Thursday 5 November 2015

பருவம் படுத்தும் பாடு. 1

  
நான் பிறந்தேன். வளர்ந்தேன். படித்தேன். பருவம் வந்தது. திருமணம் முடித்தேன். குடும்பத்தில் இருந்தேன். குழந்தை பிறந்தது. அவன் வளர்ந்தான். படித்தான். பருவம் வந்தது. திருமணம் முடித்து வைத்தேன். பின் அவன் குடும்பம் நடத்தினான். குழந்தை பிறந்தது. பின் அதுவும் வளர்ந்தது .. .. .. .. இந்த சக்கரம் போன்ற வாழ்க்கையின் முடிவுகள் என்பது இவைகள் தானா? இதற்குள் தான் மனிதன் ஏதோவொன்றை தேடிக் கொண்டே இருக்கிறான்.

இந்த சக்கர வாழ்க்கை அனைவருக்கும் ஒன்றுபோல் பலன் கிடைத்து விடுகிறதா? என்றால், அதுவும் இல்லை. ஒருவனுக்குப் பிறப்பே சரியில்லை. இன்னொருவனுக்கு வளர்ப்பு சரியில்லை. சிலர் பருவம் வருவதற்கு முன்பே, “பழுத்து” விடுகின்றன. பலருக்கு ஆசையிருக்கும். வெளிப்படுத்த தெரியாமல், தனக்குள்ளே புதைத்துக் கொள்வார்கள். பலருக்கும் இணை தேடும் ஆசையும் இல்லாமலே இருக்கும். பலருக்கு திருமணமில்லை. முடிந்தாலும் விவாகரத்து. வாழ்ந்தே இருந்தாலும் வறுமை. வேண்டாம் என்பவர்களுக்கு வரிசையாய் பிள்ளைகுட்டிகள். பணத்தை வைத்துக்கொண்டு தவமிருப்பவர்களுக்கு, “டெஸ்ட் டியூப் பேபி”. சொத்து உள்ளவனுக்கு வளர்ப்புப்பிள்ளை. அதுவுமில்லாதவனுக்கு காணுகிற குழந்தைகள் அனைத்தும் தன் பிள்ளைகள்.

ஆம். நண்பர்களே! நாம் ஒரு சில பாவகங்களை மட்டும் கையிலெடுத்து, அதை பற்றிய சிறு விளக்கங்களை தர இருக்கிறேன்.

குடும்ப வாழ்க்கையில் முழுமையாய் ஈடுபட பல பாவங்கள் உறுதுணை செய்ய வேண்டும் என்றாலும், முக்கியமாக மூன்றாம் பாவகமும், அதன் அதிபதியும் பலமுடன் இருக்க வேண்டும். ஒருவர் மற்றவர் மேல் ஆதிக்கம் செலுத்தும் பாக்கியத்தை உடையவராக அடையாளம் காட்டும் இடமும் அதுதான். ஒரு ஆணின் வீரியம், பெண்ணின் வீடான ஏழாமிடத்திக்கு, ஒன்பதாமிடமாக (பாக்கிய ஸ்தானம்) வருவது, ஒருவருக்கு வீரியம், ஜெயம். அவரின் இணைக்கு அது பாக்கியம். என்று கூறி, அடுத்த தொடரில் சந்திப்போம். நன்றி.

இந்த இகவாழ்க்கையில் புதிதாய் எதுவும் இல்லை. புதிதாய் தெரிந்தாலும், அது புதியதின் மறு உருவாக்கமாகத்தான் இருக்கும். எந்த வினைகளும் உங்களுக்குள் இருந்துதான் உருவாகி பரிமளிக்கிறது உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும், பிரபஞ்ச வெளியிலும் இருப்பதால், உங்களின் ஜாதகத்தில் கிரக, நட்சத்திரப் பலத்தைப் பொறுத்தே  கிடைக்கின்றன. உங்களின் சூரியன் பலப்பட்டு இருந்தால், ஆளுமையும், அதிகாரமும் செல்லுபடியாகும். இல்லையென்றால், “புழு” கூட எதிர்த்து நிற்கும்.

இலக்கினம் எனும் “எனக்கு” எதிரே, (அதாவது இலக்கினத்திற்கு ஏழாமிடம்) என் சமூகமும், அந்த சமூகத்தில் இருப்பவர்களையும் காண்கிறோம். அதில் இருந்து வரும் “பெண்ணே” என்னை ஆள்பவளாக வருவாள். சமூகத்தின் பிரதிநிதிதான் மனைவியாக வருவதன் மூலம், என்னைப் பற்றிய மதிப்பீடுகளும் சமூகத்திற்கு தெரியவரும்.

“நான்” என்கிற இலக்கினதிபதியும், சமூகப் பிரதிநிதி என்று சொல்லும் ஏழாமதிபதியான “மனைவியும்” ஒன்றுக்கொன்று உறவாகவோ, உறவானவர்களின் இல்லங்களில் இருப்பதோ, நல்லோர் பார்வை பெறுவதோ. கணவன், மனைவிக்குள் இணக்கமான சூழலை உருவாக்கும். மாறாக, ஒன்றுக்கொன்று பகை பெற்று, பகைவர் வீட்டினில் அமர, அல்லது பாவர்கள் காண வாழ்க்கை முழுதும் பொருந்தி வாழாத தம்பதிகளாக வாழ்ந்து மடிவர்.

உங்களின் இலக்கினம் மகரமானால், அதன் அதிபதி சனி என்பவர் “நீங்கள்” தான். அதேபோல், மகரத்திற்கு (உங்களுக்கு) ஏழாமிடமான கடகம், உங்களின் சமூகத்தில் இருந்து வரும் சந்திரன்  “மனைவியைக்” குறிக்கும் அல்லவா? இப்போது, இவர்கள் இருவரும் இணைந்தால் தானே இல்லறம் சிறக்கும். இவர்கள் பாவர் பார்வை, சேர்க்கை அல்லது பாவர் வீடுகளில் அமர்வது, பாவர்கள் சாரம் பெறுவது என்று இல்லாமல், நல்லோர் சேர்க்கை, பார்வை, சாரம், அல்லது நல்லோர் வீடுகளில் இணைவது போன்ற நிலைகள் இருந்தால் மட்டுமே, இல்லறம் சிறக்கும். இல்லையென்றால், “கட்டிய கடனுக்கு” வாழ்க்கையை நகர்த்த வேண்டி வரும்.

சனியென்பவர் “கர்மா” வழிநடப்பவர். சந்திரன் என்பவர், “மனம்” போன போக்கில் வாழ்பவர். கர்மா நிலையானது. சலனப்பட்டு அலைவது மனமாகும். கர்மா நிர்ணயிக்கப்பட்டதை அனுபவித்து தீர்ப்பது. ஆனால், மனம் அப்படியல்ல. காண்பதை எல்லாம் அனுபவிக்க, பின்னே செல்வது.

இதேபோல், செவ்வாய் - சுக்கிரன், புதன் - குரு, சூரியன் - சனி, சந்திரன் - சனி என்று ஒன்றுக்கொன்று எதிர்மறையான கிரகங்களே வாழ்க்கைத் துணையாக வந்து வாய்க்கும். இந்த எதிர்மறைக் கிரகங்கள் அமர்ந்திருக்கும் இடங்களைப் பொறுத்தே வாழ்க்கையின் நிம்மதி பொதிந்திருக்கும்.        

நாம் நிம்மதியைப் பற்றி சிந்திக்கும் போது, மனதைச் சொல்லாமல் இருக்க முடியாது. மனமென்று ஒன்று இருப்பதால்தான் அவன் மனிதனாக இருக்கிறான். அது வெறுமனே கிடந்தால், அவன் ஞானி. கண்ட குப்பைகளையும் மனதுக்குள் அள்ளிப் போட்டிருந்தால், அவன் ரோகி.

இலக்கினத்திற்கு நான்காமிடம் என்பது மனதைக் குறிக்குமிடமாகும். அங்கே, ஜாதகரின் அசையும் சொத்துக்களையும், கையிருப்புப் பணத்தையும் சொல்லும், சொந்த ஊரையும், உறவுகளையும், குறிப்பாக தாயைப் பற்றியும் அறியுமிடமாகும். அதுவே, இலக்கினத்திற்கு ஏழாமிடமான மனைவி ஸ்தானத்திற்கு, நான்காமிடம் என்பது மனைவியின் மனதைச் சொல்லும் இடமாகும்.

உங்களின் (ஆணாகிய)  நான்காமிட அதிபனும், உங்களின் (ஆணாகிய) பத்தாமிட அதிபனும், இலக்கினத்திற்கு உறவாகவும், நட்பு, சம, உச்ச, ஆட்சியதிபர்களின் சாரமும் பெற்று உகந்த இடத்தினில் அமரவேண்டும். இவர்கள் (4+10) ஒன்றுக்கொன்று முரண்பாடுடைய கிரகங்களாக இருந்தால், கணவன், மனைவிக்குள் வேற்றுமை வளர்ந்து பிடித்தமில்லாமல் வாழ்வார்கள்.

உங்களின் (ஆண்) தாயாரைக் குறிக்கும் நான்காமதிபனும், உங்களின் மனைவியைக் குறிக்கும் ஏழாமதிபனும், உங்களின் தொழிலையும், உங்களின் மனைவியின் மனதைக் குறிக்கும் பத்தாமதிபனான மூவரும் உறவாடி நிற்க, மாமியார், மருமகள் பிரச்சனையில்லை. உங்களின் தொழிலும், வினைகளும் சிறப்பாக நடக்கும். அதேபோல், உங்களின் உறவினர்களுக்கும், உங்கள் இல்லத்தரசிக்குமான பாசப்பிணைப்புகளும் அதிகமாக இருக்கும். உங்களின் கையிருப்பை கரைக்காத மனைவியாகவும் வருவாள்.    
தொடரும்.
முத்துப்பிள்ளை. 91501 06069, 87548 73378, 89405 29429


No comments:

Post a Comment