Sunday 1 November 2015

மனிதனின் மரணநாளின் மர்மங்கள். 6. முத்துப்பிள்ளை.



ஒருவர் எந்த நட்சத்திரத்தில் இறந்தாலும், அந்த நட்சத்திரத்தில் இருந்து, கார்த்திகை மாத நட்சத்திரம் வரை, இடையில் எத்தனை நாட்கள் உள்ளதோ, அத்தனை நாட்களும் விளக்கேற்றி, பத்தி சூடம் எறியவிட்டு அந்த ஆத்மா இறைவனிடம் சேர வேண்டுவார்கள்.
மறைத்திரு, மறைமலை அடிகள் எழுதிய, “ மரணத்தின் பின் மனிதன் நிலை” என்கிற நூலில் இறந்தோருக்கு திவசம் கொடுக்கும் விதத்தைக் கூறியுள்ளார். “திவசநாளில்” அற்ப ஆகாரம் உண்டாவதன்றி, நாள் முழுவதும் உபவாசம் இருந்தாவது, தலைழுழுகி, சுத்தமான ஆடை அணிந்து, தாமே பொருள் தேடி உண்ணமாட்டாத கூன், குருடு, நொண்டி, சப்பாணி, நோயாளி, முதலியோருக்கு, அன்னமிட்டு, ஆலயத்திற்கு காலை, மாலை எனும் முப்பொழுதும் சென்று இறைவனிடத்தில் மனதை பதியவைத்து, என் ஆண்டவனே! என் அப்பனே! என் அருட்கடலே! இறந்துபோன என் மூதாதையர்கள் எல்லோரும் பரிசுத்தம் உடையவர்கள்தானாம். பரிசுத்தமான வழிகளில் சென்று கடைசியாக உன் திருவருட் பேரின்பத்தை பெறும்படி கருணை செய்ய வேண்டும். கருணாமேகமான ஐயனே! என்மூததாதையர்கள்,இந்த நில உலகில் இருந்த நாட்களில் தாம் அறிந்தும், அறியாமலும் செய்த பெரும்பிழைகளை எல்லாம், தேவரீர் பொறுத்தருளி, அவர்கள் அப்பிழைகளால் மறுமை உலகத்தில் வருந்தாவண்ணம் அவர்கட்கு, நின் அருள் வெளிச்சத்தைக்காட்டி, அவர்கள் எல்லோரையும் மோட்ச வழியில் சேர்க்க திருவருள் பாலிக்க வேண்டும்” என்பது போல, பிராத்தனை செய்வதுதான் நலமுடையதாகும். இதுதான் இறந்து பொய் இந்த உலகத்தில் வருந்திக் கொண்டிருக்கும், நம் மூதாடையர்களை நல்வழியில் சேர்ப்பிக்க வல்லதாகும்.
இப்படி செய்வதை விடுத்து, “அடுத்த வீட்டுகாரனுக்காக அம்மாவாசை விரதம்” என்பதைப் போல, பிராமணர்களை வரவழைத்து, ஏதோ அவர்களுக்குத் தொலைக்கவேண்டியதை தொலைத்து, “………..என்பதாக அந்த நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
நம்முடைய ஆத்மாக்களிடன் புரியாத மொழியில் ஏதேதோ பிதற்றினால்தான் மிரண்டுபோய் இறைவனிடம் சேருமோ என்னவோ?
பிண்டன் என்றால் என்ன?
பிண்டம் என்பதற்கு உடல் என்பதாகும். இரத்தம், சதை, எலும்புடன் இருக்கும் ஸ்தூல உடம்பை விட்டு, சூட்சும உடம்பையும் குறிக்கும் சொல்லாகும். தன் தந்தை வழி முன்னோர்களின் தேவதைகளுக்கு பலிதருவது என்பதையும் குறிக்கும்.
தம் மூதாதையர்கலின் ஆத்மாவின் கடனை அடைக்கும் வேண்டுதலாக, இந்த பிண்டம் தரும் சடங்கு நிறைவேற்றப் படுகிறது.
நம் மூதாதையர்களின் கர்மத்தைக் குறைத்து, நரகத் துன்பத்திலிருந்து காப்பாற்ற, மறைதிரு. மறைமலையடிகள் கூறியது போல, நம் மூதாதையர்களின் வினைக் கடனை தீர்க்க முயலலாம்.
கிரகங்களின் காரக உறவுப் பாதிப்பு, அவிட்ட நாள் என்கிற அடைப்பு நாட்களான அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்கிற ஐந்து நட்சத்திரங்களும், அர்த்த, திரிபாத நட்சத்திரங்களும், ரோகிணியும் இறப்பு தோஷம் தருகின்றன என்பதை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நட்சத்திரங்களை எல்லாம் உற்றுப் பார்க்கும் போது, நவக்கிரகங்களில் சுக்கிரன், கேதுவின் நட்சத்திரங்களைத் தவிர்த்து மற்ற ஏழுகிரகங்களின் நட்சத்திரங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள படி, “கிரகக் காரகங்களையொட்டியே நட்சத்திரங்களும், தங்கள் காரகப் பலன்களைத் தருகின்றன” என்ற கருத்தின்படி, எந்த நட்சத்திரத்தில் ஒருவன் இறந்தாலும், அந்த நட்சத்திரம், எந்த கிரகக் காரக உறவுகளைக் குறிக்கிறதோ, அந்த உறவு பாதிப்பிலோ, அல்லது ஏக்கத்திலோ இறந்தார் என்றே அர்த்தமாகும்.
உதாரணமாக, ஒருவர் சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகையிளொ, உத்திரத்திலோ, அல்லது உத்ராடத்திலோ இறந்தால், அவர் தந்தையின் கோபத்திற்கு ஆளானவராகவோ, தந்தை தந்தப் பாதிப்பை எண்ணியோ, அல்லது தந்தையின் ஏக்கத்திலோ இறந்தார் என்றே அர்த்தமாகும். இதே போல் தான், மற்றக் கிரகங்களின் சாரத்தில் இறந்தாலும் காணவேண்டும்.
கிரகக் காரக உறவுகள்.
சூரியன் -          தகப்பன், தகப்பன் வழி மூதாதையர்கள்,

சந்திரன் -          தாய், வயது மூத்தப்பெண்கள், மாமியார்,
                           அத்தை, அண்ணி,  மூத்த சகோதரி.

செவ்வாய் -               சகோதரன், பெண்களுக்கு கணவன்

புதன் -              புத்தி கூர்மை உடையோர், மாமன் கணக்கர்,
                                சாணக்கியத்தனம் உடையோர், பன்மொழிப் புலவர்,
                           ஜோதிடர்கள்

குரு _                ஆசிரியர், ஆன்மீகப் பெரியோர்கள், மடாதிபதி,
குழந்தை, சாத்திர ஞானம் உடையவர்.
    
சனி _                       கடின உழைப்பாளி, முடவர், இரவுப் பணியாளர்.

இராகு _           தந்தை  வழித் தாத்தா, மூதாதையர்.
       


இந்த  ஏழுக்  கிரக காரக உறவுகளைக் காணும் போது, எல்லா உறவுகளையும் இந்த கிரகங்கள் தருகின்றன. இதில் இல்லாத உறவுகள், மனைவியும், ஞானமும் தான். இந்த இரண்டு உறவுகளுக்கும் மனதளவில் துரோகம் நினைத்தாலே, கண்டிப்பாக நரகம்தான். மனைவியானவள், செவ்வாயின் நட்சத்திரத்தில் இறந்தால், தன் கணவன் தந்தப் பாதிப்பிலோ, கணவனின் கொபத்திற்கு ஆளானவரகளாகவோ, அல்லது கணவனின் ஏக்கத்திலோ இறந்தார் என்று அர்த்தமாகும். கணவன், மனைவிக்கோ, மனைவி, கணவனுக்கோ குடும்பவாழ்வினில் துரோகம் செய்தவர்களாக இருந்து மனம் திருந்தாமல் மீதம் உள்ள வாழ்வையும், வாழ்ந்து முடிந்தவர்களின் இறப்புக்குப்பின் எத்தனை காலம் பிண்டம் தந்தாலும், இறைவன் அவர்களை மன்னிக்கப் போவதில்லை.
மேற்கூறிய காரக் உறவுகளுக்கு நாம் தரும் துன்பமும், துயரமும்,சொர்க்கப் பாதைக்கு ஏற்படுத்திக்கொள்ளும் அடைப்பாகும்.
நாம் ஒவ்வொரு உறவுகளை எல்லாம், வெறுத்து ஒதுக்கிக் கொண்டே செல்லச் செல்ல, நரகப்பாதையில் ஆண்டவன் அடைத்து வைத்த அடைப்பை, ஒவ்வொன்றாகப் பிடுங்கி, நாம் சொர்க்கப் பாதைக்கு செல்லும் வழியை நாமே அடைக்கிறோம். நரகப்பாதையைத் திறந்து விட்டு சொர்க்கப் பாதையை அடைக்கிறோம் என்பதாகும்.
இறந்த திதி அன்று பிண்டம் தருவதாலும், வழிபாடு செய்வதாலும் கூட பாவங்களை நீக்கமுடியுமா? முடியாதா? என்ற கேள்வி, நம் அடிமனதில் இருந்தாலும், கணவன், மனைவி ஞானியர் ஆகியோர்க்கு செய்யும் துரோகமும், துன்புறுத்தும் மனோநிலை உள்ளவர்களுக்கு நிச்சயமாக நரகம் தான் கிட்டும் என்பதில் ஐயமில்லை.. இதை தர்ப்பணம் தருவதாலோ, வழிபாடு செய்வதாலோ இந்த அடைப்பை எல்லாம் நீக்கமுடியாது.
அதனால், எந்த உறவுகளையும் வெறுத்து ஒதுக்காதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள். நமக்கு எவ்வளவு துரோகங்கலை செய்தாலும், மன்னியுங்கள். ஒரு முறையல்ல. ஏழு எழுபது முறை மன்னியுங்கள்.
        “எல்லா உறவுகளையும் பெறுவதற்காகத்தான் பிறந்தோம், இழப்பதற்காக அல்ல”, ஒரு மிருகம் மனிதக் குணத்தைப் பெற்றால், அது பரிணாம வளர்ச்சி. ஆனால், மனிதன் மிருகக் குணத்திற்கு மாறினால், அது பரிணாமத்தின் தேக்கம், என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

        “பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
        தோன்றின மறையும், மறைந்தனத் தோன்றும்”    இது நம் பாட்டனின் பாட்டு. இந்த வரிகள் நமக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
நான் ஜோதிடர் ஒருவரிடம் தனிஷ்டா பஞ்சமியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நட்சத்திரங்களில் (இறக்கக் கூடாத ) இறப்பதே, ஓர் உயிருக்குத் தண்டனையாக இடப்பட்டது தான்.அந்த உயிர், இந்த பூமியில் செய்த பாவப்புண்ணியங்களின் அடிப்படையில், அந்த நட்சத்திரத்தில் இறக்க வைக்கப்பட்டு  தண்டனைத் தரப்பட்டுள்ளது.
        தனிஷ்டா பஞ்சமியும், திரிபாத, அர்த்த, ரோகிணி ஆகிய பதின்மூன்று நட்சத்திரங்களில், நீதிநெறி தவறாதவரும், ஏகப்பத்தினி விரதனும், உறவுகளை நேசிப்பவனும், இறைவனின் கோட்பாடுகளில் வாழ்ந்தவனும் மரித்தால், அந்த ஆத்மாவிற்கு கிடைத்தத் தண்டனை நரக நெருப்பா?
ஒருவன் வாழும்போது எப்படி வேண்டுமானாலும், வாழ்ந்து விட்டு, சாகும்போது தோஷமற்ற நட்சத்திரங்களில் செத்தால், அவர் வாழ்ந்த வாழ்க்கைக்குக் கிடைத்தப் பரிசுஎன்பது சொர்க்கமா? அப்படியானால், கர்மாமனம், ஆத்மா, ஜீவன் கூடு, பரவெளி ஆதாரம் எல்லாம் எதற்கு?
        பூதங்கள் அற்று பொறி பொறிஅற்றுச் சாரைப் புலன்கள் அற்று
        பேதம் குணமற்றுப் பேராசைதான் அற்றுப் பின் முன்னற்று
        காதம் கரணங்களும் அற்று ஆனந்தம் காட்சியிலே
        ஏதம் கலைத்திருப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே!
        ஐம்பூதங்களான மண், நீர், காற்று, தீ, வெளி நீக்கி, ஐம்பொறிகளான, மெய், வாய், கண், மூக்கு, செவி அடக்கி, ஐம்புலன்களான சுவை, ஒளி ஊறு, ஓசை, நாற்றம் அகற்றி, முக்குணமான இராஜசம், தாமசம், சாத்வீகம் இவைகளை அழித்து, கரணம், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் ஒடுக்கி, பேராசை அறுத்து, சகலக்கேவல அவத்தைகலை ஒழித்தும், முடிவில் சிவானந்த தோற்றத்தைக் காண, “நான்” எனும் முனைப்பை அழித்து, எரிந்துவிட்டு, சிவப்பழமாய் நின்றானே பட்டினத்தார். கிடைத்ததா முக்தி? கிடைத்ததா தெய்வதரிசனம்? எதுவும் செய்யாத பத்திரகிரியாருக்கு மட்டும் எப்படி கிடைத்தது. இந்தப் பிறவியில் எல்லா கர்மவினைகளும் கணக்குத் தீர்க்கப்பட்டு விட்டதால், பத்திரகிரியார்க்கு பட்டினத்தார்க்கு முன்பே முக்தி கிடைத்தது. ஆனால், பட்டினத்தாரின் கர்மக்கணக்குகளின், சிலவற்றுக்காக, தாமதமாகதான் முக்திகிடைத்தது.
இறைவனை அடைய இத்தனைப் படிகளைக் கடந்து தான், பேரொளியில் கலக்கமுடியும். சாதாரணமான அற்பப் பிறவிகளான நாம், ஆத்மாவின் ஈடேற்றத்துக்காக எதையும் அறுத்தெறிய மாட்டோம். உலகநீதிக்கு ஒவ்வாத அத்தனைக் கேடுகளையும் செய்வோம். இறக்கக்கூடாத நட்சத்திரங்களில் இறந்தாலும் கூட, பரிகாரம் செய்வதாலும், பிண்டம் தருவதாலும், நம் கர்மவினைகளைக் குறைத்து, இறையொளியில் ஆத்மா கலக்க, நம் உறவுகள் உதவிவிடும் என்கிற நினைப்பே, நில உலக வாழ்வில், நம் கர்ம வினைகளை அதிகப்படுத்திக் கொள்ளக் காரணமாகிறது.
இறக்கக் கூடாத நட்சத்திரத்தில் இறந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆச்சாரியர்கள், இறைத்தொண்டாற்றியவர்களின்  திரு நட்சத்திரங்கள், பெரும்பாலும் தனிஷ்டா பஞ்சமி, திரிபாத, அர்த்த, ரோகிணி நட்சத்திரங்களில் தான் வருகின்றன.
        அதற்காக இந்த நட்சத்திரங்களில் இறந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும், ஆச்சாரியர்களும், இறைத் தொண்டாற்றியவர்களுக்கும் இறைவன் கொடுத்த தண்டனைதான், இந்த நட்சத்திர இறப்பா?
        இவர்கள் ஞானத்தால் இறைநிலை எட்டியவர்கள், அதனால், ஜாதகமோ, கிரகமோ, நட்சத்திரமோ வேலை செய்யாது என்று யாரவது சொல்வார்களேயானால், தாய் தந்தை உடலுறவில் கருக் கூடிப் பிறந்தவர்கள் தான் இவர்களும். மனித வடிவம் தாங்கி இறைவனைத் துதித்து, சேவை செய்து, பரப்பிரம்மமே சரணம் என சரணாகதி அடைந்து வாழ்ந்தவர்கள்.
        தன் கர்மக்கடன்களை இப்பிறவியில் தீர்த்து பிறவிச் சங்கிலியை அறுத்தவர்கள், இவர்களுக்கு மறுபிறப்பு என்பதுக் கிடையாது.
நம்மைப்போன்ற அற்பப்பிறவிகள் தான், இறைவனின் கோபத்திற்குப் பயந்து, பரிகாரங்களின் மூலமாகக் கூட கர்மக் கணக்குகளைக் கழிக்கப் பார்க்கிறோம். தீர்ப்பது, தீர்க்காமல் விடுவதும் அவன்பாடு,
ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை ஏழு பருவங்களைக் கடக்கிறான். அந்த மனிதன் ஆணாக இருந்தால்,
        1.     பாலன்
        2.     மீளி
        3.     மறவோன்
        4.     திறவோன்
        5.     காளை
        6.     விடலை
        7.     முதுமகன்
என்றும்,பெண்ணாக இருந்தால்,
       
1.     பேதை
        2,     பெதும்பை
        3.     மங்கை
        4.     மடந்தை
        5.     அரிவை
        6.     தெரிவை
7.     பேரிளம் பெண்                
என்றும் பருவமாற்றங்கள் அடைந்து, மரணம் ஏற்படுகிறது. இந்த ஏழு பருவங்களுக்கு உள்ளாகவும் மரணம் ஏற்படுகிறது.


இந்த ஏழுப் பருவங்களைக் கடக்கும் மனிதன் தான் கடக்கும் பருவங்களைத் திரும்பப் பெற இயலாதவனாகிறான். ஆனால், ஒவ்வொரு பருவங்கலில் ஏற்படும் நினைவுகளும், அனுபவங்களும் அவனை அடுத்தப் பருவ மாற்றத்துக்கு இட்டுச் செல்வதைப்போல, ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும், ஏழுபிறவிகள் எடுக்கின்றன என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம். ஒவ்வொரு பிறவியில் ஏற்படும் அல்லது பதிவாகும் கர்மங்கள் எனும் இருவினைகள் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்பு  ஏற்பட்டுத்துகிறது. ஒவ்வொரு பிறவியிலும் நல்வினைகள், தீவினைகள் பதிவு செய்யும்போது, இருவினைகளில் எந்த வினைக் கூடுதல் குறைச்சலைப் பெறுகிறதோ, அதைப் பொறுத்தே சொர்க்கம் நரகம் தீர்மானிக்கப்படுகிறது.
“இந்த ஆத்மா ஒரு போதும் பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. அவ்வாறே முன் உண்டாகிப் பிறகு ஏற்படக் கூடியது என்பதில்லை. எனவே, இவ்வாத்மா பிறவாதது. இறவாதது எக்காலத்துக்கும் உள்ளது. பழைமையானது. உடல் கொல்லப் படும்போது ஆத்மாக் கொல்லப் படுவதில்லை.” சாங்கிய யோகம் – 20 ஸ்ரீமத் பகவத் கீதை;
‘ஆத்மா உண்டாவது, அழிவது என்கிற முதலும் முடிவும் அற்றது. இந்த இரண்டு நிலைகளும் ஆத்மாவிற்கு இல்லை. ஆத்மஞானம் அடைந்தவனுக்கு, இரு வினைகளும் தீண்டாது. மனதில் உள்ள சகல ஆசைகளும் போனப்பிறகு, கண்ணுக்குப் புலப்படும் உலகத்துக்கு முற்றிலும், அப்பாற்பட்ட பரமாத்மாவின் உண்மையான சொரூபத்தை நேரில் உணர்ந்து, அதில் திருப்தி அடைபவனே, ஆத்மாவில் ஆனந்தமாய் இருப்பவன். எவனுடைய புத்தி, பரமாத்மாவில் அசையாது நிலைத்திருக்கிறதோ, அவனே ஆத்மாவில் ஆனந்தமாய் இருப்பவன்”. சாங்கிய யோகம். 55 ஸ்ரீமத் பகவத்கீதை.
ஆத்மாவில் தீவினை அகற்றுவோம். நல்வினையில் நிலைத்திருப்போம். நம் ஆத்மாவை தூய்மையாக வைத்திருப்போம்.
வாழ்க வளமுடன்.  
ஆய்வு.
முத்துப்பிள்ளை
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு.
ஆத்தூர். 624 701       
        ஆத்துர். வட்டம்.       
திண்டுக்கல் மாவட்டம்.

கபேசி. 91501 06069.

1 comment:

  1. என் தாத்தா தை 3 சித்திரை நட்சத்திரத்தில் இறந்தார். அடைப்பு என்ற விஷயம் தெரியாது. என் அம்மா நல்ல ஆரோக்கியமாக தான் இருந்தார், வயிற்று வலி என்று மருத்துவமணை சென்றோம் cancer என்று சொன்னார். 10 நாளில் இறந்துவிட்டார். ஆனி 31 கார்த்திகை நட்சத்திரத்தில் இறந்தார். தனிஷ்டா பஞ்சமி இருக்குமா சார்.

    ReplyDelete