Friday 14 August 2015

மனிதன் மரணநாளின் மர்மங்கள். 1 . முத்துப்பிள்ளை





அகண்ட பாரதத்தின் நாற்புற எல்லைகளும் எதிரிகளாலும், கடலாலும் குறுக்கப்பட்டாலும், இந்த தேசத்தில் விளைந்த தத்துவங்கள்தான் உலக மதங்களின் முன்னோடியாகத் திகழ்கின்றன. மனிதனுக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்தியைப்போல, இந்த ஆறு தத்துவங்களும் உலகினிற்கே சிறந்தனவாக இருக்கின்றன.

இந்த ஆறுவகை சித்தாந்தங்களுக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கவேண்டுமா? வேண்டாமா? எனது நோக்கமல்ல. ஆனால், ஒரு தத்துவத்தை திட்டவட்டமாக ஏற்றுக்கொண்டு, அதை அடைய வேண்டிய வழிகளைக் கூறுகிறது.

ஆறு வகை சித்தாந்தங்கள் எதுவென்றால்,

1. நியாயம். 2. வைசேஷிகம். 3. சாந்தியம். 4. யோகம். 5. மீமாம்சம். 6. வேதாந்தம். _ ஆகும்.

இந்த ஆறுவகை தத்துவங்களுக்கும், “ மனிதன் மரணநாளின் மர்மங்கள்” எனும் கட்டுரைக்கும் என்ன தொடர்பு உள்ளது என்றால், இந்த ஆறுவகை தத்துவங்களும், ஆத்மா, கர்மா, மனம், முக்தி என்கிற, வெளித்தோற்றத்திற்குப் புலப்படாத, எவர்க்கும் எளிதில் புரிபடாத, உள்ளடக்கத்தால், விரிவடைந்த வழிகளைப் போதிக்கிறது. அதேபோல, இந்த கட்டுரையும் ஆத்மா, கர்மா, மனம், முக்தி என்ற உயர்வான நிலைகளை, உத்வேகத்துடன் தொட்டுப் பார்க்க உவகையுடன் நினைக்கிறது.  இதில் ஏதேனும் சொல்பிழையோ, கருத்துப்பிழையோ இருந்தாலும், எளியவனை மன்னித்து பொறுத்தருள வேண்டுகிறேன்.

இனி கட்டுரைக்குள் செல்வோம். இப்போது நம் முன்னோர் அருளிய ஆறு தத்துவங்களைப் பற்றி மிகச் சுருக்கமாகக் காண்போம்.
                       
1. நியாய சாத்திரம்.  
        
 நியாயம் என்றும், தர்க்கம் என்றும் இந்த சாத்திரத்தை அழைப்பார்கள். பதினாறு வகையான வழிகளை அறிந்து, அதைக் கடுமையான ஒழுக்கநெறிகளுடன் பின்பற்றி வாழ்ந்தால், ஆன்மா அல்லது ஜீவன் விடுதலைப் பெறும் என்கிறது இந்த வேதாந்தம்.
        இந்த நியாய சித்தாந்தத்தை கி.மு. 600 ம்ஆண்டு வாக்கில் கெளதமர் என்ற முனிவர் தொடங்கினார், அல்லது வகுத்து தந்தார் எனக் கூறப்படுகிறது.
கடவுள் என்பவர் ஆத்மாவே, இந்த ஆத்மாவிற்கு எட்டுப் பேராற்றல் உள்ளன. அவை அணிமா, கரிமா, மகிமா, பிரகாமியம், வசித்துவம், ஈசித்துவம், பிராப்தி, பிரகாயப் பிரவேசம் என்று அழைக்கப்படும்.
        சாத்திரங்களினால் கடவுளைக் காண்பவர், அறிபவர், எல்லாம் உணர்ந்தவர் ஆகியோரே ஆத்மாவின் எதிரொளியான புத்தியால் பிரித்தறியலாம். ஆனால், சாதாரணமாகவோ, பேச்சாலோ, அனுமானத்தாலோ ஆத்மா என்கிற கடவுளைக் கண்டறிய முடியாது.
        சரியான ஞானமே மோட்சம் பெற, எளியவழியை வகுக்கும். உலகசுகம் நாடிவரும் மக்களின் அத்தனை வேலைகளிலும், மனம் அடக்கப் பட்டு சமநிலை பெற்று விடுமேயானால், சரியான அறிவும் ஏற்பட்டுவிடும். இதன் பின் முன்வினை மிச்சமே, அவர் வாழ்க்கையை நடத்துவதாக இருக்கும். அதன்பிறகு, மோட்சம் கிட்டும். பிறப்பு, இறப்பு பற்றிய வபரீதம் நீங்கிவிட்டால், சரியான மோட்சம் கிட்டிவிடும் என்கிறது நியாய சாத்திரம்.
                       
2. வைசேஷிகம்.
         
இத் தத்துவம் கி.மு. 600 ல் ஏற்பட்டது. நாத்தியத்திற்கும், சாங்கியத்திற்கும் நியாயமும், வைசேஷிகமும் கடும் எதிரியாக விளங்குகின்றன. இத் தத்துவத்தை கணாதரர் என்பவர் துவக்கிவைத்தார். இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் இருக்கும், உண்மையான இருப்பு எதுவென்றால் அணுதான். இந்த அணுக்களின் ஒன்றோடு, ஒன்று  இணைவே, பிரபஞ்சமாகிறது.
        இந்த நூற்றாண்டின் இணையற்றக் கண்டுபிடிப்பான, “ கடவுள் துகள் “  பற்றிய அணுச் சோதனையின் முன்னோடி கணாதரர் என்றும் சொல்லலாம். மேலான பரம்பொருளுடன் ஆத்மா தொடர்புடையது. பிரபஞ்சத்தின் அழிவிலும், ஆக்கத்திலும் இடம்பெறுவது ஐம்புலன்களால் காணமுடியாது. யோகியர் மட்டுமே ஆத்மாவை உணரலாம். ஆத்மக்குணங்களை ஆன்மீக முதிர்ச்சி அடைந்தவரால் மட்டுமே அறியமுடியும்.
        ஆத்மா இருப்பதாலே புலன்கள், மனம் மூலம் அறிவைப் பெறமுடியும். இப்படிப் பெறும் அனுமான அறிவின் மூலம் ஆத்மா உள்ளதை அறியும். உண்மை, ஆசையின்மை, நன்மைபுரிதல், அகிம்சை, நம்பிக்கை, எதையும் தன்னுடையதாய் எண்ணாமை, மோகமின்மை, பக்தியுடமை, விழிப்புடைமை, விரதங்கள் இவையெல்லாம் தர்மம் எனப்படும்.
இந்த தர்மங்கள் மனிதனின் பண்பு ஆகும். அவனுக்கு மகிழ்ச்சி தருவதும், உச்சநிலைக்கு உயர்த்திச் செல்வதும், முக்திக்குக் கொண்டு செல்வதேயாகும்.
        உலகவாழ்விற்காக ஆசையின்றி மனம் ஆத்மாவுடன் தொடர்பு கொள்ள வேண்டும். நற்செயல்களின் பயனாக சொர்க்க உலகின் சுகம் அனுபவிப்பதற்கான, உடல் அமைப்பைப் பெற்று இன்பமாக இருப்பார்கள். மாறாக,  கொடும் செயல்கள் செய்தால், அவற்றின் பயனாக நரகத்துன்பத்தை அடைய அதற்கு ஏற்ற உடலை அடைந்து துன்புறுவார்கள். நல்வினை, தீவினைகளுக்கான இருவினைகளைப் பற்றியும் விளக்கிக் கூறுகிறது.
                       
3. சாங்கியம்.

இந்த மதம் கபிலரால் தோற்றுவிக்கப் பட்டது. இம்மதத்தின் அடிப்படைத் தத்துவமே பிரதானம், பிரக்கிருதி ஆகும். இவ்விரு தத்துவங்கள் இல்லாத மதங்களே இல்லை. ஐம்புலன்களை அடக்கியது பிரகிருதி ஆகும். பிரதானம் என்பது பெளதீகம் என்பதின் மாறுதலே, பரிணாம வாதம் ஆகிறது. இரஜோகுணத்தால் நல்லகாரியமும், தமோகுணத்தால் கெட்ட காரியமும், சத்துவக்குணத்தால் நல்லது, கெட்டது ம், அமைதியும் நிலவுவதாகக் கூறலாம். “ செயல்படுதல்” எனும் இயக்கமே, இம்மார்க்கத்தினர் கண்டறிந்ததாகும். பரிணாமத் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் வழியாகும். “பகுத்தறிவு”  எனும் ஞானத்தின் விளைவே, “முக்தி” என்றும், மோட்சத்திற்கு சரியான வழி, “ஞானமே” என்பதையும் விளக்குகிறது.
               
4. யோகம்.
       
 சாங்கிய மதத்தின் உயர்ந்த தத்துவத்தை விளக்குவது, தமிழகத்தின் எட்டுவகையான யோகவழியைச் சூத்திரமாக விளக்குவது. இந்த மார்க்கத்தில் பகுத்துணர்வதின் மூலம் ஞானம் கிட்டும். உடல், உள்ளம் ஆகிய இரண்டிலும் நற்பண்புகள் பேணப் படவேண்டும்.
        மூச்சை முறைப் படுத்துதல், ஆழ்ந்த மன ஒருமைப்பாடு, புலனடக்கம், இடையிறாது யோகத்தின் மூலம் உண்மை உணரப்படல் வேண்டும். அற்பமனிதனை, அற்புதக் கடவுளாக, இந்த மதம் ஆக்குகிறது.
        உலகைப் படைத்தவரும், அதைக் காப்பவரும் கடவுள் அல்ல. இக்கருத்தை உறுதிப்படத் தெரிவிக்கிறது. அமைதியின் மதிப்பை யோகம் நிறுவுகிறது. தனிநபரின் நல்லொழுக்கங்களையும், கெட்டஒழுக்கங்களையும் விளக்குகிறது. நிலையான பயிற்சியின் மூலம் பெரும் சாதனைகளைப் பெற்றிடலாம்.
தமிழகத்தின் எட்டுவகையான் அங்கங்கள் எதுவென்றால், 1. இயமம். 2. நியமம். 3. ஆசனம். 4. பிரணாயாமன். 5. தாரணை. 6. பித்யாவரராம். 7. தியானம். 8. சமாதி.. இவைகளை பதஞ்சலி முனிவர் சூத்திரம் வடிவில் உருவாக்கியுள்ளார்.
இம் மதம் கர்மக்கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறது. இந்த கர்மாக்களை, “தியானம், சமாதி” எனும் நிலையில் ஒழித்து விடலாம். முளைவிட முடியாமல், அவிக்கப்பட்ட விதைப் போல, ஐம்பூதங்களுக்குள் கர்மாக்களை ஒடுக்கிவிடலாம்.
இந்த உலகில் தோன்றிய, உடல்பிறவியானது வினை செய்வதினால், “ஆகாமியக் கர்மா” ஆகிறது. இவை சித்தத்தில் பதிந்துவிடும் போது, “சஞ்சிதக் கர்மா” ஆகிறது. சில கர்மாக்களின் தொகுதியில், ஒருபிறவி உண்டாகிறது. அதற்கு, “ஏகபாலிகா” கர்மா என்றும், “ பிராரப்தக் கர்மா” என்றும் அழைப்பர். இது இலக்கைச் சரியாய் தாக்கும் அம்பைப் போன்றது. இதை அனுபவித்து தான் தீரவேண்டும். ஒவ்வொரு பிறவிகளும் படிப்படியாக ஞானத்தையும், மனப்பக்குவத்தையும் அளிக்கின்றன.
ஒரு மனிதன் மிருக நிலையிலிருந்து சித்த நிலையை அடைவான். ஸ்தூல உடம்பாலும், சூட்சுமமான மனதாலும், ஆன்மீகப் பண்பாலும், படிப்படியாக ஞானமும், சமாதி நிலையையும் அடைகிறான். இவைகளை அடைவதின் மூலம் மூலம் முக்தி நிலையை எய்துகிறான்.
               
5. பூர்வ மீமாம்சை.

நல்லது செய்தால் நல்லது நடக்கும். தீயன செய்தால், தீயதே நடக்கும். நல்ல விடயங்களை அடைய வேதங்களில் கூறிய நல்ல தர்மங்களைச் செய்தால், நல்லதே நிகழும் என்பதே, இம்மார்க்கத்தின் கொள்கையாகும். கர்மாக்களின் விளைவாகவே உலகம் படைக்கப் படுகிறது.  கர்மப்பலன்களாலே உயிர்களும், உடம்பைப் பெற்று, உலகில் வாழ வருகின்றன. ஆதலால் உலகம் கர்மா மயமே.  
நீங்கள் நல்லது செய்தால், கிடைக்கும் நல்லப்பலன்களை, கடவுள் எடுத்துக்கொள்ளப் போவதில்லை. அதேபோல், நீங்கள் கெட்டது செய்தால், கிடைக்கப்போகும் கெட்டப்பலனை, கடவுள் தடுக்கப் போவதும் இல்லை. அப்படியிருக்கும் போது கடவுளைப் பற்றி அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்பதே, இம்மார்க்கத்தாரின் மகத்தானக் கொள்கையாகும்.
               
6. வேதாந்தம்  

இம்மார்க்கம், “சனாதன மதம்” என்றழைக்கப்படும், இன்றைய இந்துமதமாகும். எவராலும் உண்டாக்கப்பட்டதாக, ஆரம்பமே இல்லாததாக இருப்பதே, இந்த இந்துமதத்தின் சிறப்பாகும். உயிர்கள் கர்மங்களைக் கழிக்க உலகில் பிறவி எடுக்கின்றன. நம் முன்வினைகளுக்கேற்ப ஐம்பூதங்களிடம் இணைப்பவர் இறைவன்தான். நம் ஜீவன்கள் நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப, புண்ணியம், அல்லது பாவம் அடைவர். புண்ணியவினைக்கு ஏற்ப, சொர்க்கம் சென்று, அவ்வுலக உடலில், சுகவாழ்வை அடைவர். தீவினைப் பயனாக, நரகம் சென்று, அதற்குரிய உடலைப்பெற்று, கடும் வேதனைகளை அனுபவிப்பர்.
நாம் அறிந்தோ, அறியாமலோ விரும்பியும், விரும்பாமலோ, நாம் ஏற்றுக்கொண்டுள்ள மார்க்கம் இதுவாகும். இந்த வேதாந்த மார்க்கத்தில் ஆதிசங்கரரும், இராமானுஜரும், நிம்பர்கர், மத்வர், வல்லபர் ஆகிய ஆச்சார்யர்கள் நிறுவிய ஐந்து பிரிவுகள் உள்ளன. “பரப்பிரம்மம் ஒன்றே” எனும் கருத்தை வலியுறுத்தும், அத்வைத மார்க்கம். உலகம் மாயையில் சூழ்ந்தது. ஆனால், “பிரம்மமே உண்மை” எனும், உயர்ந்த தத்துவத்தைக் கொண்டது.
ஞானமார்க்கத்தால் மோட்சநிலையை அடையமுடியும் என ஆதிசங்கரரும், பக்திமார்க்கமே மோட்சத்துக்கான வழி என, இராமானுஜர், நிம்பர்கர், மத்வர், வல்லபர் ஆகிய நால்வரும் கூறுகின்றனர். ஆனால், மோட்சநிலையைப் பெற துறவுநிலையை, எல்லோரும் பின்பற்ற வேண்டும் என ஐவரும் கூறுகின்றனர். 

இந்த ஆறு தத்துவங்களும் மனித இனத்தை, உயர்வான நிலைக்கு இட்டுச்செல்லும் மார்க்கமாகவே இருந்தன. ஆத்மா, கர்மா, மனம், முக்தி எனும், அகக்கண்களால் மட்டுமே உணரும் பூடக நிலையை, புறக்கண்களால் காண இயலாத போது, நமக்குள் தெளிவற்றக் குழப்பம் ஏற்படத்தான் செய்யும்.இந்த தெளிவற்றக் குழப்பத்தை தெளிவுபடுத்த சிலர் முயலும் போது, அது மார்க்கமாக மலர்ந்துவிடுகிறது.

பிறப்பிலிருந்து இறப்புவரை ஏற்படுத்திய வினைகளுக்கு, இறப்புக்குப் பிந்திய வாழ்வில், விடை தேடப்படும் என்கிறக் கோட்பாடு, உலகில் வாழ்வோரை அச்சமூட்ட அல்ல. சீர்கெடும் மனிதரை சீர்படுத்தி, தெளிவான கண்ணோட்டத்தில் உலகைக் காண வைக்கத்தான். இந்த உயர்வான ஆறு தத்துவங்களும், கிறிஸ்து பிறப்புக்கு முந்திய காலத்தில், நம் பாரத தேசத்தில், நம் முன்னோர்களால் தோற்றுவிக்கப் பட்டது.

உலகமக்கள் வேட்டையாடமட்டும் தெரிந்திருந்த காலத்தில், நம் முன்னோர்கள் கர்மாவையும், ஆத்மாவையும், பிறவிகளைப் பற்றியும் அறியத் துவங்கினர். கி.மு.விலே அறியத் துவங்கிய நம்மால், நம் மக்களைப் பிறவிப் பெருங்கடலில் இருந்து மீட்க முடியவில்லையே ஏன்? எல்லோரும் ஏதோவொரு மார்க்கத்தில் நிலைத்திருக்கும் போது, கர்மா தொலைந்திருக்கவேண்டுமே. ஆத்மா விடுதலைப் பெற்றிருக்க வேண்டுமே. பிறவிப் பயன் அடைந்திருக்கவேண்டுமே. ஏன்? அவையெலாம் நடக்கவில்லை.

ஒரு மார்க்கம் மற்றொன்றை, அழித்தொழித்ததும், சமணமும், பெளத்தமும் வேரோடு வீழ்த்தப்பட்டதும். ஒரு சிற்றினம், பேரினத்தை, பிரித்தாளும் சூழ்ச்சியினால், அடிமைப்படுத்தியதும், பிறவிப் பரிகாரங்களும், சாங்கியத்தின் பரிணாமக் கொள்கைகளைச் சிந்திக்காததும்,  கர்மக் கொள்கைகளுக்கு எதிரான அன்னிய நாட்டானின் படையெடுப்பும், ஒரேப் பிறவிக் கொள்கைக் கொண்ட வேற்றுமதங்களின் தாக்கமும், நம் மார்க்கங்களுக்கும், நம் மக்களுக்கும் பெரிய இடைவெளியைத் தந்துவிட்டன. மேலும்,

பெரும்பாலும் வழிபாட்டு முறையில் ஒன்றுபட்ட நம்மால், ஜாதிகளில் பிரிந்துதான் கிடக்கிறோம். ஜாதியப் பழக்கவழக்கங்களை, ஒரு மரபாகவே, பின்பற்றி வருவதால், கோட்பாடுகளாகவே மாறிவிட்டன.

ஆத்மா, கர்மா, மனம், முக்தி எனும் நான்கிலும் விழிப்புணர்வைத் தர ஆன்மீகம் வழங்கத் தவறவில்லையென்றாலும், இறப்புக்குப் பின் ஆத்மா அடையும் நிலை என்ன? ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிட்டுள்ள “தனிஷ்டாபஞ்சமி” எனும் இறந்தோரின் நட்சத்திரத்திற்கும் உண்டான தொடர்புகள் என்ன? விரிவாகப் பேசலாம்.

ஆய்வு.
முத்துப்பிள்ளை
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு.
ஆத்தூர். 624 701       
        ஆத்துர். வட்டம்.       
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி. 91501 06069. 8754873378

No comments:

Post a Comment