Friday 14 August 2015

மனிதனின் மரணநாளின் மர்மங்கள்.3. முத்துப்பிள்ளை




        
 இந்த இருபாடல்களையும் தவிர்த்து 108 ம்  நம்பர் திருக்கோவில் அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கத்தில் தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்கள், ஒவ்வொன்றிற்கும் உள்ள நட்சத்திரக் கால அளவை நான்கு சமபங்காக்கி, அதில்  முதல் பாகத்தில் மரணம் ஏற்படில் 10 மாதமும், இரண்டாம் பாகத்தில் மரணம் ஏற்படில் ஆறுமாதமும், மூன்றாம் பாகத்தில் மரணம் ஏற்படில் ஐந்து மாதமும், நான்காம் பாகத்திலும், திரிபாத நட்சத்திரங்களிலும் மரணம் ஏற்படிலும் மூன்று மாதம் வரையிலும் வீட்டைஅடைத்து  விளக்கேற்றி வழிபட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிஷ்டா பஞ்சமி எனும் தோஷ நட்சத்திரங்களில் இறந்தவர்கள் நரகத்திற்குத்தான் செல்வார்களா? அவர்களின் ஆத்மாவின் நிலை என்ன? குறிப்பிட்டக் காலங்களில் உறவினர்கள் விளக்கேற்றி வழிபட்டால் சொர்க்கம் செல்வார்களா? ஆத்மாவைப் பற்றி ஞானியர்களின் கருத்தென்ன? குறிப்பிட்ட இந்த நட்சத்திரங்கள் மட்டும், யாரும் இறக்கக் கூடாத நட்சத்திரமாக ஏன் சொல்லப்பட்டுள்ளன? விரிவாகக் காண்போம்.

தனிஷ்டாபஞ்சமி என்னும் இறக்கக் கூடாத நட்சத்திரங்களும், திரிபாத (மூன்று பாதங்கள்), அர்த்த (இருபாதம்), ரோகிணி உள்ளிட்ட 13 நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால், அவர் ஆத்மா சொர்க்கம் செல்வதில் தடையேதும் ஏற்படுமா? அல்லது நரகம்தான் கிட்டுமா? இது போன்ற மரணத்திற்குப் பிறகு நிகழப்போகும் சூட்சுமமான கேள்விகளுக்கு யூகமானப் பதில்களைத் தான் தரமுடியும்.

ஒருவன் வாழும் காலங்களில் மறுமை எனும் சொர்க்கக் கனவு காணவேண்டும்.சொர்க்கத்தை அடையவேண்டும் என்கிற ஆழ்மனப் பதிவே, அவனை நெறிமுறைத் தவறாத வாழ்க்கையை வாழவைக்கும். எவனொருவன் அமைதியும், மனத்தாழ்ச்சியுடன் வாழ்கிறானோ, அவனால், “இறை” எனும் பேரொளியில் எளிதாய் கலக்கமுடியும். இதையெல்லாம் விட்டுவிட்டு வாழும்போது மனம் போனப் போக்கில் வாழ்ந்துவிட்டு, சாகும்போது தனிஷ்டாபஞ்சமி எனும், அவிட்டத்தில் சாகப்போகிறோமோ, நரகத்தில் தள்ளப்ப்டடு விடுவோமோ என ஆத்மாவுக்காக அழுது புலம்பக் கூடாது.

வாழும்போது நீதி நெறி தவறாமல் வாழ்ந்தவன், தனிஷ்டாபஞ்சமி எனும் இறக்கக் கூடாத நட்சத்திரத்தில் இறந்தாலும், அவன் சொர்க்கத்திற்கே செல்லுவான்.

இந்த பூவுலகில் ஓர் ஆத்மா ஏழு பிறவிகள் எடுப்பதாகவும், இந்த ஏழுபிறவிகளுக்கும் 360 வருடங்களை ஆயுட்காலமாக ஆண்டவன் தந்துள்ள்ளாரெனவும், நம் பெரியவர்களால் கூறப் படுகிறது. இந்தக் கூற்றே உண்மையானதாகவே இருந்தாலும், நம் மொத்த ஆயுட்காலமான 360 வருடங்கள், நம் ஆத்மா ஈடேற்றத்துக்கான கால அளவுகள் ஆகும். இதில் நம் கர்மவினைகளை எல்லாம் அழித்து, இழந்த உறவுகளை எல்லாம் ஒன்றாக்கி வாழ்ந்து விடுவோமேயானால், நம் ஆத்மா, “ இறை” எனும் “நிறை” யில் இணைந்துவிடும்.

ஆயிரம் பேர் ஓடிவரும் மராத்தான் ஓட்டப்பாந்தயத்தில், கடைசியில் ஓடிவரும் ஒருவன் எல்லோரையும் பின்தள்ளிவிட்டு முதல் ஆளாக வருவதைப்போல, ஏதோவொரு சில ஆத்மாக்கள் தான் கர்மவினைகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, முதல் ஆளாய் இறைவனின் பேரொளியில் கலக்கின்றன.

வாதுக்குச் சண்டைக்குப் போவார்; வருவார்; வழக்குரைப்பர்;
தீதுக்கு உதவியும் செய்திடுவார்; தினம் தேடி ஒன்று
மாதுக்கு அளித்து மயங்கிடுவார்; விதி மாறும் மட்டும்
ஏதுக்கு இவர் பிறந்தார் இறைவா கச்சி ஏகம்பனே.
       
ஓயாமல் பொய் சொல்வார்; நல்லோரை நிந்திப்பர்; உற்றுப்பெற்ற
தாயாரை வைவர்; சதி ஆயிரம் செய்வர்; சாத்திரங்கள்
ஆயார்; பிறர்க்கு உபகாரம் செய்யார்; தமை அண்டினோர் கொள்
றீ(ஈ)யார்; இருந்தென்ன? போயென்ன? காண் கச்சி ஏகம்பனே.

கல்லார் சிவகதை; நல்லோர் தமக்குக் கனவிலும் மெய்
சொல்லார்; பசித்தவர்க்கு அன்னம் கொடார்; குரு சொன்னபடி
நில்லார்; அறத்தை நினையார்; நின் நாமம் நினைவில் சற்றும்
இல்லார்; இருந்தென்ன? இறந்தென் புகழ் கச்சி ஏகம்பனே.

என்று மனித உருத்தாங்கிய, மிருக ஜென்மங்களைப் பற்றி திருவெண்காட்டுச் சித்தர்கூறுகிறார்.
       
 இதுபோன்ற வாழ்க்கை முறைகளை பின்பற்றியவர்களால், எந்த நட்சத்திரத்தில் இறந்தாலும், அவர்கள் நரகத்திற்குத்தான் செல்வார்கள்.
        
 தன் இயல்பான நிலையில் ஆத்மா முழுமையடைவது தான் மோட்ச நிலை.
        முழுமையடையாத இன்பநுகர்ச்சியை ஆத்மாவுக்குள் அடக்க நினைப்பது, நரகநிலைதான்.
        
        பிறவி அற்றுப்போவதுதான் மோட்ச நிலை.

மூத்திரக்குழிக்கும் மலக்குழிக்கும் அருகே உள்ள கருக் குழியில், ஆத்மா அடைபடுவது தான் நரகநிலை.

“பிறவாமை வேண்டும். பிறப்புண்டேல், உன்னை என்றும் மறவாமை வரம் வேண்டும்” என்றார் மாணிக்கவாசகப் பெருமான்.

“ஒரு பேரீச்சம் பழத்துண்டைக் கொண்டேனும், உங்களை நரக நெருப்பில் இருந்தேனும், காத்துக்கொள்ளுங்கள்” என்றார் (ஸல்) நபிகள் நாயகம்.

“நல்ல கனி தராத மரம் எல்லாம், வெட்டுண்டு நெருப்பில் எறியப்படும்.” என்றார் ஏசு மகான். நல்ல கனி என்பது ஆத்மாவையும், நெருப்பு என்பது நரகத்தையும் குறிக்கும்.

நமக்கு ஞான வழிகளைத் திறந்து விட்ட ஞானவான்களை எல்லாம் புறக்கணித்து விட்டோம். சொர்க்கவாசல்களில் நுழையவிடாமல், நம் ஆத்மாவுக்கு நாமே கர்மவினைகளால் அடைப்பை ஏற்படுத்திவிட்டோம்.

நம் ஆடம்பரச் செலவுக்காகவும், பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும், மருத்துவச் செலவுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் நாம் கடன்பெறலாம். அவ்வாறு வாங்கியக் கடனை அடைக்கமுடியவில்லை என்றால், நம் சந்ததிகள் எப்பாடுபட்டேனும், அந்தக் கடனைக் கட்டியே தீருவார்கள். ஆனால், நாம் பட்டிருப்பதோ, “ஆத்மாக்கடன்” இதை நம் சந்ததிகளால் அடைக்கமுடியுமா?

என் தகப்பனின் ஆத்மக்கடனை திதி கொடுப்பதால் தீர்ந்து விடுமா? தீர்ந்து விடும் என்றால், என் முன்னோர்களின் ஆத்மக் கடனுக்காகத் தினம்தோறும் திதிகளாகத் தந்துகொண்டே இருக்கவேண்டும் அல்லவா? அப்படியானால் என் அன்றாடக் கடமைகளை நிறைவேற்றுவது எப்போது?

என் ஆத்மக்கடன் இன்னொருவர் திதி கொடுப்பதால், தீர்ந்து விடும் என்றால், நான் ஏன் என் ஆத்மாவுக்காக வாழவேண்டும்.
       
எழும்பாமல் வாசனையைக்
கொன்றோன் ஞானி:
ஏகாமல் வாசனையை
அடித்தோன் சித்தன்

கர்மவினைகளைக் கொல்பவன் ஞானி. கர்மவினைகளை நெருங்கவிடாமல் அடிப்பவன் சித்தன் என அழகாகச் சொல்கிறார் சட்டை முனி சித்தர்.

“ஏகாமல் வாசனையை ஒதுக்கியோன் மனிதன்” என நாம் கர்மவினைகளில் இருந்து ஒதுங்குவோம். எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும், ஆத்மாவின் வழியில் கர்மவினைகளை வென்றிடலாம்.

தனிஷ்டாபஞ்சமி எனும் அவிட்ட அடைப்பில் இறந்தவரின் பூத உடலை, வீட்டின் பிரதான வாசல் வழியாக எடுத்து வராமல், உடல் அருகே தென்னங்கீற்றால் வேயப்பட்ட படல் கட்டி, அந்த படலில் ஒரு ஆள் நுழைந்து வெளியேறும் அளவுக்குக் கிழித்து எடுத்துவிட்டு, அந்த ஓட்டைக்குள் பிணத்தை, அந்த பக்கத்தில் இருந்து, இந்தப் பக்கமாக உருவி எடுத்துக் கொள்வார்கள். அதன்பின் புதைக்கவோ, எரிக்கவோ எடுத்துச் செல்வார்கள்.

நடுத்தர மக்களின் வீடு கட்டும் பாணி 1சென்ட் இடத்திலிருந்து 3 சென்ட் இடத்துக்குள் முடிந்து விடுகிறது. நகர மக்கள் வாடகை வீட்டிலும், வாடகை வீட்டில் வசிக்க இயலாதவர்கள் தெருவோரங்களிலும் குடியிருக்கின்றனர். அதனால்தான் கொல்லைப்புறச் சுவர் இடிக்கும் பரிகாரத்தை கைவிட்டுவிட்டு பிணத்தருகே ஓலைத்தட்டியை வைத்து அதன் வழியே பிணத்தை வெளியே உருவி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்பது புலனாகும்.

ஒரு சமுதாயத்தினர் இறக்கக்கூடாத நாளில் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் செங்கல்லால் கூம்பு வடிவம் வருவது போல நிறுத்தி, அதற்குள் நட்சத்திரங்களுக்குக் குறித்துள்ள கால அளவுப்படி, அத்தனை நாட்களும் அந்திசாய்ந்த வேளையில் எண்ணெய் விளக்கேற்றி பத்திசூடம் காட்டி, இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டிவருவர்.

ஒரு முன்னேறிய சமுதாயத்தினர் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி எனும் ஐந்து நட்சத்திரங்களில் எதில் இறந்தாலும், அந்த வீட்டை 40 நாட்களுக்கு அடைத்து வைத்து விட்டு, வேறு வீட்டில் வசிக்கிவ்றனர். இந்த 40 நாட்களிலும் வீட்டைத் திறந்து விளக்கேற்றி வழிபடுவதில்லை. அதன்பின், மறுநாள் கணபதி ஹோமம், புண்ணியத்தானம் செய்த பின் வீட்டிற்குள் குடி போகின்றன.

வீட்டை அடைத்துவிட்டு வேறுவீட்டில் வசிக்க இயலாதவர்கள், சடலம் இருந்த அறையை மட்டும் 40 நாட்கள் பூட்டி வைக்கின்றனர். 41 ம் நாளில் கணபதிஹோமம், புண்ணியத்தானம் செய்த பின் அந்த அறையையும் பயன்படுத்துகின்றனர்.

இவர்களில் இன்னும் சிலர், இந்த ஐந்து நட்சத்திரங்களில் இறந்தால், இறந்தவரின் உடலை ஓலைப்பாயில் வைத்து, முழு உடலும் வெளியே தெரியாமல் மூடி எடுத்துச் செல்வார்கள். இந்த விதமான பரிகாரங்களுக்கு வீடு அடைக்கவேண்டிய அவசியம் இல்லையாம்.

அவிட்ட அடைப்பில் இறந்தவரின் உடல் இருந்த இடத்தில் நட்சத்திரங்களுக்கு குறித்துள்ள பரிகார நாட்களின் படி, விளக்கேற்றி பத்தி, சூடம் காட்டி, நிறை சொம்பில் நீர்வைத்து, அன்னப்படையலிட்டு இறந்தவரின் ஆத்மா மோட்சநிலை அடைய குடும்பத்தினர் இறைவனை வேண்டுகின்றனர். அதன்பின் அந்த அறையை பூட்டிவிடுகின்றனர்.

இறந்தவரின் உடல் இருந்த இடத்தில், சிறு மேடை அமைத்து, பூசி மெழுகி கோலமிட்டு, அன்றாடம் விளக்கேற்றி, அவரின் ஆன்மா மோட்ச நிலையை அடைய, இறைவனை வேண்டுகின்றனர். அதன் பின் விளக்கு அணையாமல் இருக்க, கூடையை கவிழ்த்து மூடிவைத்து, அதன் அறையை அடைத்து விடுகின்றனர்.

  மனைவி மக்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருமோ, அல்லது மனைவி மக்களோ சூழ்ந்திருக்கவோ இறக்கப் போவரின் தேகத்தை விட்டு ஆத்மா பிரியவேண்டும். எல்லா உறவுகளும் இருந்தும், இறக்கும்போது எந்த உறவுகளும் சூழ்ந்திருக்காமல் ஒருவர் மாள்வது, அந்த ஆத்மாவை அனாதரவாய் விடுவதற்குச் சமம். எல்லா உறவுகளும் சூழ்ந்திருக்க ஒருவர் மாண்டால், அவர் அடைப்பில் இறந்தாலும், அவிட்டத்தில் இறந்ததாகக் கூறமுடியாது. ஆதலால், ஒருவரின் உயிர்பிரியும் போது, அவரின் உறவுகள் சூழ்ந்திருக்க முடியவில்லையெனில், கணவனோ, மனைவியோ, மக்களோ உடன் இருப்பது, அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு, அவரின் ஆத்மாவுக்குச் செய்யும் ஈடேற்றமாகும். அந்த ஆத்மாவுக்கு நிம்மதியைத் தரும்.

கிடத்தி வைக்கப் பட்டிருக்கும் உடல் அருகில், கணவனோ, மனைவியோ, மக்களோ அமர்ந்திருப்பதும், கண்ணீர் சிந்துவதும், உடலின் மேல் விழுந்து புரண்டு அழுது அரற்றுவதும், கணவனின் காலைக் கட்டிப் பிடித்து மனைவி அழுவதும், ஆத்மாவின் விடுதலைக்கான இராகங்கள் தான். ஒருவனால் குடும்பம் எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை, அவனின் குடும்பத்தினரின் சோகத்தால் அறிந்துவிடலாம். ஒருவன் வாழும் போது கூடிய கூட்டத்தைவிட, அவனின் இறுதி ஊர்வலத்தில் கூடும் கூட்டமே, அவன் வாழ்ந்த விதத்தைக் காட்டிவிடும்.

 இறந்த ஒருவரின் வாழ்க்கையை விமர்சிப்பதை தமிழ் சமூகம் அநாகரீகம் என்கிறது. அவன்தான் இறந்துவிட்டானே. அப்படி இருக்கும்போது அவன் செய்த செயல்களைத் தானே விமர்சிக்கிறோம். அதில் என்னத் தவறு இருக்கிறது எனலாம். அந்த விமர்சனம் கூட ஒரு கர்மா தான். ஒரு ஆத்மாவைப் பற்றி கூடுதல் குறைச்சலாக பேசிக்கொள்ள, இறைவனால் படைக்கப் பட்ட மற்றொரு ஆத்மாவுக்கு, உரிமை கொடுத்தது யார்? என்கிற கேள்வி எழும். அப்படியானால், இறந்தபின்தான் பேசக்கூடாது என்றால், ஒருவர் உயிருடன் இருக்கும்போது பேசலாமா? பேசக்கூடாது. அதுவும் கர்மாதான். இப்படி ஒவ்வொரு செயலாகப் பார்த்துக்கொண்டே சென்றால், நல்வினை எது, தீவினை எது என்கிற, பாவப் புண்ணியங்கள் அற்பப்புத்திக்குப் புலப் பட்டுவிடும். இதைத்தான், மாபெரும் ஞானியான இயேசுபகவான் கூறுகிறார்.

“உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள். உங்களை வெறுப்போர்க்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக, இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு, மறு கன்னத்தையும் காட்டுங்கள்.”. லூக்.6:27.  என்றார். நம் மீது பிறர் தொடுக்கும் கர்மாவெனும் வினைக்கு, எதிர்வினை செய்யாமல் ஏற்றுக்கொள்வதும், தீவினைகளுக்கு எதிராக, தீவினைசெய்யாமல், நல்வினை செய்வதும், “ஏகாமல் வாசனையை ஒதுக்கியோன் மனிதன்”    எனும் நிலையை அடையலாம்.

தனிஷ்டாபஞ்சமியில் இறந்தவர்க்கு,விளக்கேற்றி, நிறை சொம்பில் நீர்வைத்து, தீபாரதனை காட்டுவது, வீட்டை அடைப்பதும், பின்பக்கச் சுவற்றை உடைத்து, சடலத்தை வெளியே உருவதும், கர்மவினைகளைத் தீர்த்துவிடாது. சிந்தித்துப் பார்த்தால் அது ஓர் சம்பிரதாய நடைமுறைகள் என்பது புலனாகும்.

சொர்க்கத்தைச் சென்று சேரும் வழியாக, சடங்குகளும், சம்பிரதாயங்களும், கலாச்சார நிகழ்வுகளும் அமைந்து விடாது. மாறாக,

நல்லொழுக்கமும், மன ஒருமைப்பாடும் நன்னெறி வாழ்வும், உள்ளத்தூய்மையும், தீர்க்கச் சிந்தனையும் அமையப் பெற்றவர்கள், வாழும் போதே மோட்சநிலையை அடைவார்கள். முக்தியும் பெறமுடியும்.

ஒரு மனிதன் கெட்டவனாய் வாழ்ந்து முடித்து விட்டு, சாகும் போது, தனிஷ்டாபஞ்சமியில் இறந்தால், அவன் நரகலோகம் செல்வான் என்பதில்லை. கெட்ட மனிதனாய் வாழ்ந்து முடித்த எவனும், எமலோகம்தான் செல்வான். அவனுக்காக நரகவாசல் திறந்தே இருக்கும்.

இதைத்தான் பைபிள், “சொர்க்கத்தின் வாசல் குறுகி இருக்கும். நரகவாசல் அகண்டிருக்கும்”. என்கிறது. பெரும்பாலானோர் பரிகாரங்களைச் செய்தாவது, இறந்தவரின் ஆத்மா ஈடேற்றம் அடைந்து விட வேண்டும் என இறைவனை வேண்டி வருகின்றனர். இதுநம்பிக்கை சார்ந்த விடயம். எதையும் பெரிதாக எதிர்பார்க்கும் மனிதனின் மனோபாவம் தான் காரணம். நம் வேண்டுதல் அனைத்தையும் இறைவன் ஏற்றுக் கொள்வான் என்கிற மனநிலையும் நம்மிடம் இருக்கிறது. ஆனால், இறந்தோரின் ஆத்மா ஈடேற்றம் அடைய என்ன தகுதியும், வலிவும் இருக்கிறது.

மோட்ச நிலையை அடைய, இந்த ஆத்மா உலகிற்கு என்ன செய்தது? இறைவன் விரும்பியபடி வாழ்ந்ததா? ஏழு மாயைகளில் எந்த மாயையை வென்றது. “நான்” என்கிற ஆணவ மமதையை வேரறுத்ததா? அல்லது அலைந்து திரியும் மனதைத் தான் அடக்கியதா? இந்த பாவாத்மாவுக்கு மோட்ச நிலை எப்படிக் கிட்டும்.

“மோட்சம் என்பது சுவர் ஏறிக் குதித்து உள்ளே வர, எவன் வீட்டுக் கொல்லைப் புறமோ அல்ல. அது இறைவனின் கால்மனை” மோட்சத்தை ஆடைவதற்கு ஆத்மா வலிவுடையதாக இருக்கவேண்டும். மனோலயமும், வினைதீரவும் வேண்டும். அப்போதுதான் ஜீவன் முக்தி பெறும்.

ஆய்வு.
முத்துப்பிள்ளை
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு.
ஆத்தூர். 624 701       
        ஆத்துர். வட்டம்.       
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி. 91501 06069. 8754873378

No comments:

Post a Comment