Thursday 5 November 2015

மனதின் முடிச்சுகள்.



இக்கட்டுரை கடந்த இரண்டு நாட்களாக, எனக்குள் கேட்கப்பட்ட கேள்வியின் விளைவாகக் கிடைத்தப் பதில்கள் தான் இக்கட்டுரை.

மனம் (mind) என்பது என்ன? அது ஜோதிடத்தில் எந்த பாவகத்தில் இடம் பெறுகிறது. இதைப் பற்றி சிந்திக்கும் போது, ஜோதிடம் மட்டுமே மனதைப் பற்றிப் பேசவில்லை. நம் இலக்கண, இலக்கியங்களும், வேதாந்தமும், புத்தரின் தம்மபதமும், மற்றும்  அறிவியலும் மனதைப் பற்றி விரிவாக விரித்துரைத்துள்ளனர்.

மனம் என்பது என்ன? அதற்கு உரு உண்டா? அது நம் உடலில் எங்குள்ளது?

மனம் என்பது நம் சிந்தனை, நோக்குதல், தன் உணர்ச்சி வெளிப்படுத்துதல், உறுதி, கற்பனை போன்றவற்றில் இருந்து வெளிப்படுகின்ற அறிவு, (intellect)  மற்றும் உணர்வு சார்ந்த அமைப்புகளின் தொகுப்பாகும்.

மனித இயல்புகளில் எவையெவையெலாம் மனம் என்பதை உருவாக்குகின்றன என்பதே ஒரு விவாதப் பொருளாகும். சிலர் ஞாபகம் வைத்துக் கொள்வதையும், அதையொட்டி தர்க்கம் செய்வதையும், அறிவின் மேனிலை செயல்பாடுகள் என்றும் கூறுகின்றனர். இதன்படி காதல், வெறுப்பு, பயம், களிப்பு, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் உருவாவதாகச் சொல்லுகின்றனர். வேறுசிலர், பகுத்தறிவும், உணர்வும் என்றும் கூறுகின்றனர். இதைத்தான் தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், “ஆறாம் அறிவே மனம்” என்கிறார். அதாவது புலன்களோடு பகுத்தறியும் அறிவே மனம் என்கிறார் தொல்காப்பியர்.

இதையே நம் ஐயன் திருவள்ளுவரும், தனது “சிற்றினம் சேராமை” எனும் பொருட்பால் 48 வது அதிகாரம் முழுக்க மனதைப் பற்றியே கூறியுள்ளார்.

வேதாந்த மார்க்கத்தில், மனம் என்பதை நான்கு வகையாகப் பிரித்துள்ளனர். அவைகள்  மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகும்.

மனம்;

எதையும் உறுதியாக தீர்மானிக்க இயலாமல் போனால் அந்த நிலைக்கு குழம்பிய மனநிலை என்பர்கள். ஒருவன் சந்தேகப் பட்டால் எழும் நிலைக்கு மனம் என்று பெயர்.

சித்தம்;

நம் வாழ்வில் பார்த்தவைகள், கேட்டவைகள், உணர்ந்தவைகள் என நமக்குக் கிடைக்கும் அனுபவங்களை சேமிக்கும் நிலையமாக திகழ்வதை சித்தம் என்கிறோம்.

புத்தி;

“இது என்ன பொருள்” என பகுத்தறியும் நிலைக்கு புத்தி என்று பெயராகிறது. இதையெல்லாம் எப்போது அறிய முடியாமல் போகிறதோ, அப்போது புத்தி தடுமாறி, சித்தம் கலங்கியது என்று அர்த்தமாகிறது.

அகங்காரம்;

இந்த மூன்று நிலைகளிலும் (மனம், சித்தம், புத்தி) அனைத்தையும் அறிந்தபின் உருவாவது “நான்” என்கிற உணர்வுக்கு, மன அகங்காரம் என அழைக்கப் படுகிறது.

“பூட்டைத் திறப்பது கையாலே- நல்ல
மனம் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே- இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே!” என்றார் மகாகவி.

“மனம் அலை பாயக் கூடியது. நிலையற்றது. நினைத்த இடத்திற்கு செல்லக் கூடியது. மனதை கட்டுப் படுத்துவது கடினம். ஆனால், கட்டுப்படுத்துவது நல்லது. கட்டுப்படுத்தப்பட்ட மனம் இன்பத்தின் உறைவிடமாகும்.” என்கிறார் புத்தர்.

இதுபோல பலரும் மனம் என்கிற “வஸ்து” இருப்பதாக சொன்னால், அதற்கு “உரு” வேண்டுமே! உருவமில்லாத ஒன்றை காற்றைப் போலவும், கடவுளைப் போலவும், ஓளியைப் போலவும், ஒலியைப் போலவும் உணர்வால் தான் அறிய முடியும் அல்லவா? அந்த உணர்வில் ஏற்படும் சலனம் தான் மனமாகும். அது நிலையற்றது. ஆனால், சக்தி மிக்கது. மனதை அடக்கியவனை விட, அதற்கு அடங்கியவன் தான் அதிகம்.

இந்த மனதைப் பற்றி விஞ்ஞானமும் ஆய்வு செய்தது. அது மனிதன் இதயத்தின் கீழோ, அல்லது மூளையின் அடிப்பகுதியிலோ இருக்கலாம் என்கிறது.

சகல வாழ்வியல் நுட்பங்களையும், உடலியல் கூறுகளையும், அங்க அளவீடுகளையும் வெளிப்படுத்தும் ஜோதிடத்தில் மனம் என்பது குறீயீட்டுச் சொல்லாக இல்லாமல், அது தனிமனித வாழ்வின் போக்கையும் தீர்மானிப்பதாக உள்ளது.

காலதேவனுக்கு உயிர் இருப்பதால் தான், ஆத்மாவும், அதையொட்டி மனமும், கர்மாவும் இயங்க முடியும். இலக்கினத்தில் இருந்துதான் ஒவ்வொரு பாவமும் இயங்கும். அதாவது, இலக்கினம் என்பது இரயில் எஞ்ஜினைப் போன்றது. மீதமுள்ள பதினொரு இராசிகளும், எஞ்ஜினில் இணைக்கப்பட்ட இரயில் பெட்டிகளாகும். எஞ்ஜின் நன்றாக இருந்தால்தான் பெட்டிகளும் குறிப்பிட்ட பாவக வேலைகளை சரியாகச் செய்யும்.

அதனால், இலக்கினமும், இலக்கினதிபதியும் ஒவ்வொரு பாவகத்திலும் தன் பங்கைச் செலுத்தும். நம் ஜோதிட சாத்திரத்தில் மனதைக் குறிக்கும் கிரகமாக சந்திரனைக் குறித்துள்ளனர். இவர் நிலையற்று, தேய்வதும், வளருவதுமாக இருநிலைகொண்டும் உள்ளதாலும், நம் மனதில் அடிக்கடி மாற்றங்களைத் தருவதாலும் சந்திரனே காரகனாகிறான்.

என் நண்பர் கூறியது போல், “தன்முனைப்பும், வெற்றிபெற வேண்டிய வீரியம் இல்லையென்றால், மன ஒருமைப்பாடும், மன தைரியமும் இருக்காதே” என்பதைப் போலவும்.

காலதேவனின் நான்காம் பாவகம் மனதுக் காரகனான சந்திரனின் வீடாக இருப்பதால், அங்கே மனதின்  வாடையும்” இருக்கும் என்பதைப் போலவும்,

விதி, மதி, கதி என்கிற மூன்று நிலைகளும், ஒரு மனிதனை இயக்கும் சக்தியாக இருக்கும்.

மனம் என்பது இரண்டு நிலைகளைக் கொண்டது. அது மேல்மட்ட மனம் என்றும், ஆழ்மனம் என்றும் உள்ளது. அலைபாயக் கூடியது மேனிலையாக உள்ளது. அது நீரின் மேல்மட்டத்தைப் போன்றது. “ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும்” என்கிற இலக்கியப் பாடலைப் போல, மனம் அலை பாயும். அது காலதேவனின் நான்காமிடமாகும். 

காலதேவனின் மதிநுட்பத்தையும், மதி மயங்குதல், புத்தி, ஆழ்ந்த ஞானம், ஆழ்ந்த சிந்தனைகளைக் குறிக்குமிடமான ஐந்தாமிடமும் மனதின் காரகங்களை தனக்குள் வைத்திருப்பதால், நீரின் அடியாளத்தைப் போல அமைதியாக சலனமற்று, ஆழ்மனமாக அமைந்திருக்கும்.

எந்த பாவகமும் நல்ல நிலையில் பலன் தரவேண்டும் என்றால், உயிர், ஆன்மா, மனம், கர்மா இவைகள் தொடர்பு அவசியம், உங்கள் ஜாதகத்தில் பலம்பெற்று இருக்கவேண்டும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், மனம் என்பது, பனிரெண்டு பாவகங்களிலும் தன் வேலையை சரியாக செய்து வரவேண்டும். இதில் எந்த முரண்பாடுகளும் இருக்கக் கூடாது.

முத்துப்பிள்ளை. 91501 06069, 87548 73378, 89405 29429.







No comments:

Post a Comment