைக்கும்னா, எல்லாத்தையும் இழக்கத்தயார்என்று, நாளை பணம், நகையுடன் வருவதாகச் சொல்லிச் சென்றார்.   
விடிந்தது. சாமியாரின் இருப்பிடத்தை நோக்கி தூக்கமாட்டாமல், ஒரு மூட்டையைத் தூக்கிக் கொண்டு, பணக்காரர் சென்று கொண்டிருந்தார். அரசமரத்தடியும் வந்துவிட்டது. அங்கே சாமியாரும் கண்ணைமூடிக்கொண்டு இருக்க, அவரின் காலடியில் பணமூட்டையை, “தொபுக்கடீர்எனப்போட்டார். சாமியார் கண்விழிக்கவில்லை. நேரம் சென்று கொண்டிருந்தது. காலையில் எழுந்ததும், காப்பித்தண்ணிகூட குடிக்காதது பணக்காரர்க்கு நினைவிற்கு வந்தது. இங்கே இவ்வளவு நேரம் இருந்ததற்கு சாப்பிட்டு வந்திருக்கலாமோ என்று எண்ணினார். வயிறு பசி எடுத்தது.
மெதுவாக கண்விழித்தார் சாமியார். அந்த பணக்காரரை ஒருபார்வையும், பணமூட்டையை ஒரு பார்வையாகவும் பார்த்தார்.  என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சிரமப்பட்டு பணக்கார்ர் தூக்கி வந்த பணமூட்டையை, வெகு லாவகமாக தூக்கி முதுகில் போட்டுக்கொண்டு குளக்கரையில் ஓட ஆரம்பித்தார். மிரண்டு போயிட்டார் பணக்காரர். என்ன நடந்தது என்று முடிவுக்கு வரும் முன்னே, சாமியார் பணமூட்டையுடன் குளக்கரையில் காத தூரம் ஓடிவிட்டார். இவ்வளவு காலம் சிரமப்பட்டு சம்பாதித்த பணம், கண்முன்னுக்கே, பறிபோவதைக் கண்ட பணக்காரனும் சாமியாரை விரட்டத் துவங்கினார். இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஓடிக் கொண்டிருந்தனர்கொஞ்சம் கால் இடறினால், குளத்துக்குள் தான் உருண்டு விழவேண்டும். அனாவசியமா சாமியார் ஓடிக்கொண்டிருக்க, பாவம் அனுபவமில்லாத பணக்காரன் திணறித்தான் போனான். சாமியார் மிகவேகமாக ஓடி மீண்டும் அரசமரத்தடிக்கே வந்து விட்டார். மேலும், கீழும் மூச்சுவாங்கியபடி, பணக்காரனும் மரத்தடிக்கு வந்து சேர்ந்து, சாமியாரிடமிருந்த பணமூட்டையை, “வெடுக்கெனப் புடுங்கி, தன்னருகே வைத்துக் கொண்டான். மூச்சு வாங்குவது தணித்தும் சாமியாரை அடிக்காத குறையாக எச்சரித்தான். அதற்கு சாமியார், “ உன்னோட மனநிம்மதியக் கெடுத்த பொருள்மேல இவ்வளவு ஆச வச்சிருக்கிற நீ எப்படி மன நிம்மதியா வாழமுடியும். இந்த பணம் உனக்கிட்ட இருந்த வரைக்கும் நிம்மதியா? நீயில்லை. அதே பொருள் எனக்கிட்ட வந்த பிறகும், உனக்கு நிம்மதியில்ல. அதனால, நீயா எப்போது விருப்பப் படுறீயோ அப்போ தானம் பண்ணு. அதையும் மனநிறைவாய் பண்ணுஎன்றார் சாமியார்.
எந்த செயலிலும் ஓர் நிறைவு வேண்டும்.

நிறைவு இல்லாத வினை, வீணானதே. அதைப் பெறுவதைக்காட்டிலும் இழப்பதே மேல்.               

No comments:

Post a Comment